எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ராணி கிருஷ்ணாயிக்கு இவர்களின் மௌன பாஷை கோபத்தை மூட்டியது. அவசரம் அவசரமாக சபையைக் கலைத்தாள். குலசேகரனிடம் வந்து, "வீரனே, நீ செய்வது சரியல்ல!" என்றாள் கோபத்துடன்.  குலசேகரன் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று பணிவுடன் கூறினான். ஆனால் ராணியோ அவன் காவலை விடுத்துக் கதை கேட்டதால் கள்வர்கள் உள்ளே புகுந்ததைக் குறித்துச் சொல்லிவிட்டு அவனுக்கு தண்டனை கொடுக்க நினைத்ததாகவும் கள்வர்கள் பிடிபட்டதால் கொடுக்கவில்லை எனவும் கூறினாள். குலசேகரன் அவமானத்தால் கவிழ்ந்த தலையோடு வெளியே வந்தான். ராணியின் கோபம் கலந்த சுபாவம் அவனுக்குள் கலக்கத்தை மூட்டியது. கடுமையாகத் தன்னை நடத்தும் இந்த ராணியிடம் போய் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்றெல்லாம் கவலைப் பட்டான். இரவில் உணவு அருந்திவிட்டுப் படுத்தும் கூட அவன் சிந்தனைகள் அவனைத் தூங்க விடாமல் குழப்பி எடுத்தன.

அப்போது திடீரெனப் பஞ்சு கொண்டான் குரலில் குலசேகரனை அழைத்தமாதிரி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான் குலசேகரன். மர நிழலில் பஞ்சு கொண்டான் நின்றுகொண்டு அவனை அழைத்துக் கொண்டிருந்தார். கூடவே அரங்கன் ஊர்வலத்தைப் பின்பற்றச் சொன்னால் இங்கே அணங்குகளின் ஊர்வலத்தைப் பின்பற்றுகிறாயே என்றும் கேட்டார். இது தான் நீ அரங்கனுக்குச் செய்யும் சேவையா என்றெல்லாம் அவர் கேட்டார். குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு எதிரே பார்த்தான். யாரும் இல்லை. அவன் லட்சியத்திலிருந்து அவன் புரண்டு விட்டதால் இத்தகைய எச்சரிக்கை தோன்றியதோ என நினைத்தான். கண் முன்னே அரங்கன் உருவமும் அவன் ஊர்வலமும் தோன்றியது.  அரங்கன் விக்ரஹம் அவனைப் பார்த்துச் சிரித்து என்னை மறந்தாயோ என்று கேட்பது போலும் தோன்றியது.

"ரங்கா! ரங்கா!" என்று அரற்றினான் குலசேகரன். ராஜாதிராஜனாகிய அரங்கன் இன்று நம் உதவியையா எதிர்பார்க்கிறான்? நாயினும் கடையேனாகிய என்னை அரங்கன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறானா? ரங்கா, ரங்கா, என்னால் இயன்றதைச் செய்து உன்னை எப்படியேனும் காப்பாற்றித் திரும்பவும் திருவரங்கம் கொண்டு சேர்ப்பது என் கடமை! ஐயகோ! அழகர் மலையில் அவருக்கு தினமும் மூன்று வேளை அமுது படைத்து வருகிறார்களா என்று தெரியவில்லை. பூஜைகள் சரிவரச் செய்து வருகிறார்களா என்றும் புரியவில்லை. குலசேகரனுக்குள் தவிப்பு மேலிட்டது. என்ன செய்வது எனப் புரியாமல் அப்போது முறை காவலில் இருந்த குறளனை அணுகினான். அவனிடம் தனக்கு அரங்கன் நினைவு அதிகம் வருவதால் அழகர் கோயில் சென்று விடலாமா என்று கேட்டான்.

அதற்குக் குறளன் அழகர் கோயிலில் கொடவர்கள் அரங்கனை நன்கு கவனித்துக் கொள்வதை எடுத்துச் சொன்னான். "கோடைக்காலம் நாம் காற்றில்லாமல் தவிக்கையில் கூட இந்தக் கொடவர்கள் முறை போட்டுக் கொண்டு அரங்கனுக்கு விசிறியால் விசிறினார்களே! மறந்து விட்டீர்களா!" என்று கேட்டான்.  ஆனாலும் குலசேகரன் மனம் சமாதானம் அடையவில்லை. என்ன இருந்தாலும் கொடவர்கள் வீரர்கள் இல்லையே என்று கவலை அடைந்தான்.  "அரங்கனுடைய விக்ரஹம் மறைந்து இருக்கும்வரை கவலை இல்லை. அவர்களும் அதைப்பாதுகாப்பார்கள். எல்லாவிதமான உபசரணைகளும் செய்வார்கள். ஆனால் எதிரிகளால் விக்ரஹத்துக்கு ஆபத்து நேரிட்டால்? அவர்களால் என்ன செய்ய முடியும்? இங்கே நாம் ஹொய்சள மன்னர் உதவி செய்வார் என நம்பி வந்தால் இங்கே நடப்பதே வேறு விதமாய் இருக்கிறது. அரங்கனையே பறிகொடுத்து விடுவோமோ எனக் கவலையாக இருக்கிறது. காலையிலிருந்து இந்த எண்ணம் தோன்றி என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். "என்றான் குலசேகரன்.

குறளன் அதற்கு இந்த தீர்த்த யாத்திரையைச் சரியாகவும் சீக்கிரமாகவும் முடித்துக் கொண்டு திருவண்ணாமலை திரும்பினால் ஹொய்சள மன்னரிடமிருந்து உதவி கிடைக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தான். குலசேகரன் ஏதும் பேசவில்லை. மறுநாள் அங்கிருந்து யாத்ரிகர்கள் கிளம்பினார்கள். யாத்ரிகர்களின் முன்னால் குலசேகரனும், குறளனும் காவலாகச் சென்றார்கள். கிருஷ்ணாயி மூடு பல்லக்கில் பயணம் செய்தாள்.  மற்றவர்கள் வந்த பல்லக்குகளின் வரிசைகளோடு முன்னும் பின்னுமாக வீரர்கள் காவல் காத்த வண்ணம் சென்றனர். குலசேகரனுக்கு ஹேமலேகா அந்தப் பல்லக்குகளில் எதிலேனும் இருப்பாளா என்னும் சந்தேகம் தோன்றியது. அவள் கதையைக் கேட்கக் கூடாது என்று ராணி தடை விதித்தது அவன் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அவளைப் பார்க்கவானும் முடியுமா என்று யோசித்தான்.

5 comments:

நெல்லைத் தமிழன் said...

நான் இதற்கு முன்பு உள்ள பகுதிகளை இன்னும் படிக்கவில்லை. 6-7 தான் படித்திருக்கேன். விரைவில் படித்து இந்த இடுகைக்க வரேன். அழகியமணவாளர் பல இடங்களுக்குச் சென்ற கதை தெரியும் (இந்தச் சமயத்தில் அங்கு மணவாளமாமுனியும் கூட இருப்பாரே). விரைவில் up to date statusக்குள் வரப்பார்க்கிறேன். நல்ல உழைப்பு (ஆரம்பத்தில் ஏதேனும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எழுதறீங்கன்னு நினைச்சேன்)

நெல்லைத் தமிழன் said...

நான் இதற்கு முன்பு உள்ள பகுதிகளை இன்னும் படிக்கவில்லை. 6-7 தான் படித்திருக்கேன். விரைவில் படித்து இந்த இடுகைக்க வரேன். அழகியமணவாளர் பல இடங்களுக்குச் சென்ற கதை தெரியும் (இந்தச் சமயத்தில் அங்கு மணவாளமாமுனியும் கூட இருப்பாரே). விரைவில் up to date statusக்குள் வரப்பார்க்கிறேன். நல்ல உழைப்பு (ஆரம்பத்தில் ஏதேனும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எழுதறீங்கன்னு நினைச்சேன்)

ஸ்ரீராம். said...

படித்தேன், தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

பிள்ளை லோகாச்சாரியார். மணவாள மாமுனி இல்லை. நான் எழுதியதில் தவறு.

Geetha Sambasivam said...

வாங்க நெ.த. இந்த வலைப்பக்கம் உள்ள பல பதிவுகளும் நாங்கள் சென்று வந்த இடங்கள் பற்றி இருக்கும். அஹோபிலம், நவ திருப்பதி, நவ கைலாசம், சிதம்பர ரகசியம், திருக்கயிலை யாத்திரை போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

அரங்கனோடு சென்ற பிள்ளை உலகாரியர் முதுமை காரணமாகவும் உடல்நலக் குறைவாலும் பாதி வழியிலேயே பரமபதம் எய்தி விடுவார். புத்தகங்கள் பலவும் இதற்குக் குறிப்புகளுக்குப் பயன்படுகின்றன. அவற்றையும் படித்துக் கொள்வேன்.

நன்றி ஶ்ரீராம், தொடர்ந்து படிப்பதற்கு!