எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 25, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!

அம்பத்தூரை விட்டுக் கிளம்பியதும், காஞ்சீபுரத்தில் காலை உணவு சாப்பிட்டு விட்டு நாங்கள் முதலில் சென்றது தென்னாங்கூர் தான். வழியிலே பல சமணக் கோயில்கள் கண்களில் பட்டன. ஆனால் இறங்கிப் பார்க்கும்படியாகத் தனியாகச் செல்லவில்லை. சுற்றுலாக் குழுவோடு சென்றோம். திருவண்ணாமலை குறித்து இன்னமும் நிறையவே எழுத இருக்கிறது. ஆனாலும் நாங்கள் உண்ணாமுலை அம்மனைத் தரிசித்த போதே மாலை ஆறே முக்கால் ஆகிவிட்டபடியால் எங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாப்பிட்டுவிட்டு ஏழரை மணிக்குள்ளாகக் கிளம்பினால் தான் அம்பத்தூருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் போய்ச் சேருவோம் என்று கூறிவிட்டார். ஆகவே பார்த்த வரையிலும் போதும் என்று கிளம்பவேண்டியவர்களாகிவிட்டோம். அந்தப் பயணத்தில்தான் மேற்கண்ட படி நாங்கள் தென்னாங்கூருக்கு முதலில் போனோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பாண்டுரங்கன் கோயில் உள்ளது என்றும் விட்டலாபுரம் என்ற பெயரிலேயே இருப்பதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. ஆனால் இந்தக் கோயில் சமீப காலங்களில் எழுப்ப பட்டுள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது.

ஞாநாநந்தரின் பிரதம சீடரான ஸ்ரீஹரிதாஸ்கிரி அவர்களால் கட்டப் பட்டது இந்தக் கோயில். நுழைவாயில் நம் தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் சின்ன கோபுரம் தான். விட்டலன் இருக்கும் மூலஸ்தானத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் கருவறை விமானமோ நல்ல உயரமாய்க் காட்சி அளிக்கிறது. அசைப்பில் பூரி ஜெகந்நாதர் கோயில் கோபுரம் போன்ற அமைப்பு. பூரியை இன்னும் பார்க்கவில்லை. என்றாலும் கோபுரத்தைப் படங்களில் கண்டது. ஸ்ரீஞானாநந்தர்ஜ்யோதிர்மடத்தில் இருந்து காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்ததாயும் பண்டரிபுரம் வந்த சமயம் ஞான சித்தி கிடைத்தது எனவும் கேள்விப் படுகிறோம். அவருடன் கதிர்காம ஸ்வாமிகளும் சென்றதாயும் இலங்கை கதிர்காமத்துக்கே இருவரும் சென்று தரிசித்து சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகளும், திருக்கோயிலூரில் ஞானாநந்தரும் ஆசிரமம் அமைத்துக்கொண்டதாயும் கூறுகின்றன. ஞானாநந்தருடைய முக்கிய சீடர் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள். ஞானாநந்தரிடம் தீக்ஷை பெற்றுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பரப்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சமயம் அவர் மஹாராஷ்டிரத்தில் பயணம் செய்தபோது மங்கள்வாடி என்னும் கிராமத்தில் இரவு தங்கி இருக்கையில் கனவில் குரு ஞானாநந்தர் தோன்றிப் பண்டரிபுரம் செல்லப் பணிக்கிறார். அப்படியே பண்டரிபுரம் சென்ற ஹரிதாஸ்கிரியிடம் அங்கிருந்த அர்ச்சகர், முதல்நாள் கனவில் பாண்டுரங்கன் தோன்றி, இந்தச் சின்னப் பாண்டுரங்க விக்ரஹத்தை ஒப்படைக்கும்படி கூறியதாய்ச் சொல்லி ஹரிதாஸ்கிரியிடம் ஒரு பாண்டுரங்க விக்ரஹத்தைக் கொடுக்கிறார். அந்த விக்ரஹம் பண்டரிநாதனிடம் குழந்தைப்பேறு வேண்டி நிறைவேறிய ஒரு தம்பதிகள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்தார்கள். தினமும் அந்த விக்ரஹத்திற்கும் வழிபாடுகள் செய்யப் பட்டு வந்தது. அந்த விக்ரஹத்தை ஹரிதாஸ்கிரியிடம் ஒப்படைத்த அர்ச்சகர் தம் கனவையும் இறைவன் கட்டளையையும் அவருக்குத் தெரிவிக்க அதை எடுத்துக்கொண்டு வந்த ஹரிதாஸ்கிரி விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்யவும், கோயில் கட்டவும் தேர்ந்தெடுத்த இடமே தென்னாங்கூர். தென்னாங்கூர்க் கோயிலை நாளை சுற்றிப் பார்க்கலாம்.

16 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாமி

கபீரன்பன் said...

ஜெய் ஜெய் விட்டல் !!!

//தென்னாங்கூர்க் கோயிலை நாளை சுற்றிப் பார்க்கலாம்//

உங்க ஒருங்கிணைப்பாளர்தான் அவசரப்படுத்தினாருன்னா, எங்களையும் அவசரப்படுத்தணுமா? கொஞ்சம் மூச்சு விட டைம் குடுங்க :))

உபகதைகளும் சொல்லுங்க :)

எல் கே said...

ஹரிதாஸ் கிரி கட்டியதா ? அவருடைய பஜன்களுக்கு நான் ரசிகன். கேட்டுக்கொண்டே இருக்கலாம் .. ரிஷிகேஷில் ஜலசமாதி அடைந்தார் அல்லவா ??

Naaradhar said...

Very nice postings. Naanum Guruji Haridoss giri swamigalin naama sankirthanathukku adimaidhaan

கீதா சாம்பசிவம் said...

அட? இந்தப் பக்கங்களிலும் படிக்கிறவங்க இருக்கிறது சந்தோஷமா இருக்கு,
வாங்க ராம்ஜி யாஹூ, ரொம்ப நாளாச்சு, வரவுக்கு நன்றி.

கீதா சாம்பசிவம் said...

வாங்க கபீரன்பன், உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப்போறேன்? நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

கீதா சாம்பசிவம் said...

எல்கே, ஆமாம், அவர் கட்டியது தான், மற்ற விபரங்கள் பதிவிலே எழுதறேன். நன்றிப்பா.

கீதா சாம்பசிவம் said...

வாங்க நாரதரே, உங்க வலைப்பக்கத்தை இறுக்கி மூடிப் பூட்டுப் போட்டிருக்கீங்க போல~ பரவாயில்லை, :D வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

எல் கே, கீதா மாமி

ஹரிதாஸ் பஜனைகள் யு ட்யுபில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது

கோமதி அரசு said...

தென்னாங்கூர் கோயில் ஆறு வருடங்களுக்கு முன்பு போனோம்.

காஞ்சிபுரம் கோயில்கள் போய்விட்டு வரும் போது போய் வந்தோம்.

மிகவும் அழகான கோயில்.

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு அலங்காரம் என்றார்கள், நாங்கள் போன போது ராஜபுதன ராஜா,ராணி போல் அலங்காரம்.
மதியம் சுடச்சுட சாம்பார் சாத பொட்டலம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்.

இதே போல் தட்சிண பண்டரி புரம் என்று ஆடுதுறை அருகே, விட்டல் தாஸ் சுவாமிகள் கட்டிக் கொண்டு இருக்கிறார். இவர் ஹரிதாஸ் கிரி அவர்களின் சிஷ்யர் ஆவார்.

ஜெய ஜெய விட்டல், ஹர ஹர விட்டல!

Jayashree said...

தென்னாங்கூர் இந்த தடவையும் போகவில்லை:( தக்ஷின் பண்டர்பூர் போனோம் கோவிந்தபுரம் போய் ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம் பார்த்துட்டு இங்கேயும் போனோம். கட்டி முடிக்கலை . பாண்டுரங்கன் ரகுமாயீ சிலைகள் அழகா இருந்தது ஆனாலும் குப்பை சாக்கடைக்கு நடுவுல இருந்தாலும் கம்பீரமான கோபுரம் பரந்த கோவில் பண்டர்பூரில் விட்டலை பக்கத்திலே போய் அப்படியே கட்டிக்கொண்டது மிகவும் பிடித்தது

கீதா சாம்பசிவம் said...

ராம்ஜியாஹூ, தெரியும், ஆனாலும் அடிக்கடி தொலைக்காட்சியில் போடும்போது கேட்கும் சுகம் தனி! :)))))

கீதா சாம்பசிவம் said...

வாங்க கோமதி அரசு,கோவிந்தபுரத்தில் தக்ஷிண பண்டரிபுரம் பலமுறை போயாச்சு, கோயில் மெதுவாய் எழும்புது. விட்டல்தாஸ் அவர்களின் பஜனைக்கச்சேரி ஜெயா தொலைக்காட்சியிலேயும் பார்க்கிறோம். சேங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதருக்கு உறவுக்காரர்னு கோவிந்தபுரத்தில் சொன்னாங்க.

கீதா சாம்பசிவம் said...

எல்கே, ரிஷிகேஷில் சமாதி அடையலைனு நினைக்கிறேன். அவர் பத்ரிநாத்தில் சரஸ்வதி நதி ஆரம்பிக்கும் வியாசர்குகை அருகே இறங்கியதாய்க் கேள்வி. பத்ரி போகும்போது அங்கே போய்ப் பார்க்கணும்னு இருந்தேன். ஆனால் கொஞ்சம் செங்குத்து மலை ஏற முடியலை. மாமா மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்.

கீதா சாம்பசிவம் said...

வாங்க ஜெயஸ்ரீ, இப்போ நிலைமை பரவாயில்லையா? பலநாட்கள் ஆகின்றன நீங்க பதிவுகளுக்கு வந்தே! :( என்ன செய்யறது? நேரமும் இருக்கணும். நிலைமையும் சரியாயிருக்கணும்.

சீக்கிரம் தக்ஷிண பண்டரிபுர விட்டலன் தரிசனம் கிடைக்கும். நாங்க போனது காலை வேளை என்பதால் முதல்நாள் வெங்கடாசலபதி அலங்காரம் கலைக்கவில்லை. அதான் பார்த்தோம்.

கீதா சாம்பசிவம் said...

பாண்டுரங்கனுக்கு இவ்வளவு பக்தர்கள் இருப்பது சந்தோஷமா இருக்கு!