எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர்.

சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது. வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார். மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள். இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம். சீர்காழி மிகப் பழமையான ஊராகும். இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான். கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி. கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கின்றார். கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார். மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார். இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.
நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம். மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது. அதன் தோஷமும் அவரைப் பீடித்தது. விஷ்ணுவின் தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன். அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில். அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார். ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள். அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன். இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். இந்தச் சட்டைநாதரைத் தரிசிக்கச் செல்லும் ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூவைக்காமலும் செல்லவேண்டும் என்பது ஐதீகம். அப்படியே பூ வைத்துக்கொண்டு சென்றாலும், அதைக் களைந்து கீழேயே வைத்துவிட்டுக் கட்டுமலையில் மேலே சென்று தோணியப்பரையும், அதற்கும் மேலே சென்று சட்டை நாதரையும் தரிசித்துப் பின்னர் கீழே இறங்கிப் பூவை மறுபடி வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றனர்.
கோயிலினுள் சென்றதும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும். வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார். கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது.

கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம்.

உலகம் அழியும் வகையில் ஏற்பட்ட பிரளயகாலத்தில் ஈசன் அறுபத்தி நான்கு கலைகளையும் ஆடையாக அணிந்து, பிரணவத்தையே தோணியாக அமைத்து அதில் அன்னையையும் அழைத்துக்கொண்டு கிளம்ப தோணி சீர்காழிப் பகுதிக்கு வந்ததும், அனைத்து இடங்களும் அழிந்திருக்கும் இந்தப் பிரளய வெள்ளத்தில் அழியாமல் இருந்த பகுதியான சீர்காழியைக் கண்டார். இனி வரப் போகும் யுகங்களின் சிருஷ்டிக்கு இதுவே மூலத்தலம் எனக் கூறி உமை அன்னையுடன் அங்கே தங்கினார். முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் தோற்றுவிக்கப் பட்டு தொழில் தொடங்கினார்கள். பிரம்மா இங்கே ஈசனை வணங்கி சிருஷ்டியை ஆரம்பித்தார். ஆகவே இங்கே குடி கொண்டிருக்கும் ஈசனை பிரம்மபுரீஸ்வரர் என்னும் பெயரால் அழைக்கின்றனர். என்றாலும் பெரும்பாலும் சட்டைநாதர் என்ற பெயரே வழக்கத்தில் இருந்து வருகிறது.