எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஆத்திரத்தில் இருந்தாலும் குலசேகரன் அதை வெளிக்காட்ட்டாமல் அமர்ந்திருக்க ராணி கிருஷ்ணாயி அவனிடம் கோபமா எனக் கேட்டாள். தன் கோபம் அவளை என்ன செய்யும் எனக் கேட்டான் குலசேகரன். அப்போது கிருஷ்ணாயி காவியத்தை ஏன் ஏட்டில் படிக்க வேண்டும்? கண்கள் வழியாகப் படிக்கலாமே எனக் கேட்டாள். குலசேகரனுக்கு அவள் எதை நோக்கிப் பேசுகிறாள் என்பது புரியவில்லை. ஆகவே மௌனம் காத்தான். அதைக் கண்ட ராணி மற்றவர்கல் அனுபவங்களைப் படித்துக் தெரிந்து கொள்வதை விடச் சொந்தமாக அனுபவித்துத் தெரிந்து கொள்வதே நல்லது என்றாள். குலசேகரனுக்கு ஒரு மாதிரியாகப் புரிந்தாலும் பதில் சொல்லவில்லை. ராணி அவனிடம் புரிந்து கொண்டாயா இல்லையா எனக் கேட்கத் தான் புரிந்து கொண்டாலும் அப்படி எல்லாம் இருக்கும் அளவுக்குத் தான் பெரிய மனிதன் இல்லை என்று குலசேகரன் பதில் சொன்னான். தனக்கு அத்தகைய வாழ்க்கை பழக்கம் இல்லை என்றும் கூறினான்.

கிருஷ்ணாயி அதற்கும் சிரித்தாள். ஏன் பழக்கம் இல்லை என்கிறாய்? எளிதில் பழகலாம்! தெரிந்து கொள்ளலாம். என்ன கஷ்டம் இதில் என்றாள். குலசேகரனோ தனக்கு அதில் இஷ்டம் இல்லை என்றும் தான் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு அது ஊறு விளைவிக்கும் என்றும் மறுமொழி சொன்னான். மேலும் லட்சியம் ஈடேறும்வரை தனக்கு வேறு எவ்விதமான சுகபோக வாழ்க்கையிலும் விருப்பம் இல்லை என்றும் கூறினான். ராணி அதற்கு ஏளனமாக என்ன லட்சியம் பெரிய லட்சியம் உனக்கு? போயும் போயும் ஒரு உலோக விக்ரகத்திற்காக உயிரையே கொடுக்கிறேன் என்கிறாயே! என்றாள். குலசேகரனுக்கு மீண்டும் கோபம் வந்தது. ராணியை நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்வையின் தீவிரம் அவன் கண்கள் வழி தெரிந்தது.

"ராணி! அது வெறும் உலோக விக்ரகம் மட்டுமல்ல. இந்தத் தமிழ்மொழியைப் பேசும் மக்களின் நம்பிக்கையால் செய்யப்பட்ட விக்ரகம் அது. மக்களின் நம்பிக்கையே அந்த விக்ரகத்தில் தான் அடங்கி உள்ளது. நமக்கு முன்னே எத்தனையோ மகான்களும் ஆழ்வார்களும் தீந்தமிழ்ப் பாசுரங்கள் பாடிப் பாடி தெய்வீகத்தை அந்த விக்ரகத்தின் மேல் சமர்ப்பித்திருக்கிறார்கள். எட்டுத் திசைகளிலும் அந்த விக்ரகத்தின் புகழ் பரவியுள்ளது. அது உயிருள்ளது. வெறும் உலோகம் அல்ல. தத்துவம் அது. ஒரு சமுதாயத்தின் ஆன்மாவே அந்த விக்ரகம் தான். ஆகவே அதைப் பாதுகாப்பதே என் கடமை என நான் நினைப்பதில் என்ன தவறு? அதுவே என் முக்கியக் கடமை! என் லட்சியம்!" என்று ஆவேசமாகப் பேசினான்.

இப்படியும் அப்படியும் திரும்பிக் கொண்டு ராணி சிரித்த சிரிப்பில் அவள் ஆபரணங்கள் ஒளியைச் சிந்தின. அவனைப் பார்த்து, " ஏ, வீரனே! உன்னை விட லட்சியவாதிகளை எல்லாம் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னகதி ஆனார்கள் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் உன் லட்சியம் அரங்கனைக் காப்பது என்றாலும் நீ காவியமும் படித்துத் தான் ஆக வேண்டும்! அதை நினைவில் வைத்துக் கொள்! புரிந்து கொள்!" என்று ஆணையிடும் தோரணையில் கூறிவிட்டுச் சென்றாள்.

அங்கே அழகர் மலையில்!
மாலை நேஎரம் வரை அங்கே பொழுதைக் கழித்தார்கள் மதுரை அரண்மனையில் இருந்து வந்திருந்த பெண்களும் துணைக்கு வந்த அலிகளும். வாசந்திகாவும் அவர்களுடன் பொழுதைக் கழித்தாள். அவர்கள் அனைவரும் சென்ற பின்னரே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த கொடவர்கள் வெளியே வந்தனர். ஆவலுடன் வந்து வாசந்திகா மூடி மறைத்து வைத்திருந்த அரங்கன் விக்ரகத்தைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அரங்கன் எவ்விதக் குறையுமின்றி அங்கே இருந்தான். அவன் கழுத்தில் வாசந்திகா அணிவித்திருந்த பொன் ஆரம் கிடக்கவே  கொடவர்கள் அதை ஆச்சரியத்துடன் எடுத்துப் பார்த்தார்கள். நல்ல பொன்னால் செய்யப்பட்டது என்பதை அறிந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கையில் பொருள் இல்லாமல் அரங்கன் சேவைக்கு என்ன செய்யலாம் எனக் கவலைப்பட்ட சமயத்தில் இது கை கொடுக்க வந்திருப்பதை அறிந்து சந்தோஷம் அடைந்தனர். காலையிலிருந்து அரங்கனுக்குஎதுவும் படைக்க முடியாமல் போனதை நினைத்து மனம் வருந்திய வண்ணம் காட்டில் கிடைக்கும் கனிகளைப் பறித்து வரலாம் என்று சென்றார்கள். சில கொய்யாக்கனிகளைப் பறித்து வந்து அரங்கனுக்குப் படைத்துத் தாங்களும் உண்டனர்.

இனி இங்கிருந்தால் ஆபத்து எனக் கருதி மறுநாள் காலை அரங்கனை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு மலையின் காடுகள் வழியாக மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு இன்ரைய பொழுதை எப்படிக் கழிப்போம் என்று எண்ணும் வேளையில் அவர்களில் மூத்தவர் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் அன்னம் படைக்காமல் இருப்பது? கனிவகைகளையே படைத்து வருவதால் அவர் உடலுக்குக் கேடு வராதா என வருத்தத்துடன் வினவினார். பின்னர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆபரணத்தை விற்று வேண்டிய பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்.  மற்ற இருவரும் சம்மதிக்கவே அவர் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். அப்போது நான்கு நபர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தவர்கள் மலையின் மேல் ஏறத் தொடங்கி இருந்தனர். அவர்களைப் பார்த்த மூத்த கொடவர் திகைத்து நிற்க அவர்களோ "ஹோ" என்று கத்தினார்கள்.

2 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

//கனிவகைகளையே படைத்து வருவதால் அவர் உடலுக்குக் கேடு வராதா என வருத்தத்துடன் வினவினார்.// - இதுதான் பக்தி. இந்த மாதிரி அசாத்திய பக்தி வருவதே கடினம். இராமானுசருக்கு உணவில் விஷம் கலந்தனர். அந்த காலகட்டத்தில் அவர், அவரது குருவைச் சந்தித்தபோது (காவிரிக் கரையில்) சுடு மணலில் விழுந்து வணங்கினார். ஆனால் குரு அவரை எழச்சொல்லவில்லை. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், 'இது தகுமா.. ஆச்சாரியரான இராமானுசர் உடம்பு சுடு மணலின் வெந்துவிடாதா' என்று கத்தி, இராமானுசரை எழச் சொன்னார். அப்போது குரு, 'நீதான் இனி இராமானுசருக்கு உணவு சமைக்கத் தகுந்தவன். இனி நீதான் அவருக்கு உணவு படைக்கணும். அப்போது மற்றவர்கள் உணவில் விஷம் கலக்க முடியாது' என்று சொன்னார். அத்தகைய வாஞ்சை பெருமாளிடம் இருக்கணும். அருமை.