எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள்! மெல்ல மெல்ல ஓய்வு அதிகம் எடுத்துக் கொண்டு இணையத்தைக் குறைத்துக் கொண்டு இருக்கிறேன். என்றாலும் எடுத்த காரியத்தை முடிக்கணும்; பாதியில் நிற்கிறதே என்னும் மன உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது. முக்கியமான பதிவுப் பக்கத்திலேயே தொடர்ந்து ஏதும் போட முடியாமல் இருக்கிறச்சே, இங்கே எல்லாம் யோசிச்சு எழுத வேண்டிய இடம்! கிட்டத்தட்ட மறுபடி 2 மாசம் போல் ஏதும் எழுதாமல் இருந்துட்டு இன்னிக்கு வந்திருக்கேன்.

சென்ற பதிவில் அழகர்கோயிலில் அரங்கனைப் பாதுகாத்து வந்த கொடவர்களை அரண்மனையில் சேவகம் செய்யும் அலிகள் வந்து பிடித்துக் கொண்டதைப் பார்த்தோம். அலிகள் பிடித்துக் கொண்டதும், "ரங்கா! ரங்கா!" என்று கொடவர்கள் அலற அலிகளோ கேலியாகச் சிரித்தனர். அந்த அலிகளின் பாதுகாப்பில் வந்த அரண்மனைப் பெண்களில் ஒருத்தி அந்த மலையின் விளிம்பு ஒன்றை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பெண்கள் அனைவருமே உல்லாசமாய்க் கூடி இருந்து பொழுது போக்குவதற்காகவே அங்கே வந்திருந்தபடியால் கண்காணிப்பு இல்லை. ஆகவே அந்தப் பெண்ணிற்கு இது வசதியாக இருந்தது. முகத்திரையிட்டுத் தன்னை மூடிக் கொண்டிருந்த அந்தப் பெண் வேறு யாரும் இல்லை. வாசந்திகா தான்! அவள் இங்கே மதுரைக்குக் கொண்டுவரப் பட்டிருந்தாள். அங்கே வந்ததில் இருந்து தனக்கு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளால் உடலும், மனமும் தளர்ந்து போயிருந்தாள் வாசந்திகா. முகம் இளைத்து உடல் கருத்துப் பொலிவின்றிக் காணப்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

பழையனவற்றை எல்லாம் நினைத்த அவள் மனது சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலங்களையும் சேர்த்து அசை போட்டது. அங்கே பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டவர்களில் அவளைப் போன்ற அழகான தேவதாசிகள் மட்டுமில்லை; ஒரு சில இளவரசிகள், சிற்றரசர்களின் மனைவிகள், பெண்கள் எனப் பலரும் பலவந்தமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். ஒரு சிலர் தங்களுக்கு நிகழ்ந்ததை விதியின் பலன் என நினைத்து ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கப் பலரும் செய்வதறியாது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அங்கே நிகழ்ந்த கொடூரங்களுக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு மறைமுகமாகப் போதையில் ஆழ்த்தித் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள் அந்த தில்லி வீரர்கள். நினைவுகளை மழுங்க அடித்தனர். வாசந்திகாவுக்கும் அது நிகழ்ந்தது.

அவள் நினைவுகளும் மழுங்கடிக்கப்பட்டு அவள் போதையிலே இருந்த தருணம் அவள் சூறையாடப் பட்டாள். வெகு நாட்கள் வரை தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் இருந்தாள் வாசந்திகா. ஆனால் போதையிலிருந்து விடுபட்டுச் சுயநினைவுக்கு வரும்போதெல்லாம் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அவளைச் சிந்திக்க வைத்தது. பின்னர் அவளுக்குத் தான் சீரழிக்கப்பட்டது புரிய வந்தது. நெருப்பில் விழுந்து விட்டது போல் தவித்தாள். அவள் சீரழிக்கப் பட்ட விஷயம் தெரிந்ததும் முதலில் நினைவு வந்தது குலசேகரன் தான். அவனுக்காகவென்று வாழ்ந்து வந்த தனக்கு நேர்ந்த இந்த அவலம் அவனுக்கு மட்டும் தெரியவந்தால்! தன் பெண்மையை முற்றிலும் இழந்த பின்னர் அவனை நினைப்பதோ, அவனை அடைய முற்படுவதோ எங்கனம் சாத்தியம்? இனி அவள் வாழ்வதற்கும் என்ன பொருள்? இருந்தாலும் ஒன்று! இறந்தாலும் ஒன்றே!

ஆகவே இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்னும் முடிவுக்கு வந்திருந்தாள் வாசந்திகா! அவள் வெகுநாட்கள் ஆவலோடு காத்திருந்தது இந்த நாளுக்காகத் தான். அன்றைய தினம் காலையிலேயே தளபதி மாலிக் தனது அந்தப்புரப் பரிவாரங்களுடன் அழகர்மலைக்கு உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தான்.  ஆகவே அனைவரும் பயணமாக வந்திருந்தனர். பரிவாரங்களிடமிருந்து விலகித் தனியேயும் வந்துவிட்டாள்.  மலை முகட்டில் நின்றவண்ணம் அரங்கனை நினைத்துப் பிரார்த்தித்தாள்.அரங்கனுக்கு அடிமையாக இருந்து அவனுக்கே சேவை செய்ய வேண்டிய தான் இங்கே ஓர் இழிவான இடத்தில் மாட்டிக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிப்பதை நினைவு கூர்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியிலாவது அரங்கனின் சேவைக்காகப் பிறந்து குலசேகரனையே மணாளனாக அடையப் பிரார்த்திப்பதாகவும் கூறிவிட்டுக் குதிக்க ஆயத்தமானாள்.

அடுத்த கணம் திடீரென "ரங்கா!ரங்கா!" என்று ஒரு குரல் கேட்கத் திடுக்கிட்டாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அரங்கன் முகம் அவள் முன் தோன்றிப் புன்முறுவல் செய்வது போல் தெரிந்தது. உடனே ஏதோ ஒரு முக்கியக் காரணத்தால் தான் தன்னை அரங்கன் இறக்கவிடாமல் தடுக்கிறான் என்பதைப் புரிந்தவளாக அங்கிருந்து நகர்ந்தாள். திரும்பப் பரிவாரங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றாள். செல்லும் வழியில் கொடவர்களை அலிகள் துன்புறுத்துவதைக் காண நேர்ந்தது. அலிகளிடம் போய் விசாரிக்க, அவர்கள் அரங்கனைப் பற்றியும் அவன் பொக்கிஷமும் இருக்குமிடம் இவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்பதால் இவர்களைப் பிடித்து விசாரிப்பதாகக் கூறினார்கள்.

அவர்களை விடச் சொல்லித் துருக்க மொழியில் ஆணையிட்ட வாசந்திகா சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்குள் கொடவர்கள் தப்பி ஓடினார்கள். வாசந்திகாவை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த வாசந்திகாவிற்கு அங்கே இருந்த பெரும் தழைகளோடு கூடிய புதரில் ஓர் வெளிச்சம் தெரியவே உற்றுப் பார்த்தாள். ஆஹா! அது ஐம்பொன்னால் ஆன ஒரு விக்ரஹத்தின் கை! அபய ஹஸ்தம்! அப்படியானால்! ஆஹா! இது அரங்கனின் அபய ஹஸ்தம் தான்! அரங்கன் தான் ஒளிந்திருக்கிறான். இல்லை! அந்தக் கொடவர்கள் ஒளித்து வைத்திருக்கின்றனர். உடனே நாட்டிய பாவனையில் ஆடிக்கொண்டு அந்தப் புதருக்கு அருகே சென்று தழைகளை விலக்கி அரங்கனைப் பார்த்தவள் தன் கழுத்து நகையைக் கழட்டி அரங்கனுக்கு அருகே போட்டு விட்டு அரங்கனைச் சரியாக மூடினாள். பின்னர் மீண்டும் அலிகளிடம் வந்து அவர்களோடு பரிவாரங்களுடன் கலந்து கொண்டு பேசிக் கொண்டே அப்பால் நகர்ந்தாள்.

7 comments:

நெல்லைத் தமிழன் said...

ஒரே மூச்சில் வாரம் ஒரு இடுகை என்று எழுதவேண்டாமோ? ஒரு பத்தி படிக்கும்போதே முன்னர் படித்தது நினைவுக்கு வந்துவிட்டது. ஆவலுடன் தொடர்கிறேன். எத்தனை எத்தனை பேரின் தியாகம் அந்தக் கோவிலோடு இணைந்து இருக்கிறது. பிரகாரத்தில் நடக்கும்போது எத்தனையோ மகான்கள் அங்கு நடந்திருப்பார்கள், எத்தனையோ தியாகிகள் அங்கு இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றவேண்டும்.

நெல்லைத் தமிழன் said...

இடுகைக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

கோவில்களில் மஞ்சள், குங்குமம் போன்றவை பிரசாதமாகத் தருகிறார்கள். பொதுவாக ஒரு துளி போதும். அவர்கள் கொடுப்பதில் நிறைய மிஞ்சுகிறது. கையும் மஞ்சளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறிவிடுகிறது. பலர், தூண்களில் மிஞ்சின குங்குமத்தைப் போடுகிறார்கள். இதற்கொரு நல்ல வழிமுறை இருக்கவேண்டாமா? கோவில் பாழாக இதுவும் ஒரு காரணம்.

ஸ்ரீராம். said...

படித்தேன். காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீரங்க நாதனைப் படித்து நாட்களானதுக்கு இது ஒரு சாட்சி. எவ்வளவு நடந்திருக்கிறது.
முதலிலிருந்து படிக்க வேண்டும் வாரத்துக்கு ஒரு முறையாக எழுதுங்கள் கீதா.
இதெல்லாம் எனக்குத் தெரிய வேறு வாய்ப்பில்லை. நன்றி மா.

Geetha Sambasivam said...

நெ.த. சொல்லுவது என்னமோ எளிது தான். நானும் தான் நினைச்சுப்பேன் இன்னிக்கு எழுதணும்னு! ஆனால் ஏதேதோ! முடியறதில்லை. பல கோயில்களுக்கும் போகும்போது நான் இந்தக் கோயில் அந்த ராஜா கட்டியது, அவங்க இங்கே நடந்திருப்பாங்க என்று நினைச்சுப்பேன். முக்கியமாத் தஞ்சைப் பெரிய கோயில் அப்புறமாக் கோனேரி ராஜபுரம் சிவன் கோயில் நடராஜரைப் பார்க்கும்போதெல்லாம் செம்பியன் மாதேவியின் திருப்பணி நினைவுக்கு வரும்.

Geetha Sambasivam said...

நெ.த. மதுரையில் அந்தக் காலத்திலேயே தூண்களில் எவர்சில்வர் கிண்ணங்களைக் கட்டி வைத்திருப்பார்கள். விபூதி, குங்குமம் அதிலே போடலாம். இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் இதை எழுதி வைப்பதோடு ஒரு சிட்டிகை மட்டுமே விபூதி, குங்குமம் தருகின்றனர்.

Geetha Sambasivam said...

நன்றி ஶ்ரீராம்,

வல்லி, நானும் வாரம் ஒருமுறைனு தான் திட்டம் போட்டுப்பேன். :(