எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

உத்தரவாஹினியாக அதாவது நதிகள் வடக்கு நோக்கிப் பாயும் இடங்கள் எல்லாமே புனிதமாய்க் கருதப் படும். தாமிரபரணி அவ்வாறு உத்தரவாஹினியாகப் பாயும் இடங்கள் பாண தீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்கள் ஆகும். தாமிரபரணி நதி அநந்த காசி, பரம பாவனம், மாலா தாதா, தக்ஷண கங்கை ஆகிய பெயர்களைப் பெற்று இதிஹாசங்களில் சிறப்பாய்ப் போற்றப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் கங்கையின் பாவங்களைப் போக்கும் வல்லமை கொண்டது தாமிரபரணி என்றும் சொல்லப் படுகின்றது.

யம கீதையும், ஹயக்ரீவ துதியும், அகத்திய தோத்திரமும், கங்கா துதி, பிரம்மச்சாரி துதி, வேத வியாச துதி, கசாவதீ ஜபம், விச்வே தேவர்கள் துதி, கெளதம துதி, கபில வாசுதேவ துதி போன்றவைகளில் தாமிரபரணியின் பெருமைகளை உயர்த்திச் சொல்லப் பட்டிருக்கின்றன என அறிகின்றோம். தாமிரபரணி மகாத்மியம் ஓர் பழம்பெரும் ஓலைச் சுவடியில் எழுதப் பட்டிருந்தது. அதில் கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள தாமிர சாகர சங்கம தீர்த்தத்திற்கு வந்ததாய்ச் சொல்லப் பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து பழைய காயல் அருகே தாமிர சாகர சங்கம தீர்த்தம் உள்ளது. இங்கு ஒரு விநாயகர் கோயில் அமைந்துள்ளதாகவும், படகிலேயே இந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்றும், தாமிரபரணியைக் காக்கும் அமைப்பாளர்கள் சொல்கின்றனர். இங்கே சென்று முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய விரும்புவோர் இவர்களைத் தொடர்பு கொண்டால் பயண ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் சொல்கின்றனர்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் தாமிரபரணியை மஹாநதி என வர்ணிக்கப் பட்டுள்ளது. ராமாயணத்தில் தாமிரபரணி பற்றிச் சொல்லப் பட்டிருப்பதின் விளக்கங்கள் கீழே! இது சுக்ரீவன் அனுமன், அங்கதன் போன்றோரை சீதையைத் தேட தென் திசை நோக்கி அனுப்பும்போது அவர்களுக்கு விளக்கப் பட்டது. இதில் இருந்து அன்றைய பாரதத்தின் பூகோளத் தன்மையையும், அதை சுக்ரீவன் நன்கு அறிந்து வைத்திருப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. [4-41-15b, 16a]

"And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles. [4-41-16b, 17a]

She whose water is overlapped with amazing copses of sandalwood trees and islands that River Taamrapani will be drifting for a rendezvous with her much yearned lover, namely the ocean, as with a young woman who will be coursing to have a rendezvous with her yearned lover. [4-41-17b, 18a]

எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் தவளைகளையும், நீர்வாழ் ஜந்துக்களையும் உண்டாக்கினால் தாமிரபரணியோ கடலில் கலந்து மணிகளையும், முத்துக்களையும் படைக்கின்றாள் என நீலகண்ட தீக்ஷிதர் போற்றுகின்றார். இதனால் தாமிரபரணி கடலில் கலக்கும் இடம் ரத்னாகரம் எனப் போற்றப் படுகின்றது. அகத்திய முனிவரும், சங்க முனிவரும் இன்றளவும் தாமிரபரணி நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. சமுத்திரத்தில் பல நதிகள் அடங்கி உள்ளன. ஆனால் தாமிரபரணியோ தனக்குள் அம்பா சமுத்திரம், கோபால சமுத்திரம், நீலகண்ட சமுத்திரம் போன்றவற்றை அடக்கி உள்ளது.

இந்த நதிக்கரையில் தோன்றிய பல பெரியோர்களில் திருவள்ளுவர், ஒளவையார், நம்மாழ்வார், சிவஞான முனிவர், சிவானந்தர், பனம்பாரனார், திரிகூட ராசப்பக் கவிராயர், வீரபாண்டியன், பரிமேல் அழகர், குலசேகர ஆழ்வார், சேனாவரையர் ஆகியோர் மட்டுமின்றி, நமது தேசீயக் கவியான மஹாகவி பாரதியும் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றியவரே. தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மஹாத்மியம் என்ற ஓலைச்சுவடியில் இருந்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தாமிரபரணி அமைப்பு முயன்று வருகின்றது. இந்த மஹாத்மியத்தில் ராமனின் உத்தரவை மீறிய லக்ஷ்மணன் என்ன பிராயச் சித்தம் செய்தான் எனவும், என்ன தண்டனை கிடைத்தது எனவும் சொல்லப் பட்டிருக்கிறதாய்க் கேள்விப் படுகின்றோம்.

1 comment:

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு.

ஆம் வற்றாத ஜீவா நதியாம் தாமிரபரணி. பாபநாசம் செர்வலாரில் தொடங்கி, அம்பை, கல்லிடை, சேரை, நெல்லை, முரப்பநாடு, மனக்கரை, கருங்குளம், ஸ்ரீவை,ஆழ்வார்திருநகரி, பழயகாயல், முக்காணி, ஆத்தூர் தாண்டி புன்னக்காயல் முன்பு கடலில் சங்கமிக்கிறது.

தாமிரபரணி பாயும் பகுதிகள் அனைத்துமே அருமையாக இருக்கும்.

தாமிரபரணி தந்த கொடை தானே பாரதி, வண்ண நிலவன், நெல்லை கண்ணன், வண்ண தாசன் இன்னும் பலர்.