
முதல் நாள் ராமசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகப் போனோம். அங்கே சத்திரத்தில் இருந்து கிட்டே பெருமாள் கோயில் இருந்ததால் அங்கேயும் சென்றோம். ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கும் கோயிலே என்றாலும் கோயில்கள் பற்றி எழுத ஆரம்பிச்ச இத்தனை நாட்களில் இப்போத் தான் போகிறேன். கோயில் ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் பழமையானது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஈடாக இவரைச் சொல்லுவார்கள். இவருக்கும் வெங்கடாசலபதி சுப்ரபாதம் போல் தனியாக ஒப்பிலியப்பன் சுப்ரபாதம் உண்டு. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கின்றனர்.
இதன் பழைய பெயர் திருவிண்ணகரம் ஆகும். இந்தக் கோயிலுக்கு அருகேயே திருநாகேஸ்வரம், நாகநாத ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. வைகானஸ முறைப்படி வழிபாடுகள் நடக்கும் இந்தக் கோயிலின் நிவேதனத்தில் உப்புச் சேர்ப்பதில்லை என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணமும் உண்டு. பின் வருமாறு:
மார்க்கண்டேய ரிஷி மகள் வேண்டித் தவம் இருக்கும் வேளையில் பூதேவியோ ஸ்ரீதேவியை மட்டும் மார்பில் தாங்கும் விஷ்ணு நம்மையும் தாங்க மாட்டாரா என எண்ணினாள். அவள் எண்ணம் புரிந்த விஷ்ணு அவளைத் துளசிச் செடியின் அருகே திருத்துழாய் என்னும் திருநாமத்துடன் கூடிய பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வருமாறும், தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வோம் எனவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி துளசிச்செடிக்கு அருகே ஸ்ரீயின் அம்சமான பூதேவி குழந்தை வடிவில் கிடக்க, மார்க்கண்டேயர் குழந்தையைத் திருத்துழாய், துளசி எனப் பெயரிட்டு அருமையோடும், பெருமையோடும் வளர்த்துவருகிறார்.
உரிய வயது வந்தது. பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும். அப்போது ஓர் வயதான அந்தணர் அங்கே வந்தார். அவர் மார்க்கண்டேய ரிஷியின் பெண்ணைத் தாம் மணக்க விரும்புவதாய்க் கூற, வெகுண்ட ரிஷியானவர், "என் மகள் மிகச் சிறியவள், அவளுக்கு சாப்பாட்டில் உப்புச் சேர்க்கும் அளவு கூடத் தெரியாது. உப்பே சேர்க்காமல் அவள் சமைக்கும் சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன், உங்களால் முடியாது" எனக் கூற, முதியவர் விடவில்லை.
முதியவராக வந்த பெருமாள் கேட்கவில்லை. அடம் பிடிக்கிறார். உங்கள் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று. பெண்ணிடம் கேட்க, அனைத்தும் அறிந்த அவளோ, முதியவரை நான் எங்கனம் திருமணம் செய்வது என மறுக்கிறாள். திகைத்த மார்க்கண்டேயர், தவத்தில் ஆழ, அவருக்கு வந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளே எனப் புரிகிறது. பின்னர் திருமணம் கோலாகலமாக நடக்க, மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கி இருக்கும்படி மாமனார் வேண்ட பெருமாளும் சம்மதித்துத் தங்குகிறார். துளசிச் செடி மாலையாக மாறி நிரந்தரமாய்ப் பெருமாளின் மார்பை அலங்கரிக்கிறது. இவ்விதம் துளசிக்கும் பெருமாள் முக்கியத்துவம் கொடுத்தார். அப்போது முதல் விஷ்ணு வழிபாட்டில் துளசிக்கு நிரந்தரமான இடமும் ஏற்பட்டது. தன் பெண்ணுக்கு உப்பிட்டுச் சமைக்கத் தெரியாது என முனிவர் கூறியதற்கு ஏற்ப பெருமாளும் தனக்கு உப்புடன் கூடிய உணவு வேண்டாம் என்று சொன்னதாகவும், அதனாலேயே இந்தக் கோயிலில் இன்றளவும் பெருமாளுக்கு உப்பில்லா நிவேதனமே செய்யப் படுகிறது.
இங்கே பெருமாள் ஐந்து கோலங்களில் காட்சி கொடுத்தருளியிருக்கிறார். மூலவர் திருவிண்ணகரப்பன் என்றும், உற்சவர் பொன்னப்பன் என்ற பெயரிலும், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என்று பிராகார சந்நிதிகளிலும் பெருமாள் காட்சி கொடுத்ததாகச் சொல்கின்றனர். இவர்களில் முத்தப்பன் சந்நிதி காலப்போக்கில் மறைந்துவிட்டது என்கின்றனர். மூலவரான திருவிண்ணகரப்பன் பாதம் நோக்கித் தம் வலக்கையைக் காட்டிய வண்ணம் அருள் பாலிக்கிறார். அந்த வலக்கையில் "மாம் ஏகம் சரணம் விரஜ" என எழுதப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.( எனக்குக் கண்ணாடி போட்டாலே எழுத்துத் தெரியாது, இது சுத்தமாய்த் தெரியலை, சொல்லிக் கேள்வி) அதாவது ஆண்டவனைச் சரணடைபவர்களை நான் காப்பேன் என்று பொருள்படும் வண்ணம், "என்னைச் சரண் என அடைபவர்களைக் காப்பேன்" என எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். நம்மாழ்வாரே இவரை யாருக்கும் நிகரில்லா தன்னிகரில்லா, ஒப்பில்லா அப்பன் என அழைத்தவர். அது முதலே இவர் ஒப்பில் அப்பன் என அழைக்கப் பட்டு ஒப்பிலியப்பனாகி இந்தக் கோயில் நிவேதனங்களின் காரணமாக உப்பிலியப்பன் என்ற பெயருக்கு மாறிவிட்டிருக்கிறார்.
அஹோராத்ர புஷ்கரணி என்னும் இந்தக் கோயில் திருக்குளத்தில் பகல், இரவு எந்நேரமானாலும் ஸ்நாநம் செய்யலாம் என்பதும் மரபு. அந்தணன் ஒருவனுக்கு மஹாவிஷ்ணு இந்தப் புஷ்கரணியில் நீராடியதும் பாவம் போக்கியது நள்ளிரவு நேரத்தில் என்றும், அது முதல் இந்தப்புஷ்கரணியில் நீராடுவதற்கு நேரமோ, காலமோ இல்லை என்றும் சொல்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலமாகையால் இங்கேயும் சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம் போன்றவை செய்து கொள்ளுவது சிறப்பாகக் கருதப் படுகிறது. இந்தக் கோயில் பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவமும் பண்ணி வைப்பதாய் பக்தர்கள் பிரார்த்தித்து நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் ஒரு கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது. கூட்டமான கூட்டம். ஆனால் சந்நிதியில் தரிசனம் நன்றாகப் பண்ண முடிந்தது. படங்கள் எடுக்க விடவில்லை. வெளியே வெறும் கோபுரத்தை மட்டும்தான் எடுக்கணும்னு அதுவும் எடுக்கவில்லை. :( அநேகமாய் அறநிலையத் துறையின் முன் அநுமதி இருந்தால் மட்டுமே வெளிப்பிரஹாரங்களில் படம் எடுக்க முடியும் என்றார்கள். இனிமேல் முன் கூட்டிக் கேட்டுப் பார்க்கணும்.