எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 04, 2018

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

நல்லவேளையாக அந்த நால்வரும் துருக்க வீரர்கள் இல்லை. அவர்கள் மூத்த கொடவரைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்து கொண்டு ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். கொடவர் முதலில் புரியாமல் விழித்தார். பின்னர் உற்றுப் பார்த்து இன்னார் என இனம் கண்டார். ஆகா, அழகிய நம்பியா? நாச்சியாரை நீங்கள் தானே தூக்கிச் சென்றீர்கள்? நாச்சியாரின் கதி என்ன? சௌக்கியமாய் இருக்கிறாரா? அவருக்கு வேண்டிய நிவேதனங்கள் வழிபாடுகள் எல்லாம் செய்து வருகிறீர்களா? அரங்கம் எப்படி இருக்கிறது? அங்கே இருந்தா வருகிறீர்கள்? அந்நியர்கள் அங்கிருந்து போய் விட்டனரா?" எனச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்.

மன வேதனையில் ஆழ்ந்த அழகிய நம்பி நாச்சியார் ஊர்வலத்துக்கு நேர்ந்த கதியைச் சொன்னார். நகைப் பெட்டகங்களைப் பூமிக்கு அடியில் புதைத்து விட்டு வந்ததைச் சொன்னார். பஞ்சு கொண்டானுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தான் நிறைவேற்றவில்லை என வருந்தினார். கொடவர் அவரைத் தேற்றினார். அரங்கனுக்கு நேர்ந்த இன்னல்களைச் சொல்லி எல்லாவிதமான இன்னல்களிலிருந்தும் அரங்கனை எப்படியோ காப்பாற்றி விட்டோம். அதுவும் அவன் செயல். அவன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு விட்டான். இனி என்னவோ!" என்றவர் அரங்கன் இருக்கும் இடத்தைச் சொல்லிப் போகும் வழியையும் விவரித்தார். பின்னர் அரங்கனுக்கு தினப்படி அமுது படைக்கவில்லை என்னும் வருத்தத்தைக் கூறித் தான் திடீரெனக் கிடைத்த இந்த நகையை விற்றுக் கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு அரிசி, தானியங்கள் வாங்கி வரப் போவதாய்ச் சொல்லிக் கீழே இறங்க ஆரம்பித்தார். அழகிய நம்பி மேலே ஏறினார். தழைகளால் அமைக்கப்பட்ட பந்தலில் மிக எளிமையான கோலத்தில் பக்கத்தில் உபய நாச்சியார்கள் இல்லாமல் தனித்திருந்த அரங்கனைக் கண்டு அவர் கண்கள் கண்ணீரால் நனைந்தன.

அரச வாழ்வு வாழ்ந்த அரங்கனுக்கும் இந்தக் கதியா என எண்ணி எண்ணி உருகினார். சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார். அரசபோக வாழ்க்கை நடத்தி வந்த அரங்கன் இப்போது ஓர் துறவி போல் அனைத்தும் துறந்து வாழ்கிறானே என எண்ணி மருகினார்.


அங்கே தீர்த்த யாத்திரைக் குழுவில் அரை மனதாகத் தங்கி இருக்கும் குலசேகரன் இப்போது புழுவைப் போல் துடித்தான். அவன் மனம் அரங்கனிடமே இருந்தது. இரண்டு நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடவே மீண்டும் தன் காவல் வேலையையும் தொடங்கினான். அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள்! அரங்கனுக்காக உதவி கேட்கச் சென்ற இடத்தில் இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே! குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டவன் கதையாக அல்லவா ஆகி விட்டது!இந்த ராணி ஒருசமயம் நன்றாகப் பேசினாலும் பெரும்பாலும் கடுகடுவென இருக்கிறாள். இவளை எத்தகையவள் எனப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இனி இம்மாதிரி யாத்திரைகளை யோசிக்காமல் ஏற்கக் கூடாது! போதும், போதும் என்னும் அளவுக்கு இங்கே பிரச்னைகள்!இவர்களைத் திருவண்ணாமலைக்குக் கொண்டு மகாராஜாவிடம் ஒப்படைத்து விட்டு அரங்கன் இருக்கும் அழகர் மலை நோக்கிச் செல்ல வேண்டியது தான். அரங்கனை நாமே பார்த்துக் கொள்ளலாம். இவர்கள் உதவி எல்லாம் தேவை இல்லை!" என்று நினைத்தான்.

ஒரு நாள் அவன் காவலுக்குச் செல்லும் வேளையில் முன்னர் அவன் கூடாரத்துக்கு வந்த அபிலாஷிணி என்னும் அந்தச் சிறு பெண்ணைச் சந்தித்தான். அவளை அழைத்து நிறுத்தினான். அவளோ அவள் பெயரை அவனால் சொல்ல முடியவில்லை எனக் கேலி செய்தாள். குலசேகரன் சிரித்து விட்டு அவள் பெயரை முழுதுமாக ஒரு முறை சொல்லிக் காட்டிவிட்டு, "அபிலாஷிணி, நீ கோள் மூட்டி விடுவதில் தேர்ந்தவள் போல் தெரிகிறதே!" என்றான். ஆனால் அவளோ தனக்கு ஏதும் தெரியாதே என மறுக்கவே குலசேகரன் மேலும் தொடர்ந்தான்.

அபிலாஷிணி, நான் ஹேமலேகாவுக்குச் சொல் என ஒரு வடமொழி ஸ்லோகத்தை உன்னிடம் சொன்னால் நீ அதை ராணியிடம் போய்ச் சொல்லி இருக்கிறாயே! உன்னை யார் ராணியிடம் சொல்லச் சொன்னது? " என்று கேட்க அவளோ அவனிடம் அந்த ஸ்லோகத்தின் அர்த்தம் கேட்டதாகவும் அவன் சொல்லவில்லை என்றும் சொன்னாள். அதனால் தான் மகாராணியிடம் போய்க் கேட்டதாகவும் அவர்கள் பொருளைச் சொன்னதாகவும் கூறினாள். நீங்கள் என்ன சொன்னீர்கள் எனப் புரிந்து விட்டது! படிப்பதற்கு எனக்கு ஒரு காவியத்தைக் கொடு எனக் கேட்டிருக்கிறீர்கள்! அல்லவா? அதைத் தமிழிலேயே சொல்லி இருக்கலாமே! இதை நான் புரிந்து கொண்டால் என்ன ரகசியம் வெளிப்பட்டு விடும்?" என்று கேட்டாள் அபிலாஷிணி!

3 comments:

ஸ்ரீராம். said...

அந்தப் பதிவில் நான் கேட்ட "அதற்கு என்ன அர்த்தம்?' கேள்விக்கு பதில் இங்கே இருக்கா? கலப்பை நிறைய இடங்களில் கைவரிசையைக் காட்டி இருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அரங்கனும் ,தேவியரும் துன்பம் ஏற்றார்களோ. அடியார்கள் ஏற்றார்களோ,
படிக்கத் துயரம் மிஞ்சுகிறது. அற்புதமாகச் செல்லும் இந்த நாடகத்தை நானும் தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

வாங்க வாங்க இருவரும் வாங்க. கலப்பையைச் சரி பண்ணறேண்.