எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 13, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - இலஞ்சி முருகன்.

திருக்குற்றாலத்தில் மெயின் அருவி எனப்படும் கூட்டம் மிகுந்த அருவியையும், மேலே சென்று அங்கே உள்ள அருவியையும் பார்த்துவிட்டோம். இன்னும் மேலேயும் செல்லவேண்டும்தான். ஆனால் மதியம் இரண்டு மணி அப்போவே ஆகி இருந்தது. இன்னும் சித்திர சபை வேறே போகவில்லை. குற்றாலநாதர் கோயிலும் திறக்கவில்லை. இருந்து கோயில் திறந்ததும் தான் தரிசனம் செய்து கொண்டோம். கோயிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசுத்தம் செய்து வைத்திருந்தார்கள். சித்திர சபை போகும் வழியும் கரடு, முரடாக, மலைப்பாதை தானே? முன் யோசனை இல்லாமல் செருப்பு அணியாமல் சென்றுவிட்டோம். போகப் போகப் போயிட்டே இருக்கு. அங்கேயும் சித்திரநடராஜரைப் பார்த்து மனம் நொந்து கொண்டு திரும்பினோம். கீழே இறங்கலாமா எனக் கேட்ட வண்டியோட்டியிடம் இலஞ்சிக்குப் போகச் சொன்னோம். இலஞ்சிக்குக் கூட்டிச் சென்றார். அருமையான சுகமான மலைப்பாதை. மிக மிக அழகான சாலை. இயற்கையின் வண்ண விசித்திரங்களோடு, பக்ஷிகளின் கூச்சலும் சேர்ந்து அந்த மாலை நேரத்தையே அழகானதாய் மாற்றிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சாலை. இருபுறமும் அடர்ந்த மரங்கள். மர நிழலைப் பார்த்தாலே ஒரு துணியை விரித்துப் படுத்துடலாமானு எண்ணம். அவ்வளவு தண்மை.

கோயிலில் தீபாராதனை நடக்கும் சமயம். மாலை வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலியான முருகனைக் கண்ணாரப் பார்க்க முடிந்தது. அநேகமாய் எல்லாக் கோயில்களிலுமே நெரிசல் இல்லாமையால் அருமையான தரிசனம். இந்த இலஞ்சிக் கோயிலையும், ஜாத்திரையையும் பற்றிக் கலைமகளில் பள்ளி நாட்களிலேயே படித்திருக்கிறேன். எல்லார்வி என்னும் எழுத்தாளர் எழுதுவார். இலஞ்சியைப் பற்றி அவர் வர்ணித்திருந்த அழகு இப்போது இருக்காதுதான். என்றாலும் இன்னும் ஒன்றும் மோசம் ஆகவில்லை. கோயிலும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. எதிரே மலைகள், மலைகள், பள்ளத் தாக்குகள். அங்கே நின்று படம் எடுக்கணும்னு தான் ஆசை. ஆனால் எடுக்க விடவில்லை.


ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப்படுகிறது இலஞ்சி. இங்கு ஓடும் நதியே தீர்த்தமும் ஆகும். நதியின் பெயர் சித்ராநதி ஆகும். மகிழமரத்தைத் தலவிருக்ஷமாய்க் கொண்ட இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே பெருமாளே காட்சி கொடுத்ததையும், முருகனின் ஆலோசனையின் பெயரில் வைணவச் சின்னங்கள் தரித்துச் சென்றதையும் குற்றாலம் பற்றிய பதிவில் பார்த்தோம். குற்றாலத்தில் தரிசனம் கிடைக்காத அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார்.

இங்குள்ள குமரன் இளமை பொருந்தியவனாகச் சொல்கின்றனர். கட்டிளம் காளையாகக் காட்சி அளிக்கும் தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம் சொல்கின்றனர். திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே. யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.

இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும் அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால் செல்லவில்லை. தென்காசி போயிட்டுத் திருநெல்வேலி திரும்பவேண்டும். அங்கே இன்னும் நெல்லையப்பரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆகையால் நேரமும் கிடையாது. மறுநாள் விட்டுப் போன கோயில்களைப் பார்த்துக் கொண்டு ஊர் திரும்பும் திட்டம்.

வண்டியைத் தென் காசிக்கு விடச் சொன்னோம். தென்காசி திருநெல்வேலியில் இருந்து அறுபது அல்லது எழுபது கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர்கள், (பழைய???) ஆண்டு வந்தபோது கட்டிய கோயில் இது. முதலில் இந்தக் கோயிலை எழுப்பும் முன்னர் இங்கே செண்பகவனமாக இருந்திருக்கிறது. குலசேகரபாண்டியன் என்னும் மன்னன் காலத்தில் முதன்முதல் இந்தக் கோயில் கட்டப் பட்டுள்ளது. எந்தக் குலசேகரபாண்டியன் எனச் சரியாய்த் தெரியவில்லை. பெரிய அளவில் கோயில் இல்லாமல் செண்பக வனத்தில் லிங்கத்தை அமைத்து மன்னன் வழிபட்டிருக்கிறான். மக்கட்பேறு இல்லாத மன்னனுக்கு இங்கே இருந்த ஒரு மகிழமரத்தடியில் குழந்தை ஒன்று கிடைத்தது. பெண் குழந்தை. குழல்வாய்மொழி எனப் பெயரிட்டுத் தன் மகளாகவே அந்தக் குழந்தையை வளர்த்து வந்த மன்னன், நாளாவட்டத்தில் குழந்தையாகத் தன்னிடம் வளருவது சாக்ஷாத் அம்பிகையே எனத் தெரிந்து கொள்கிறான். ஈசனுக்கே வாழ்க்கைப் படுவேன் என அந்தப் பெண் தவமிருந்து சிவ வழிபாடுகள் செய்து ஈசனை மணாளனாக அடைந்தாள். மன்னனுக்கு உலகை ஆளும் அம்மையே தனக்குப் பெண்ணாக வந்திருப்பதை எண்ணி எண்ணி வியப்பு அடங்கவில்லை. உலகம்மா, நீயே எனக்கு மகளாய் வந்தனையோ” என உணர்ச்சிப் பெருக்கீட்டில் மன்னன் மனம் உருகினான். நாளாவட்டத்தில் உலகம்மன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்களுக்கு உலகம்மன் கோயில் என்றால் தான் புரியும். கோயிலின் மற்ற வரலாறுகள் நாளை.

1 comment:

குப்பன்.யாஹூ said...

thanks for sharing lot of useful information. I appreciate and salute your hard work and interest.

Please save all your posts and please release it as a book.