எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Tuesday, October 20, 2009
தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம்! 1.
நவ கைலாயம்: கீழ்க்கண்ட ஒன்பது ஊர்கள் நவ கைலாயங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர நவ சமுத்திரம் என்று சமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப் படும் ஊர்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் போக முடியலை.
பாபநாசம்
சேரன்மாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
ஸ்ரீவைகுண்டம்
தென் திருப்பேரை
ராஜபதி,
சேந்தமங்கலம்
நவ சமுத்திரங்கள்:
அம்பாசமுத்திரம்
வீரா சமுத்திரம்
தளபதி சமுத்திரம்
கோபால சமுத்திரம்
ரத்னாகார சமுத்திரம்(திருச்செந்தூர்)
ரவண சமுத்திரம்
அரங்க சமுத்திரம்
வால சமுத்திரம்
வடமலை சமுத்திரம் (பத்மநேரி)
இந்த நவ கைலாயங்களில் சில கோயில்கள் நவதிருப்பதிகள் இருக்கும் ஊரிலேயே இருக்கின்றன. அதை முன் கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு செல்லவேண்டும். எங்களுக்குத் தெரிஞ்சும், ஓரிரண்டு கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரப் பற்றாக்குறைதான் காரணம். நவ திருப்பதிகளை ஒரே நாளிலேயே முடித்துவிடலாம். அப்போதே அங்கங்கே இருக்கும் நவ கைலாயக்கோயில்களையும் பார்த்திருக்க வேண்டும். முடியலை! மறுநாள் போக நினைச்சுப் போக முடியலை. நவ கைலாயங்கள் தனியாகப் பார்க்கணும்னா இரண்டு நாட்கள் தேவை. நாங்க அன்னிக்கே ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தபடியால் மத்தியானமே திருநெல்வேலி திரும்பவேண்டிய கட்டாயம். ஆகவே செல்ல நினைக்கிறவர்கள் நன்கு தெரிந்து கொண்டு செல்லவேண்டும்.
இப்போ முதலில் வருவது பாபநாசம் பாபநாசநாதர் கோயில் தான். சூரியனுக்கு உரிய பரிஹாரத் தலமாகச் சொல்லப் படுகிறது. தாமிரபரணி மலையில் இருந்து கீழே இறங்கியதும், இந்தக் கோயிலுக்கு எதிரே தான் ஊருக்குள்ளே நுழைகிறாள். மிகவும் அழகான சுற்றுச் சூழ்நிலை. இயற்கையின் அழகு கண்ணைப் பறிக்க எதிரே தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியாகிய நதிகளுக்கெல்லாம் மூத்த தாமிரபரணி சமநிலைக்கு வந்து விட்டாள். அங்கே மதியம் உச்சிக்கால வழிபாட்டின்போது நதியின் மீன்களுக்குக் கூட உணவிடுகின்றனர். இந்த வழிபாடு வரையில் இருந்து நாங்கள் பார்க்கலை என்றாலும் சொன்னார்கள்.
திருநெல்வேலியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் பாபநாசத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து செல்கிறது. என்றாலும் நாங்கள் வாடகைக்காரிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது. அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர். ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, சமப்படுத்த வந்தார் அகத்தியர் பொதிகை மலைக்கு. இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம். மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார். அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார். அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க, ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர். அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.
இங்கே உள்ள ஈசனுக்கு முக்களா நாதர் என்ற பெயரும் உண்டு. மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர். கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார். ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார். அசுர குருவான சுக்ராசாரியாரின் மகன் துவஷ்டாவை ஒரு சமயம் குருவாக ஏற்கவேண்டி வந்தது இந்திரனுக்கு. துவஷ்டாவோ அசுரர்களுக்கே நன்மை செய்யும் வண்ணம் யாகங்கள் செய்தான். இது அறிந்த இந்திரன், துவஷ்டாவைத் தன் குரு என்றும் பாராமல், கொல்ல, பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இந்திரனுக்கு. தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள எல்லா இடங்களுக்கு அலைந்துவிட்டுக் கடைசியாக பாபநாசம் வந்து இங்கே உள்ள இறைவனை வழிபட்டுத் தன் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்கிறது தல வரலாறு.
அம்பாள் பெயர் உலகம்மை. இவள் சந்நிதி முன்பு உரல் ஒன்றும், உலக்கையும் உள்ளது. கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர். அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம். நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது. வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு. நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது. இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.
படங்கள் உதவி: நன்றி கூகிளார்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
எங்க ஊருக்கெல்லாம் போய் வந்திருக்கீங்க....
எங்கள் சிறுமி பருவத்தில் அந்த பாபநாசம்தான் எங்களுக்கு பிக்னிக் ஸ்பாட்....குடும்பத்தோடு போய் கும்மியடித்திருக்கிறோம்
//நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! //
எங்க ஏரியாவுல காசு கேட்டா கை இருக்காது. சீவிடுவோம் சீவி. :p
கவனமா எழுதுங்க, நான் கொத்ஸ் எல்லாம் கவனிச்சுட்டு தான் இருப்போம். :))
எழுத்துப் பிழை இருக்கு. (ஆனந்த ஆநந்த இல்ல))
@Goma மேடம், நீங்களும் நம்மூரா, நல்லது. வாங்க ஜோதில ஐக்கியமாகுங்க. :)
(திருசெந்தூர் தூத்துகுடி மாவட்டம், அங்க எதுக்கெடுத்தாலும் காசு தான்)
கோமா, இப்போப் போகலை, ஒரு வருஷம் முன்னாலே போனது, இந்த அம்பி தாமிரபரணி மஹாத்மியம் புத்தகம் அனுப்பறேன், அனுப்பறேன்னு செலவுக்குப் பயந்து அனுப்பவே இல்லையா! அதான் லேட் பதிவுக்கு! வந்ததுக்கு தாங்கீஸ்!!!!
அ(வ)ம்பி, வாங்க, ஏது, ஏது, அதிசயமா இந்தப்பதிவுக்கு வந்துட்டீங்க?
அப்புறமா அது ஆ"ந"ந்தம் தான் ஆ"ன"ந்தம் இல்லை, எங்கே? தம்பி, துபாய் போய்ட்டாரா? அவர் கிட்டே கேளுங்க, சொல்லுவார், ஆநந்தமா, ஆனந்தமானு! :P:P:P:P:P
வஸ்த்ரகலா எங்கே??
கோமா, ஜோதியிலே ஐக்கியம் ஆகணுமா??? என்ன ஒரு சொந்த ஊர் அபிமானம்???
ஹையா எங்கூரு ..எனக்கு விக்கிரமசிங்கபுரம்...சிவன் கோவிலுக்கு அடிக்கடி போறது உண்டு நண்பர்களுடன் ..எப்ப போனாலும் என் நண்பன் ஒருவன் அங்கே இருப்பான் ..பேரு கணேசன் கோவிலில் வேலை செய்கிறான் ...பதிவருக்கு நன்றிகள்.
வாங்க ஆண்ட்ரூ, வலை உலகில் யாரைக் கேட்டாலும் தின்னெலினு தான் சொல்ராஹ! :))))))))
கீதாம்மா,
பாபனாசம் கோவிலைப் பத்தி கேள்விபட்டிருந்தாலும் இது வரை போனதில்லை. இந்தத் தலத்தைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
Post a Comment