எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!


திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..

இந்த அர்த்த நாரீசுவரர் தோற்றம் இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது. திருக்கைலை மலையில் ஐயனும் அன்னையும் அமர்ந்திருக்கையில் சிவனடியார்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றனர். ரிஷிகள் முனிவர்கள், தேவாதிதேவர்கள் வந்து வணங்குகின்றனர். அவர்களில் ஒருவர் பிருங்கி முனிவர். அந்த பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஐயனை மட்டுமே வணங்குவார். அன்னையை வணங்க மாட்டார். ஐயனும், அன்னையும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு ஈயின் உருவெடுத்துக்கொண்டு சென்று ஐயனை மட்டுமே வலம் வருவார். அன்னைக்கு இது கொஞ்சம் உறுத்தலாய் இருந்த்து. அவரிடம் தன்னையும் வணங்கச் சொல்ல, அவரோ மறுத்தார். உடனேயே அவர் உடலின் சக்தியையெல்லாம் நீக்கினாள் அன்னை. நிற்கக் கூட முடியாமல் உடலின் சக்தி அனைத்தும் போய் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி முனிவர். அவருக்கு நிற்க ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் ஐயன். அப்படியும் பிடிவாதமாய் அவர் இருக்கவே அன்னை ஐயனை வேண்டிப் பிரார்த்திக்க உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாய்க் கொண்டாடப் படும். பதினேழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் கொடியேற்றத்தோடு முதல் திருவிழா ஆரம்பம் ஆகிறது. முதல் மூன்று நாட்கள் விநாயகர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்காகக் கொண்டாடப் படுகின்றன. காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனத்தில் ஈசன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் மலைமேல் மலை தீபம் ஏற்றும் முன்னர் பரணி தீபம் போடப் படும். உலகத்து மக்கள் அனைவரும் நன்கு சீரோடும், சிறப்போடும் வாழப் பிரார்த்தித்துக்கொண்டு ஏற்றப் படும். அன்று மாலையே மஹா தீபம் ஏற்றப்படும். தீப தரிசன மண்டபத்தில் மக்கள் கூட்டம் குவிந்திருக்கப் பஞ்சமூர்த்திகளும் காத்திருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீசுவரர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெளியே வந்து ஆடலோடு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காட்சி தர அந்தக் கணம் பஞ்சமூர்த்திகளுக்கு தீப ஆராதனை எடுக்கப் பட்டு மலை உச்சியில் மஹாதீபமும் ஏற்றப்படும். அனைவரும் அண்ணாமலைக்கு அரோஹரா என்னும் முழக்கம் விண்ணைத் தொடும்.

தொடரும்

7 comments:

சுவாமிநாதன் said...

அரோஹரா! என்ற வார்த்தை முருகனுக்கு தான் உகந்தது என்று இதுவரை நினைத்தேன், அரோஹரா! என்று சிவனுக்கும் சொல்லலாமா - விளக்கம் கூறவும்

சுவாமிநாதன் said...

அரோஹரா! என்ற வார்த்தை முருகனுக்கு தான் உகந்தது என்று இதுவரை நினைத்தேன், அரோஹரா! என்று சிவனுக்கும் சொல்லலாமா - விளக்கம் கூறவும்

Geetha Sambasivam said...

ஹரன்/அரன் என்ற சொல்லே ஈசனுக்கு உரியது ஐயா, அர, அர, அல்லது ஹர, ஹர என்பதே அரோஹரா என மாறிற்று. ஹரன் என்றால் ஈசனையே குறிக்கும். ஹரனின் மைந்தன் ஆன குமாரன் அவனுடைய பூரண அம்சம் என்பதோடு நம் உடலின் ஆறு ஆதாரங்களிலேயும் சிவபஞ்சாக்ஷரத்தை நிறுத்தித் தியானித்தால் கந்தன் தோன்றுவான். அதுவே சஹஸ்ராரம், சிவசக்தி ஐக்கியம்/ நாதமும், விந்துவும் சேர்ந்து பிறந்த கலை என்றெல்லாம் யோகிகளும், ஞாநிகளும் கூறுவார்கள்/

Geetha Sambasivam said...

முதல் வரவுக்கு நன்றி, உங்கள் பதிவைப் பார்த்தேன், என்னைச் சோதிக்கவே கேட்டிருக்கிறீர்களோ எனத் தோன்றிப் பின்னர் தெளிந்தேன். நன்றி.

சுவாமிநாதன் said...

தங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மிக நன்றி

சுவாமிநாதன் said...

அம்மா எனக்கு உங்களை சோதிக்கும் அளவுக்கும் எனக்கு ஞானம் கிடையாது. உண்மையிலே எனக்கு தெரியாது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

@Swaminathan,

என்னைச் சோதிக்கவே கேட்டிருக்கிறீர்களோ எனத் தோன்றிப் பின்னர் தெளிந்தேன். நன்றி.//

is it cleared now?? :D