எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 27, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஆஹா! ராணி வாசம்! அதுவும் ஹேமலேகா போன்ற இளம்பெண்ணிற்கு! இந்தக் கிருஷ்ணாயிக்கு மிகக் கொடூரமான மனமாக இருக்க வேண்டும். ராணி வாசம் என்றால் சும்மாவா! ராணி வாசத்துக்கு அழைக்கப்படும் பெண் ராணியின் நெருங்கிய தோழியாக ராணிக்கு அருகிலேயே எப்போதும் அந்தப்புரத்திலேயே வசிக்க வேண்டும். வெளியே வர முடியாது. அதோடு இல்லாமல் பெற்றோர், உற்றாரையும் மறக்க வேண்டும். எல்லாவற்றையும் விடக் கொடுமை அவள் திருமணமே செய்து கொள்ள முடியாது; செய்து கொள்ளக் கூடாது! கன்னியாகவே இருக்கவேண்டும். ஆனால் இவளுடைய இந்தத் தியாகத்திற்காகப் பெற்றோருக்கு நிறையப் பணம், நிலம், வெகுமதிகள் எல்லாம் கிடைக்கும். கிட்டத்தட்ட ஓர் துறவியைப் போன்ற வாழ்க்கை. ஹேமலேகாவிற்குப் போய் இப்படி ஒரு கடினமான வாழ்க்கையா? குலசேகரன் மனம் துடித்தது. கொந்தளித்தது. ஆனால் அவனால் என்னசெய்ய முடியும்?

அபிலாஷாவுக்கும் அவன் மனதின் துக்கம் புரிந்தது போல் சிறிது மௌனமாக இருந்தாள். பின்னர் மெதுவாக, "ஐயா!" என அவனை அழைத்தாள். மெல்லக் குலசேகரன் அவளைப் பார்த்தபோது அவன் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்! "வருந்துகிறீர்களா?" என்ற அபிலாஷா அவன் ஆமோதிப்பாகத் தலை அசைப்பதைக் கண்டு முகம் வாடினாள். பின்னர் மெல்லிய குரலில், தான் கிளம்புவதாய்த் தெரிவித்தாள். அபிலா கிளம்பும்போது அவளை அழைத்த குலசேகரன் அவள் தலையைத் தொட்டுத் தான் இனி மது அருந்தப் போவதில்லை எனவும், அதுவும் அரண்மனையில் எது கொடுத்தாலும் ஏற்கப் போவதில்லை எனவும் கடுமையான சபதம் செய்தான். பின்னர் விண்ணை நோக்கி வணங்கிய குலசேகரனிடம் தான் சென்று வருவதாய்க் கூறிவிட்டுக் கிளம்பினாள் அபிலாஷிணி.  அதற்குள்ளாக அங்கே அழகர் மலையில் நாம் விட்டு விட்டு வந்த கொடவர்களும் பின்னால் வந்து சேர்ந்து கொண்ட அழகிய நம்பியும் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம்.

அழகிய நம்பிக்கு முதலில் எதுவும் புரியாவிட்டாலும் பின்னர் மெல்ல மெல்ல அங்குள்ள சூழ்நிலையைப் புரிந்து கொண்டான். டில்லித் துருக்கத் தளபதி வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரைக்கு மிக அருகே உள்ள அழகர்மலைக்கு அரங்கனை எடுத்து வந்ததே சரியானது அல்ல. அரங்கன் இப்போது மிக ஆபத்தான ஓர் நிலையில் இருக்கிறான். ஆனால் இப்போது இந்த தில்லிப் படைகள் அறியாமல் வேறிடம் மாற்றுவதும் முடியாத காரியம். வேறே என்னதான் செய்வது? யோசித்து யோசித்து அவன் மிகக் குழப்பம் அடைந்தான். மூத்த கொடவர் வேறே பொன் ஆபரணங்களை விற்கப் போனார். மூன்று நாட்கள் ஆகியும் வரவில்லை என நினைத்தபோது ஒரு வழியாக அவர் வந்து சேர்ந்தார். ஆபரணங்களை விற்கவே முடியவில்லை என்றும் யாருமே வாங்க முன்வரவில்லை என்றும் சொன்னார். ஊர்களில், கிராமங்களில் உள்ள மக்கள் தில்லித் துருக்கப்படையினரின் துன்புறுத்தல் தாங்காமல் எங்கெல்லாமோ ஓடிவிட்டார்கள். ஆட்களையே பார்க்க முடியவில்லை. சரினு பொன்னைக் கொடுத்து தானியங்களையாவது வாங்கலாம்னு பார்த்தால் அதுவும் முடியவில்லை. எல்லாத் தானியங்களும் தில்லிப் படையினருக்கும் அவர்கள் பரிவாரங்களுக்குமே போதவில்லையாம். ஏதோ கொஞ்சம் போல் அரிசி கிடைத்தது. வாங்கி வந்தேன். என்று அவர் சொன்னார்.

"ஆஹா, இனி என்ன செய்வோம்! அரங்கனுக்குத் தினமும் காட்டில் விளையும் பழங்களையே கொடுத்து வருகிறோமே, அது அவனுக்கு ஒத்துக்கொள்ளாமல் போய்விட்டால்? என்ன செய்கிறது? அரிசிக்கு எங்கே போவோம்?"என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்கள் அனைவரும். என்ன செய்வது என்றே தெரியவில்லையே என மூத்த கொடவரும் கவலைப்பட்டார். அரங்கனை எப்படியாவது இங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு போக முடியுமா எனப் பார்ப்போம் என்று ஒருவர் சொல்ல அதை மற்றவர்கள் ஆமோதித்தனர். ஆனால் அழகிய நம்பி வழியெல்லாம் தடங்கல் இல்லாமல் இருக்கிறதா எனத் தான் பார்த்துச் சொல்வதாகச் சொன்னான். எப்படிப் போய்ப் பார்ப்பது என யோசித்தவர்களிடம் தான் மாறு வேடத்தில் சென்று அப்படியே மதுரை நகருக்குள்ளும் போய் நிலைமையைத் தெரிந்து கொண்டு வருவதாகச் சொன்னான் அழகிய நம்பி.  இது மிகவும் ஆபத்தான காரியமே எனக் கலங்கியவர்களிடம் எது வந்தாலும் எதிர்கொள்ள வேண்டியது தான், என்றும் தான் போய்ப் பார்த்து வருவதாகவும் அழகிய தீர்மானமாய்க் கூறினான். 

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்.......