எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 01, 2009

தாமிரபரணிக்கரையிலே சிலநாட்கள்!

நவ திருப்பதிகள் ஒன்பது. பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் அவை அடங்கும். நவ திருப்பதிகள் கீழ்க்கண்டவை:


ஸ்ரீவைகுண்டம்,= வைகுண்டநாதர்
ஆழ்வார்திருநகரி,=ஆதிநாதர்
நாங்குநேரி, வானமாமலை,=தோதாத்ரிநாதர்
திருக்குறுங்குடி,=ஸ்ரீ நின்ற நம்பி
வரகுணமங்கை,(நத்தம்)=விஜயாசனப் பெருமாள்
திருப்புளியங்குடி=காசினிவேந்தன்
(இரட்டைத் திருப்பதி,=ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில், ஸ்ரீஅரவிந்த லோசனன் கோயில்
திருத்தொலைவில்லி மங்கலம்)
பெருங்குளம் =ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில்
தென் திருப்பேரை=மகர நெடுங்குழைக்காதர்

ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம் நாம. ஆனால் நாங்க முதல்லே அங்கே போகலை. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்கென ரயில் நிலையமும் இருக்கின்றது. சாலை வழியாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குப் போக முடியும். தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குப் பல முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடைசியாய்ப் போனது 2007 பெப்ரவரியில். இங்கே உள்ள தீர்த்தம் பிருகு தீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. இது தவிர தாமிரபரணியில் நீராடுவதும் சிறப்பு.

இந்தக் கோயிலில் உள்ள பெருமாளுக்குக் கள்ளர்பிரான் என்ற பெயரே மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. இது தவிரவும், பெருமாளுக்கு வைகுண்ட நாதன் என்ற பெயரும் தாயார் வைகுந்த வல்லி எனவும் அழைக்கப் படுகின்றாள். மற்றோர் தாயார் பூதேவி எனப்படுகின்றாள். இருவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. விமானம் சந்திரவிமானம் என்று சொல்லப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப் பட்டது இந்தக் கோயில். பெருமாள் கிழக்கே பார்த்துக் கொண்டு நின்று கொண்டு அருள் பாலிக்கின்றார். இந்திரனும் ப்ருதுவும் இந்தக் கோயில் பெருமாளை வழிபட்டதாய் ஐதீகம். ஸ்தலவிருக்ஷம் பவளமல்லி.



சோமுகன் என்ற அரக்கன் பிரம்மாவிடமிருந்த வேதங்களையும், பிரம்ம ஞானத்தையும் கவர்ந்து செல்லவே, படைக்கும் திறன் அற்றுப் போனார் பிரம்மா. இறைவனை வணங்கித் தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மசாரியாக மாற்றிய பிரம்மா, பூலோகத்தில் உள்ள அருமையா புண்ணிய ஸ்தலத்தைக் கண்டு வரச் சொல்லி அனுப்பினார். தாமிரபரணிக்கரைக்கு வந்து சேர்ந்த அந்த பிரம்மசாரி, அங்கே ஜயந்தபுரி என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அசுரர்களால் உருவாக்கப் பட்ட பெண்கள் மோகினிகளாய் மாறி அந்த பிரம்மசாரியைக் கவர, அவன் தான் வந்த காரணத்தையும், தன் மஹிமையையும் மறந்திருந்தான்.

சென்றவன் திரும்பிவரக் காணாத பிரம்மா, தன் கைக்கமண்டலத்தைப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணை அம்பாளே நதி உருவெடுத்து ஓடும் தாமிரபரணிக் கரையில் தவம் செய்ய ஏற்றதாய் உள்ள புண்ய ஸ்தலத்தைக் கண்டு வரும்படி அனுப்பி வைக்கின்றார். தாமிரபரணிக்கரைக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு வந்ததும், இதுவே மேன்மையானது என்று தோன்ற பிரம்மாவிடம் இதைத் தெரிவிக்கின்றாள். பிரம்மாவும் அங்கே சென்று தாமிரபரணி கலசத் தீர்த்தத்தில் நீராடிக் கடுந்தவம் புரிந்தார்.

தவத்தால் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க இழந்ததைத் திரும்பப் பெறவேண்டும் என பிரம்மா கேட்டார். அவ்வாறே ஆகட்டும் என அருள் புரிந்தார் காக்கும் கடவுளான விஷ்ணு. பின்னர் பிரம்மா பூவுலகு மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் அர்ச்சாவதாரமாய் இறைவனை அங்கே எழுந்தருளி அருள் பாலிக்குமாறு வேண்ட இறைவனும் அருள் புரிந்தான். ஆனால் பிரம்மனின் வேண்டுகோளின் படி எழுப்பப் பட்ட கோயிலும், இறைவனின் அர்ச்சாவதார மூர்த்தியும் காலப் போக்கில் மறைந்து பூமியில் புதைந்து போய்விட்டது.

பாண்டியர்கள் கொற்கையையும், மணவூரையும் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த நேரம் அது. அரண்மனைத் தொழுவத்தின் பசுக்களை மேய்க்கும் மாட்டிடையர்கள் பசுக்களை ஒரு இடத்தில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு பசு தன் பாலைத் தானாகவே சொரிந்து வந்தது தினமும். இடையர்கள் எவ்வளவோ தடுத்தும் பசு தன் பாலைச் சொரிவது நிற்கவே இல்லை. அங்கே ஒரு பிலத் துவாரம் இருப்பதையும் கண்டனர். இதற்குள் பாண்டியனுக்குச் செய்தி போயிற்று. அரண்மனைப் பசுக்களில் குறிப்பிட்ட பசு மட்டும் பால் தருவது இல்லை என அறிந்தான் மன்னன். பசுவை மேய்ப்பவனைக் கூப்பிட்டு என்னவென விசாரிக்க அவனும் நடந்ததைக் கொஞ்சம் பயத்துடனேயே மன்னனுக்குத் தெரிவித்தான்.

உடனேயே அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருக்கும் எனப் புரிந்து கொண்ட மன்னன் தன் பரிவாரங்களுடனும், அரச குருவுடனும் வந்து அங்கே பூமியைத் தோண்ட மெல்ல, மெல்ல மேலே வந்தார் வைகுண்ட வாசன். அரசனுக்கு மேனி சிலிர்த்தது. பெரியதொரு கோயில் கட்டுவித்து சந்நதியில் பெருமானைப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பால் திருமஞ்சனம் செய்து வைக்குமாறும் நிவந்தங்கள் அளித்துக் கட்டளையிட்டான். இந்தப் பால் திருமஞ்சனம் இன்றளவும் தினந்தோறும் பெருமானுக்குச் சிறப்பாய் நடந்து வருவது விசேஷமாய்க் கூறப் படுகின்றது. பெரும்பாலான விஷ்ணு கோயில்களில் தினமும் இவ்விதம் நடப்பது அரிது. பெருமான் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடையாய்க் கவிந்திருக்க சாலிகிராம மாலையுடனும், கையில் கதையுடனும் காட்சி அளிக்கின்றார். இவர் கள்ளபிரானானது எவ்வாறு? நாளை பார்க்கலாமா?

2 comments:

குப்பன்.யாஹூ said...

many many thanks for an useful post. also later write about Karunkulam perumaal koil.

வல்லிசிம்ஹன் said...

கீதா, எங்க தாத்தா தபால் அலுவலக அதிகாரியாக இருந்த ஊர் ஸ்ரிவைகுண்டம். அப்பா,அவர் சகோதர சகோதரிகள் பள்ளிக்குச் சென்றதும் அங்கே தான்.
மாட்டு வண்டியில் எல்லா தலங்களுக்கும் போய் வருவார்களாம்.

மிகவும் சுவையாகப் போகிறது. அடுத்து எந்தப் பதியோ...