எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 28, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

இறைவனை வழிபட்டுத் தவங்கள் பல புரிந்து பெற்ற வரங்களை உலக நன்மைக்காக அன்றித் தன் தனிப்பட்ட நலத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் திரிபுராசுரர்களோ தங்கள் மிதமிஞ்சிய ஆணவத்தினால், தங்களை மிஞ்சி எவரும் இல்லை என நினைத்தனர். அதற்கு எதிராக வந்த அனைவரையும் அழித்தனர். தங்களுக்குள்ளே இருந்த அன்பு, அறிவு, ஆற்றல் மூன்றையும் நல்வழியில் பயன்படுத்தாது ஆணவம், கன்மம், மாயை போன்றவற்றின் துணையோடு தீயவழியில் சென்றனர். அவர்களின் அந்த ஆணவம்,கன்மம், மாயை போன்றவற்றை அழிப்பதே திரிபுர சம்ஹாரத்தின் தத்துவம். இன்னும் விளக்கமாய்க் கூறுவதென்றால் நம்முடைய அறிவையும், ஆற்றலையும், அதனால் விளையும் அன்பென்னும் அரிய இன்பத்தையும் ஆணவமும், கன்மமும், மாயையும் முப்பெரும் கோட்டைகளாகச் சூழ்ந்து கொண்டு மறைக்கிறது. இந்த ஆணவத்தினால் நம்முள்ளே ஊறும் அன்பு ஊற்றை, அதன் பக்திப்பெருக்கை உணர முடிவதில்லை நம்மால். அப்படி உணர்ந்த உயிர்கள் பெறும் தன்னிலையை உணர்ந்த அக்கணமே ஈசன் அவர்களின் முப்பெரும் மலங்களையும் சுட்டெரிக்கிறான். அவர்களை அன்பு மயமாக்கித் தன் வயப் படுத்திக்கொள்கிறான். இந்த அரும்பெரும் தத்துவமே திரிபுர சம்ஹாரத்தின் மூலம் சொல்லப் படுகிறது.

முப்புரங்களையும் ஈசன் எரித்து மூன்று சகோதரர்களையும் அழித்த பின்னும் மூவரின் ஆன்மாக்களும் விடாமல் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தன என்றும், அவர்களின் இந்த இடைவிடாத சிவ வழிபாட்டின் காரணமாயும், அவர்களுக்கு முக்தி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதைக் கருதியும் ஈசன் தாரகனையும், வித்யுன்மாலியையும் துவாரபாலகர்கள் ஆக்கியதாயும், கமலாட்சனை, ஈசனின் வாத்தியம் ஆன “குடமுழா” எனப்படும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் பேறு கொடுத்துக் கடைத்தேற்றியதாயும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது திருப்புன்கூர் தேவாரத்தில் கூறி இருப்பதாயும் தெரிய வருகிறது.

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே பாடல் எண் 8

காவலுக்கு அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக்கொண்டு, அன்பைத் தனது ஆந்ந்த தாண்டவத்திற்கு இசைக்கும் பேற்றையும் அருளிச் செய்தார் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுகிறார். இரண்டாம் தந்திரம் பாடல் எண் 5, பதிவலியில் வீரட்டம் எட்டு என்னும் தலைப்பின் கீழ் வரும் பாடல் கீழே.

அப்பணி செஞ்சடை ஆகி புராதனன்
முப்புரம் செற்றன்ன என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே!


மாணிக்கவாசகப் பெருமான் தனது ஞாந வெற்றித் தொகுப்பில் திருவுந்தியாரின் முதல் பாடலில்,
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா(று) உந்தீ பற.”
என்கிறார்.

மேலும் அம்பு இரண்டு, மூன்றெல்லாம் இல்லை. ஒரே ஒரு அம்புதான். சாமானிய அம்பா அது? சாட்சாத் மஹாவிஷ்ணுவாச்சே? அதிஉக்ர நரசிம்மக் கோலத்தில் அன்றோ உள்ளார்? அந்த ஒரு அம்பிலேயே முப்புரங்களும் அழிந்தன.

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.”

அது மட்டுமா? தேவர்கள் அமைத்துத் தந்த தேரில் ஈசன் திருவடியை வைத்ததுமே தேரின் அச்சு முறிந்ததாமே? இது என்ன புதுக்கதை? நாளை பார்ப்போமா? அதற்கான பாடல் இதோ!
“தச்சு விடுத்தலும் தாம் அடி இட்டலும்
அச்சு முறிந்ததென்(று) உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற.”

7 comments:

singam said...

nanri madem

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

நமச் சிவாயா வாழ்க

Jayashree said...

ஸ்ரீ சைலம் பக்கத்துல த்ருபுராந்தகர் கோவில் 8 சென்சுரில கட்டினது இருக்கு. இது சைலேந்திரரை பாக்க போக வழி விடும் நாலு தலை வாசல்கள் ல கிழக்கு வாசல்னு சமீபத்ல கேள்விப்பட்டேன். எத்தனையோ தடவை ஸ்ரீ சைலம் போனபோதும் இங்க போனதில்லை. இங்க போகாம அந்த ட்ரிப் COMPLETE இல்லைனு தெலுங்கு பக்தர் சொன்னார் . விவரம் தெரியல்லை. அங்கேந்து ஒரு மறைவு பாதைல ஸ்ரீசைலம் 35/36 KM தானாம். கார்ல 120KM . எப்படினு தெரியல்லை. ஒருவேளை மலை இறங்கற பாதையோனு அனுமானம்.

Jayashree said...

ஆமாம்! ஏன் கண்ணீர் கதை அப்பிடியே இருக்கு பயணங்கள்ல?

கீதா சாம்பசிவம் said...

@சிங்கம், நன்றிங்க.

@ராம்ஜி யாஹூ நன்றி

கீதா சாம்பசிவம் said...

வாங்க ஜெயஸ்ரீ, ரொம்பநாளாச்சு இந்தப் பக்கம் வந்து?? :))))))))

ஸ்ரீசைலம் இன்னும் போனதில்லை. ஆந்திராவிலேயே சிகந்திராபாத்தில் இருந்தப்போ அங்கே உள்ளூரிலேயே சில இடங்கள் பார்த்தது தான். இந்த க்ஷேத்திராடனம் எல்லாம் இன்னும் ஆந்திராவில் போகவில்லை! திரிபுராந்தகர் கோயில் பத்தி என் மன்னி சொன்னாங்க! அவங்க இப்போத் தான் ஸ்ரீசைலம் போயிட்டு வந்தாங்க. நன்றி உங்கள் தகவலுக்கும்.

கீதா சாம்பசிவம் said...

@ஜெயஸ்ரீ, கண்ணீர்க்கதை எழுதி வைச்சதை அப்லோட் செய்யமுடியலை. இணையத்துக்கு வந்தால் வேறே சில தட்டச்சு வேலைகள், வேறே சிலருக்கு அனுப்பவேண்டியவைனு அதிலேயே நேரம் போயிடுது. இருக்கும் நேரம் கொஞ்சம் தானே! ம்ம்ம்ம்??? இன்னும் நேரத்தைச் சரியாகச் செலவு செய்யணும்னு தான் பார்க்கிறேன். :)))))))))))))))))