எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 04, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா, திருக்கார்த்திகை தீபம் தொடர்ச்சி

 
Posted by Picasa
சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.

திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:

கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.

கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,

"தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.

சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(

No comments: