எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 17, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்த்யாநிருத்த மூர்த்தி!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது சந்தியா ந்ருத்த மூர்த்தி. பிரதோஷக் காலத்தில் நடனமாடியதால் ஈசனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இதன் கதையும் நாம் அனைவரும் அறிந்ததே. தேவர்கள் அம்ருதம் வேண்டிப் பாற்கடலைக் கடைகின்றனர். ஆனால் அதன் முன்னர் ஈசனின் அனுமதியை வேண்டவில்லை என்பதோடு அவருக்குத் தெரிவிக்கவும் இல்லை. மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடைகின்றனர். வாசுகி தான் மத்தின் கயிறாகப் பயன்பட்டது. வாய்ப்பாகத்தை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பிடித்துக்கொண்டு வெகு வேகமாய் இழுத்துக் கடைந்தனர. அந்த வேகத்தில் வாசுகி விஷத்தைக் கக்கக் கூடவே பாற்கடலில் இருந்தும் ஹாலாஹால விஷம் வெளியே வரத் தொடங்கியது. தேவர்களும், அசுரர்களும் மட்டுமல்லாமல் விஷ்ணுவும் விஷத்தின் கடுமையால் உடல் கருகினார். அனைவரும் செய்வதறியாது தவிக்க, விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் கைலை சென்று ஈசனிடம் முறையிட்டனர்.

ஈசனும் அந்த விஷத்தை ஒரு உருண்டையாகத் திரட்டி எடுத்துவரச் சொல்லி ஆலால சுந்தரரை அனுப்பி விஷத்தை எடுத்துவரச் செய்தார் என்று ஒரு கூற்று உண்டு. அதே விஷத்தை நந்தி தேவரைத் திரட்டிக் கொண்டு வருமாறு ஈசன் பணித்ததாகவும் கூறுவார்கள். நந்தி தேவர் விஷத்தைத் திரட்டி ஒரு பெரிய உருண்டையாகக் கொண்டு வந்து ஈசனிடம் கொடுக்க, அந்த விஷத்தை ஈசன் விழுங்கினாலும் அபாயம், விழுங்காமல் விஷம் வெளியே இருந்தாலும் அபாயம் என்பதால் அதை ஈசன் அப்படியே தொண்டையில் நிறுத்திக்கொண்டார். விஷத்தைக் கண்டு பயந்தே ஈசன் தம் தொண்டையில் நிறுத்திக்கொண்டதாய் நினைத்த நந்தி தேவர் கேலியாக ஒரு ஹூம்காரம் செய்து சிரித்தார். அதைக் கண்ட ஈசன் நந்தியின்கர்வத்தைப் போக்க எண்ணி விஷமுண்ட தம் கையை நந்தியின் மூக்கெதிரே வைத்து முகரச் செய்ய முகர்ந்த நந்தி மயங்கியதோடல்லாமல் விழித்து எழுந்தும் பித்துப் பிடித்தவர் போலானார்.

அனைவரையும் தம் அருமைக்குழந்தைகளாய் நினைக்கும் அன்னை மனம் வருந்தி நந்தியைத் தண்டிக்கலாமா என ஈசனிடம் கேட்க, தண்டனை இல்லை என்றும் நந்திக்கு கர்வம் அடங்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும் ஈசன் கூறிவிட்டு, அரிசியை நீரில் நனைத்து வெல்லம் சேர்த்துக் காப்பரிசியாக நந்திக்கு உண்ணக் கொடுக்குமாறும் கூறினார். அவ்வாறே செய்ய நந்திக்குச் சுய நினைவும் மீண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் பின்னர் ஈசனின் திருவடியில் விழுந்து தம்மை மன்னிக்கும்படி நந்தி ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே மன்னித்ததாய்க் கூறிவிட்டு, நந்தியின் இருகொம்புகளுக்கிடையே நின்ற வண்ணம் சூலம், உடுக்கை ஏந்திக் கொண்டு ஒரு ஜாம காலம் நிருத்தியம் செய்தார். அவரின் ஆடலைக் கண்ட தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் மனம் மகிழ்ந்து வாத்தியங்கள் வாசித்து நடனத்துக்கு மெருகூட்டினார்கள். இது மாலை நேரத்தில் நடந்ததால் அந்த நேரத்தைப் பிரதோஷக் காலம் என்பார்கள்.

விஷமுண்ட ஈசனே மயங்கினாற்போல் படுத்துவிட்டதாகவும், அப்படிப் படுத்த நாள் ஏகாதசி எனவும் ஒரு கூற்று உண்டு. ஈசனே படுத்ததைக் கண்ட தேவர்கள் ஊண், உறக்கமின்றித் தாமும் உபவாசம் இருந்து நாள் முழுதும் விழித்திருந்து சிவனைத் துதித்தனர். மறுநாள் துவாதசி அன்றும் பாராயணத்தைத் தொடர, அதன் மறுநாள் திரயோதசி அன்று ஈசன் மனமிரங்கித் திருநடனம் செய்தருளினார். இந்தப் பிரதோஷ காலத்தில் தான் விஷம் துரத்தி தேவர்கள் ஓடி வந்ததைக் குறிக்கும் வண்ணம், சோமசூக்தப் பிரதக்ஷிணம் என்னும் முறையில் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலஹால விஷத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் ஈசனை நாடிக் கைலை நோக்கி ஓட, அங்கேயும் விஷம் அப்பிரதக்ஷிணமாய் வந்து அவர்கள் எதிரே தோன்றி விரட்ட, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓட, விஷம் மீண்டும் எதிரே வந்து விரட்ட, இப்படியே இடம், வலமாக அவர்கள் வலம் வந்த முறையே சோமசூக்தப் பிரதக்ஷிண முறை எனக் கடைப்பிடிக்கப் படுகிறது. முக்கியமாய் பிரதோஷ காலத்தில் செய்யவேண்டிய பிரதக்ஷிண முறை இதுவாகும்.

நந்தியின் இரு கொம்பிற்கிடையே ஈசனை வழிபட்டுவிட்டு அப்பிரதக்ஷிணமாக சண்டேஸ்வரர் வரை சென்று திரும்பிப் பின் மீண்டும் நந்தியைத் தரிசித்துப் பிரதக்ஷிணமாக வரவேண்டும். இந்தப் பிரதக்ஷிணம் கோமுகம் எனப்படும் அபிஷேஹ நீர் வரும் துவாரம் வரையில் தான் செய்யவேண்டும். பின்னர் மீண்டும் திரும்பி வந்து நந்தி தரிசனம், மீண்டும் அப்பிரதக்ஷிணம் சண்டேஸ்வரர் வரை என்று செய்தல் நலம். ஆனால் இப்போதெல்லாம் பிரதோஷம் என்றால் சின்னஞ்சிறிய கோயில்களிலேயே கூடும் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான். மதுரை வெள்ளியம்பலத்தில் சந்த்யாந்ருத்ய மூர்த்தியாக நடராஜரைக் காணலாம். பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய கோலமும் இதுவே. சதாசிவ மூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்தே நடராஜ வடிவம் தோன்றியதாய்க் கூறுவார்கள். நடராஜவடிவம் காணக் காணத் திகட்டாத அழகு வாய்ந்த ஒன்றாகும். இவ்வடிவின் வெவ்வேறு கோலங்களே பல்வேறு விதமான நிருத்த மூர்த்திகளாக அமைந்துள்ளன.

No comments: