எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, July 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தேடி! 1

மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊர்வலம் ஒவ்வொரு இடத்திலும் தங்கித் தங்கியே சென்றது. பெரும்பாலும் ராஜபாட்டையில் செல்லாமல் கிராமங்களின் வழியாகவே சென்றனர். எதிரில் சில இடங்களில் தில்லி வீரர்கள் எதிர்ப்பட ராணியாக வேடம் போட்டிருக்கும் சஞ்சலவதி என்னும் பணிப்பெண்  தன் முத்திரை மோதிரத்தைக் காட்டி ராணிக்கு உரிய மரியாதையைப் பெற்றுக் கொண்டு மேலே செல்ல அனுமதிக்கப்பட்டாள். மதுரையை நெருங்க சுமார் 20 நாட்கள் ஆகிவிட்டன. நெருங்க, நெருங்க அவர்களுக்குத் தயக்கங்களும், பயமும் தோன்றியது. குலசேகரன் பல வகைகளிலும் அவர்களை உற்சாகப்படுத்தினான்.

அந்தப்புரப் பெண்களும் உள்ளூரக் கவலையும் பயமும் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல மதுரையை நெருங்கிய அந்த ஊர்வலம் அழகர் மலைக்குச் செல்லும் பாதை பிரியும் இடத்தில் ஒரு நாள் நண்பகல் நேரத்தில் வந்து தண்டு இறங்கியது. மாலை வரை காத்திருந்து விட்டுக் குலசேகரனும், அழகிய நம்பியும் மலை ஏறத் துவங்கினார்கள். குறளனை முன் கூட்டியே அனுப்பி வைத்துத் தகவல் கொடுக்கச் செய்திருந்தார்கள். ஆகவே அரங்கனுடன் இருந்த அனைவரும் எந்நேரமும் அரங்கனை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகவே இருந்தார்கள். கிட்டத்தட்ட இரவு அங்கு போய்ச் சேர்ந்த குலசேகரனும், அழகிய நம்பியும் அரங்கனுக்காக வெட்டப்பட்டிருந்த கிணற்றில் குளித்தனர். வேறு ஆடை புனைந்து மிகவும் பக்தியுடனும் கவனத்துடனும் அரங்கனைத் தானே அணைத்தவாறு கையில் எடுத்துக் கொண்டான் குலசேகரன்.

மனதிற்குள்ளாக எத்தனையோ கட்டுப்பாடுகளும், சட்ட, திட்டங்களும் பூண்டு மிகவும் ஆசாரமான பட்டாசாரியார்களால் கூட உடனடியாகத் தீண்ட முடியாத அரங்கனைத் தான் எடுத்து வருவதற்கு மானசிகமாக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டான் குலசேகரன்.  பின்னர் அனைவரையும் கீழே இறங்கப் பணித்துவிட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கீழே ஒன்றாக இறங்க வேண்டாம் எனவும், அவரவர் விரும்பிய வழியில் கீழே இறங்கித் தெரிந்த திசையில் செல்லும்படியும் எல்லோரும் குறிப்பிட்ட  தூரம் சென்றபிறகு வேண்டுமானால் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் ஆனாலும் அனைவரும் நாகர்கோயிலில் சந்திப்பதே மிகவும் நன்மை தருவது என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆகவே குலசேகரன் மட்டும் அரங்கனுடன் ஊர்வலம் இருக்கும் திசை நோக்கி இறங்க மற்றவர்கள் ஆளுக்கொரு திசையாக இறங்கினார்கள். குலசேகரன் பல்லக்குக் கூட்டத்தை நெருங்குகையில் இரவு நடு ஜாமம் ஆகி விட்டது. ஆனால் அந்நேரத்திலும் விழித்திருந்த ராணி வேடம் போட்டிருக்கும் சஞ்சலவதியும் அவளது பல்லக்குத் தூக்கிகளும் சுத்தமாக நின்று அரங்கனை வரவேற்று நமஸ்கரித்து வணங்கினார்கள்.

ஒரு பிச்சைக்காரனைப் போல் எவ்விதமான அலங்காரமோ, ஆபரணங்களோ இல்லாமல் அரங்கனைப் பார்க்கையில் சஞ்சலவதி கண்ணீர் பெருக்கினாள். அந்த விக்கிரஹம் ஓர் விக்கிரஹமாகவே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஓர் பெரிய மஹா சாம்ராஜ்யத்தின் ராஜா கதியில்லாமல் நிர்க்கதியாக அங்கே நிற்பது போலவே உணர்ந்தாள். தன்னிடம் உதவி கேட்டு வந்திருப்பதாகவும் நினைத்துக் கொண்டாள்.  கூட்டத்தினர் அனைவருமே தகவல் தெரிந்ததும் எழுந்து வந்து அரங்கனை ஒவ்வொருவராக வணங்கிச் சென்றார்கள். பின்னர் சஞ்சலவதியில் பல்லக்கிலே அரங்கன் ஏற்றப்பட்டார். பஞ்சணைகளுக்கு நடுவே அவரை அமர்த்தினார்கள். சஞ்சலவதியும் ஏறிக் கொண்டாள். புனிதமான அரங்கனோடு தானும் அமரத் தயங்கிய சஞ்சலவதி வேறு வழியில்லாமல் ஏறி அரங்கன் முன்னால் மிகவும் பணிவோடு அமர்ந்து கொண்டாள். 

5 comments:

துரை செல்வராஜூ said...

ஓம் ஹரி ஓம்...

தொடர்கின்றேன்... வாழ்க நலம்..

ஸ்ரீராம். said...


.

நெல்லைத் தமிழன் said...

எப்போதும்போல் தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

அரங்கன்மேல் எத்தனை மக்களுக்கு பக்திக்கு மேல வாத்சல்யம் இருந்திருக்கு. நினைத்துப் பார்க்க முடியாத அன்பு. இதைப் படிக்கும்போது ரஞ்சனி நாராயணன் அவர்கள், தன் சகோதரியைப்பற்றி எழுதியிருந்ததுதான் மனதில் வந்தது (தெருவின் இந்தப்பக்கம் தரிசனம் ஆனதும் இன்னொரு பக்கத்துக்கு வேகமாகச் சென்று நம்பெருமாளைத் தரிசித்தது)

Geetha Sambasivam said...

அனைவருக்கும் நன்றி. நடு நடுவில் தொடர முடியாமல் இக்கட்டுகள்! :(