எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, July 05, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!ஹேமலேகாவின் துயரம்!

ஹேமலேகா அங்கே வரவில்லை என்றும் அவளுக்கு அந்தப்புரத்தை விட்டு, ராணி வாசத்தை விட்டு வெளியேற அனுமதி இல்லை எனவும் அபிலாஷிணி தெரிவித்தாள். குலசேகரன் வேதனையுடன் அவளிடம் விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தான். கூட்டத்திலிருந்து தட்டுத்தடுமாறிய வண்ணம் வெளியே வந்து தனக்கென ஒதுக்கி இருந்த குதிரை மீது தாவி ஏறினான். அரண்மனைப் பக்கம்குதிரையைத் திருப்பினான். அரண்மனையை நெருங்கினாலும் உள்ளே செல்ல அவனுக்குத் தயக்கம்.  வெளிப் புறச் சுற்றுச்சுவர் வழியாகச் சுற்றிக் கொண்டு உத்தேசமாய் அந்தப்புரச் சுவர் இருக்கும் இடம் சென்றான். அங்கே ஓர் முற்றம் போல் சதுரமான வெட்டவெளி இருந்தது. அங்கே சென்று குதிரையை நிறுத்திக் கொண்டு "ஹேமலேகா! ஹேமலேகா!" எனக் கூவி அழைத்தான்.  பதிலே வரவில்லை. நீண்ட நேரம் கூவினான்.

பின்னர் அலுத்துக் களைத்துப் போய்த் திரும்ப யத்தனிக்கையில் ஓர் சாளரக் கதவு மெல்லத் திறக்கும்சப்தமும், அதைத் தொடர்ந்து ஹேமலேகா, "சுவாமி!" என மெல்லிய குரலில் அழைத்த சப்தமும் கேட்டது. சாளரத்தினருகே அவள் உருவமும் மங்கலாகத் தெரிந்தது. குலசேகரனுக்கு உடம்பெலலம் சிலிர்த்தது. இது வரை அவளைப் பெயர் சொல்லி அவன் அழைத்ததே இல்லை. ஆனால் இப்போது வேறே வழியே இல்லை. அவளை அழைத்தே ஆக வேண்டும். அவன் கண்களிலிருந்து கண்ணீரும் பெருகியது. அவன் தழதழத்த குரலில் இருந்தே அவன் முகபாவமும் அவளுக்கும் புலப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவளாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. முற்றிலும் உடைந்தே போனாள் ஹேமலேகா! சாளரத்தின் வெளியே கைகளை வீசி நீட்டி அவனைத் தொட முயல்வது போல் செய்தாள். அதைக் கண்ட குலசேகரன் மனம் பொங்கி எழுந்தது.  அவனும் அவளைத் தொட முயல்வது போல் அவளை அழைத்த வண்ணமே கைகளைத் தூக்கினான். குதிரையும் அவன் உணர்ச்சியைப் புரிந்து கொண்டது போல் பல முறை தன்னைத் தானே சுற்றி வந்தது.

இருவரும் கைகளை மாத்திரமே ஒருவருக்கொருவர் எட்டாத உயரத்தில் இருந்து வீசிக் கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். நல்லவேளையாக நெருங்கி நிற்கவில்லை என நினைத்தான் குலசேகரன். இப்படி ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் பல நிமிடங்கள் சென்றன. குலசேகரனைப் பார்த்து ஹேமலேகா, "சுவாமி! நீங்கள் அரங்கன் சேவையில் இருக்கிறீர்கள். அரங்கனை எப்படியானும் காப்பாற்றி விடுங்கள். அது உங்கள் கடமை!அவரை விடுதலை செய்து  எங்காவது தூரத்தில் கொண்டு ஒளித்து வையுங்கள். அப்படிச் செல்லும்போது இங்கே திருவண்ணாமலையில் ஓர் அபலை இங்கே அல்லல் படுவதை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அபலைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள்.

குலசேகரன் அவளுக்காக ஒவ்வொரு கணமும் தான் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்தான். என்றாவது ஒரு நாள் எப்படியேனும் வந்து ஹேமலேகாவை இந்தச் சிறையில் இருந்து விடுவிப்பதாகவும் சொன்னான். ஹேமலேகா உடலெல்லாம் சிலிர்த்தது. தன்னிடமும் அபிமானம் கொண்ட ஓர் அன்பான மனிதன் இருப்பதை நினைத்துக் கொண்டு கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்த அவள் அதைத் தெரிவிக்கும் விதமாகத் தன் கையில் இருந்த ஓர் பாரிஜாத மலரை அவன் இருக்கும் பக்கம் நோக்கி வீசினாள். அதைக் கையில் ஏந்திக் கொண்ட குலசேகரன் தன் கணையாழியைக் கழற்றி அம்பில் கட்டி வில்லில் இட்டு மேலே அவள் பக்கம் அந்த அம்பை எய்தான். கணையாழியைக் கண்ட ஹேமலேகா, அம்பின் கழுத்திலிருந்து அதை எடுத்துக் கொண்டாள். உடனே அவளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டான் குலசேகரன். அடுத்த அரை நாழிகையில் அவனோடு சேர்ந்து இருநூறு மூடுபல்லக்குகளும் திருவண்ணாமலையை விட்டுக் கிளம்ப மன்னரும், ராணியும் எல்லோரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

2 comments:

Thenammai Lakshmanan said...

அருமை. தொடர்கதையா கீதா மேம் ?

Geetha Sambasivam said...

வாங்க தேனம்மை, தொடர் அல்ல! தென்னிந்தியா துயரங்களை அனுபவித்த வரலாறு. அதுவும் அரங்கன் பிச்சைக்காரனைப் போல் ஊர் ஊராகத் திரிந்து அலைந்த நிகழ்வு!

முதல் வருகைக்கு நன்றி தேனம்மை!