எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 13, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

அப்பா சம்ஹாரத்திற்குப் பயணப்படும்போது பிள்ளையை வணங்கிச் சொல்லவில்லையாம். அதனால் தேர் அச்சு முறிந்துவிட்ட்தாய்க் கூறுவார்கள். விநாயரை வணங்காமல் அவரிடம் உத்தரவு ஈசன் சம்ஹாரத்திற்குக் கிளம்பித் தேரில் காலை வைத்ததுமே அச்சு முறிந்த்தாம். அந்த இடம் சென்னைக்கு அருகே திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள அச்சிறுபாக்கம் என்னும் ஊர் எனச் சொல்வார்கள். அங்கே உள்ள தலபுராணமும் அவ்வாறே கூறுகிறது. அங்கே உள்ள விநாயகருக்கும் அச்சிறுத்த விநாயகர் என்ற பெயர் எனவும், ஈசன் அங்கே உள்ள மலைமீது லிங்கமாய் எழுந்தருளியிருப்பதாயும் கூறுகின்றனர். இங்கே திரிநேத்ரதாரி என்ற பெயரிலேயே ஒரு முனிவர் வந்து தவம் செய்து ஈசனின் திரிபுர சம்ஹாரக் கோலத்தைக் கண்டு களித்ததாயும் வரலாறு சொல்கின்றது. இந்த்த் தலம் மிகப் பழைய தலம் என்பதற்குத் திருஞானசம்பந்தரின் பாடல் ஒன்றே போதும். பின்னர் விநாயகரை வணங்கிவிட்டு ஈசன் கிளம்பிச் சென்று திரிபுர சம்ஹாரத்தை முடித்ததாய்ச் சொல்வார்கள்.

திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படும் இடங்கள் வாரணாசி மற்றும் திரியம்பகேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஊரான திரியம்பகம் எனப் பரவலாகக் கருதப் படுகின்றது. ஆனால் “தென்னாடுடையான்” என நாம் போற்றும் ஈசன் இங்கே தமிழகத்தில் திருவதிகை வீரட்டானத்தில் நிகழ்த்தினார் எனத் திருவதிகைத் தலபுராணம் கூறுகின்றது. அட்ட வீரட்டானங்களில் ஒன்று திருவதிகை வீரட்டானம். இங்கே வைகாசி மாதத்தில் திரிபுரசம்ஹார வைபவம் நடைபெறுவதாயும் கேள்விப் படுகிறோம்.

ஈசனுக்குச் சரமாய் இருந்த மஹாவிஷ்ணு இங்கே வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு அருகே அதிஉக்ர நரசிம்மராக சரநாராயணப்பெருமாள் என்ற பெயரிலே காட்சி கொடுப்பதாயும் சொல்கின்றனர். திரிபுரம் எரிக்க ஈசன் கை அம்பின் சரமாய்ச் செயல்பட்ட களைப்பு தீர அங்கே அதி உக்ர நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி கொடுப்பதாயும், வேறு எங்கேயும் நரசிம்மரை சயன கோலத்தில் பார்க்க முடியாது என்றும் கூறுகின்றனர். திரிபுர சம்ஹாரத்திற்குப் பின்னர் ஈசன் ஆடிய ஆட்டத்திற்குப் பாண்டரங்கம் எனவும் கொடுகொட்டி எனவும் கூறப்படுகின்றது. திரிபுர சம்ஹாரக் கோலம் தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாய்க் காணமுடியும்.

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
திருவதிகை வீரவிட்டானம் எந்த ஊர் பக்கம் இருக்கிறது.

Geetha Sambasivam said...

வாங்க ராம்ஜி யாஹூ, கடலூர் மாவட்டத்திலே தான் திருவதிகை வீரட்டானம் உள்ளது. கடலூர் நகரில் இருந்து மிக அருகேனு நினைக்கிறேன்.

Jayashree said...

சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்
புரமொருமூன்றெரித்து அமரர்க்குமறிவியந்து
அரனயனென உலகழித்தமைத்துளனே !
திருவாய்மொழி 8. இப்பத்தான் படித்தேன்:))

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

திருவதிகை - பண்ருட்டிக்கு மிக அருகில் இருக்கின்றது. அருமையான ஸ்தலம்.
அட்ட வீரட்டான தலங்களுக்கான பாடல்.
(வீரட்டானம் = வீரம் + ஸ்தானம்,
மூலம் + ஸ்தானம் = மூலஸ்தானம் போல)
பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே.

திருக்கண்டியூர் - பிரமன் தலைகளில் ஒன்றை அறுத்தது. திருக்கோவலூர் - அந்தகாசுரனைக் கொன்றது.
திருவதிகை - திரிபுரத்தை எரித்தது,
திருப்பறியலூர் - தக்கன் தலையைக் கொய்தது.
திருவிற்குடி - சலந்தராசுரனைக் கொன்றது.
வழுவூர் - யானையை உரித்தது.
திருக்குறுக்கை - காமனை எரித்தது.
திருக்கடவூர் - யமனை உதைத்தருளியது.

aandon ganesh said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.