இந்தச் சிற்பம் பிரபலமான திருப்பனந்தாள் காசிமடத்தின் தூணில் காணப்பட்டது. இதிலே ஈசன், அம்பிகையோடு ரிஷபத்தில் அமர்ந்து தரிசனம் கொடுக்கும் காட்சி அற்புதமான சித்திரமாய்க் காண முடிகின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர். சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது. வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார். மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள். இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம். சீர்காழி மிகப் பழமையான ஊராகும். இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான். கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி. கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கின்றார். கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார். மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார். இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.
நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம். மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது. அதன் தோஷமும் அவரைப் பீடித்தது. விஷ்ணுவின் தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன். அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில். அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார். ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள். அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன். இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம்.
கோயிலினுள் சென்றதும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும். வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார். கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம்.
கட்டுமலை உருவான வரலாறு: ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்கள் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்ற போட்டி ஏற்பட ஆதிசேஷன் தன் முழு உருவால் கைலையை மூட, வாயுவால் அதைத் துளிக்கூட அசைக்க முடியவில்லை. பெரும்பிரயத்தனம் செய்தும் அசைக்க முடியாத வாயு, தேவர்களை வேண்ட, அவர்களும் ஆதிசேஷனிடம் தலையைச் சற்றே தூக்குமாறு கூற, ஒரு தலையை மட்டும் ஆதிசேஷன் தூக்க, அந்த இடத்தை மட்டும் வாயு தன் ஆற்றலால் பெயர்த்தெடுத்தான். அந்தப் பெயர்த்தெடுத்த மலைப்பாகத்தை 20 பறவைகள் தூக்கி வந்தனவாம். அவை தான் இங்கே கட்டுமலையாக உருப்பெற்றது என்று தலவரலாறு கூறுகிறது. உரோமச முனிவரும் ஈசனை வேண்டிக்கொண்டாராம். தென் திசை மக்கள் மகிழ்வுற அம்பிகையோடு திருக்கயிலையில் தரிசனம் கிடைப்பது போல் எழுந்தருளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாராம். ஆகவே இங்கே ஈசன், அம்பிகை மட்டுமல்லாது, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, பிரம்மா, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவரோடும் இங்கே ஒன்று சேரக் காட்சி அளிக்கின்றார். இத்தகையதொரு அபூர்வ தரிசனம் மற்றெந்தக் கோயில்களிலும் கிட்டாத ஒன்று.
அதோடு பைரவர்களும் அஷ்டபைரவர்களாக இங்கே எழுந்தருளி இருக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர்,பீஷ்ண பைரவர், அகால பைரவர் என எட்டு பைரவர்களும் இங்கே உள்ளனர். தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு வழிபாடும் உண்டு. இந்த பைரவர்கள் சந்நிதியில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது. கீழிருக்கும் சிவன் கோயில் பிரஹாரத்தில் ஓர் இடத்தில் இருந்து பார்த்தால் உயரே கட்டுமலை மேலே குடியிருக்கும் சட்டை நாதர் தெரிகிறார். பிரஹாரத்தில் அந்த இடத்தில் சட்டை முனியின் ஜீவசமாதி இருப்பதாகவும், இதன் பீடத்தின் மேலிருந்தே சட்டைநாதரும் தெரிகிறார் என்றும் சொல்கின்றனர். இந்தச் சட்டைநாதரைத் தரிசனம் செய்வது அவ்வளவு எளிதல்ல. இரவு பனிரண்டு மணிக்குத் தான் தரிசனம் நடைபெறும் எனக் கூறுகின்றனர். இரவு பத்து மணி அளவில் கீழிருக்கும் ஜீவசமாதியின் பீடத்திற்கு அபிஷேஹம் முடித்துப் பின்னர் மேலிருக்கும் சட்டைநாதருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் புனுகு சாத்தி நெய்வடை மாலையும், பாசிப்பருப்புப் பாயாசமும் நிவேதனம் செய்கின்றனர்.
இதன் வேறு பெயர்கள்: பிரம்மபுரம், கழுமல வளநகர், வேணுபுரம், புகலி, தோணிபுரம், வெங்குரு, சிரபுரம், பூந்தராய், புறவம், சண்பை, ஸ்ரீகாளிபுரம் என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது. பிரம்மன் பூஜித்ததால் பிரம்மபுரம், மூங்கில் வடிவமாய் ஈசன் தோன்றியதால் வேணுபுரம், தேவர்களுக்குப் புகலிடம் கொடுத்தமையால் புகலி, தோணியில் ஈசன் வந்ததால் தோணிபுரம், வியாழபகவான் வழிபட்டதால் வெங்குரு, காளியும், காளிங்கனும் வழிபட்டதால் ஸ்ரீகாளிபுரம், வராஹ மூர்த்தி வழிபட்டதால் பூந்தராய், ராகு வழிபட்டதால் சிரபுரம், சிபிச்சக்கரவர்த்தி வழிபட்டதால், புறவம், கண்ணன் வழிபட்டதால் சண்பை எனவும் பெயர்க்காரணங்கள் ஆகும்.
3 comments:
பயனுள்ள பதிவு மாமி, நன்றிகள்.
கோவிலில் உள்ளே இருப்பது இரண்டு குளங்களா, மூன்றா
தமிழகத்திலேயே மிகப் பெரிய (பரப்பளவில்) இதுதான் பெரிய கோயில், இரண்டாம் இடம் தான் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என்கிறார்கள். அது குறித்து முடிந்தால் தகவல் அளிக்கவும்.
ம்ம்ம்ம்?? ராம்ஜி யாஹூ, இரண்டு குளங்கள் தான் பார்த்த நினைவு, எதுக்கும் யாரையானும் கேட்டுட்டு உறுதி செய்யறேனே! நீங்க கேட்டதும் எனக்கும் சந்தேகம்! :)))))))
ஜீவசமாதியின் பீடத்திற்கு அபிஷேஹம் முடித்துப் பின்னர் மேலிருக்கும் சட்டைநாதருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் புனுகு சாத்தி நெய்வடை மாலையும், பாசிப்பருப்புப் பாயாசமும் நிவேதனம் செய்கின்றனர்.//
ஒரு முறை இந்த் விழாவை பார்த்து இருக்கிறேன்.
பக்கத்து வீட்டு நண்பர் குடும்பத்துடன் வருடம் ஒருமுறை புனுகு சாற்றி அபிஷேகம் செய்வார், அவர்களுடன் சென்று பார்த்து வந்தோம்.
Post a Comment