
மன்மதனை அழைத்து ஈசன் மீது மலர்பாணங்களைச் செலுத்தி அவர் அன்னையை மணக்கும்படிச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால் மன்மதன் பயந்தான். ஈசனின் கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். ஆனால் அனைவரும் வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் மன்மதன் ஒத்துக்கொண்டான். தென்றலாகிய தேரில் ஏறிக்கொண்டு, கரும்புவில்லையும், மலர்ப்பாணங்கள் ஐந்தையும், தாமரை, அசோகா, மா, மல்லிகை, நீலோற்பலம் ஆகியன. தாழை மடலாகிய வாளையும் எந்திக்கொண்டு கிளம்பினான் மன்மதன். ரதியும் உடன் கிளம்ப அவளையும் அழைத்துக்கொண்டான். கயிலை மலைச் சாரல். ஈசன் கடும் மோனத்தில் இருந்தார். அங்கே காவலுக்கு இருந்த நந்திதேவரைக் கண்ட மன்மதன் அவரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றான். அங்கே யோகத்தில் ஆழ்ந்திருந்த ஈசன் மேல் மலர்க்கணையைச் செலுத்த ஈசனின் மோனம் கலைந்தது. கண் விழித்த ஈசன் மன்மதனைக் கண்டதும், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்க, அந்த அக்னியின் வெப்பம் தாங்காமல் மன்மதம் சாம்பலானான்.
இதைக் கண்ட ரதி துடித்தாள். புலம்பினாள், அழுதாள், அரற்றினாள். அவள் நிலை கண்டு இரங்கிய ஈசன் மன்மதனை அவள் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு அநங்கனாக உயிர்ப்பித்தார். பின்னர் தேவாதி தேவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு அம்மையைத் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். அங்கே தவத்தில் ஆழ்ந்திருக்கும் அம்மையை வயோதிக வடிவில் ஈசனே சோதனை செய்து பார்த்துத் தெளிந்து அன்னையை ஏற்றுக்கொள்வேன் என உறுதியும் கூறினார். பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணத்திற்குக் குவிந்த கூட்டத்தினால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததும், அதைச் சமன் செய்ய அகத்தியர் தெற்கே வந்ததும் தெரிந்த கதை. அப்படித் திருமணம் ஆன பின்னர் ஐயனும், அம்பிகையும் ரிஷபத்தில் அமர்ந்த வண்ணம் திருக்கயிலையில் உமாமகேசராக அருள் பாலித்தனர்.

3 comments:
thanks mami
thanks mami
நன்றி ராம்ஜி யாஹூ!
Post a Comment