எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 01, 2019

சுல்தானியரின் துரோகமும், குலசேகரன் நிலையும்!

அம்பு ஒன்றில் "போர் செய்ய விருப்பமா? சரணாகதி அடைய விருப்பமா? வேறு எந்த நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம்!" என எழுதிய ஓலை ஒன்று கட்டப்பட்டுக் கோட்டைக்குள் அனுப்பப் பட்டது. ஹொய்சளர்கள் தாற்காலிகமாகப் போரை நிறுத்தி விட்டு ஓய்வாக அமர்ந்தார்கள். அனைவரும் ஓரளவு மகிழ்ச்சியுடனே காணப்பட்டார்கள். மறுமொழி தங்களுக்குச் சாதகமாக வரும் என எதிர்பார்த்திருந்தார்கள். அப்போது திடீரெனக் கிழக்கு வாசல் திறந்து வெள்ளைக்கொடி தாங்கிய வீரர்கள் பலர் குதிரைகளில் ஏறிக் களத்துக்கு வந்தார்கள். ஹொய்சள வீரர்கள் வழி விட்டு ஒதுங்கி நிற்க வீர வல்லாளர் இருக்கும் இடம் தேடி அவர்கள் சென்று வணக்கம் தெரிவித்துத் தட்டில் மன்னருக்கான காணிக்கைகளையும் வைத்தார்கள்.

அவர்களில் தலைவன், போரை நிறுத்துவோம் என வேண்டிக் கொண்டான். நிபந்தனை என்ன எனக் கேட்ட மன்னரிடம் சமாதானமாய்ப் போய்விடலாம் என்றான். ஆனால் மன்னர் அதை ஏற்கவில்லை. சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ள முடியாது எனவே, கப்பம் தருவதாகச் சொல்லிப் பார்த்தார்கள். மன்னர் அதையும் ஏற்காமல் கண்ணனூர்க் கோட்டையைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்படிக் கோட்டையை ஒப்படைத்தால் மிச்சம் இருக்கும் சுல்தானியரைக் கொல்லாமல் விடுவதாகவும், இல்லை எனில் அனைவரையும் நிர்மூலமாக்கி விட்டுக் கோட்டையைக் கைப்பற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார். அந்த சுல்தானியத் தலைவன் யோசித்துவிட்டுக் கோட்டைக்குள் சென்று மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சொன்னான்.மன்னரும் அதை ஒத்துக்கொள்ளச் சிறிது நேரம் கோட்டைக்குள் சென்று மற்றவர்களுடன் பேசிய சுல்தானியத் தலைவன் வெளியே வந்து தன் தளபதிகள் இம்முடிவைத் தாங்களே தனியாக எடுக்க முடியாது எனவும், மதுரை சுல்தானைக் கேட்டுத் தான் எடுக்க முடியும் என்றும் சொன்னான்.

அதை அப்படியே உண்மை என நம்பிய மன்னரும் ஒத்துக் கொண்டு எத்தனை நாட்களில் மறுமொழி கிடைக்கும் எனக் கேட்கப் பதினைந்து நாட்களுக்குள் சொல்வதாகச் சொன்னான். மன்னர் தம் தளபதிகளுடன் ஆலோசிக்கவே சிலர் ஒத்துக் கொள்ளப் பலர் வேண்டாம் என நிராகரித்தார்கள். குலசேகரன் நிராகரித்தவர்களுள் ஒருவன். அவனுக்குக் கோட்டையை இப்போதே கைப்பற்றிவிட வேண்டும் என்னும் ஆவல். அவகாசம் கொடுத்தால் மதுரையிலிருந்து பெரியதொரு படை வந்து நம்மைத் தாக்கும் எனவும் அவகாசம் கொடுக்கக் கூடாது எனவும் சொன்னான். ஆனால் மன்னரோ பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறி அவர்கள் கேட்டபடியே பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தார். உடனடியாக சுல்தானியர்களின் தூது கோஷ்டி ஒன்று மதுரைக்குப் பயணம் ஆனது.  இரவு பகலாகப் பயணம் செய்தும் ஆறு நாட்கள் ஆகிவிட்டன. அங்கே சென்ற தூது கோஷ்டி சுல்தான் கியாசுதீனைச் சந்தித்துத் தாங்கள் முறியடிக்கப்பட்டதையும் வீர வல்லாளர் கோட்டையைப் பிடிக்கத் தயாராகக் காத்திருப்பதையும் வாய்மொழியாகத் தெரிவித்து விட்டுக் கண்ணனூர்க் கோட்டைத் தளபதியின் கடிதத்தையும் கொடுத்தான்.

அதைப் படித்த கியாசுதீன் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தான். என்ன செய்யலாம் என யோசித்தான். அனைவருக்கும் இந்தச் செய்தியினால் வருத்தம் மேலிட்டது.  தங்களைச் சேர்ந்த மற்ற மக்கள் முன்னிலையிலும் கியாசுதீன் அந்த லிகிதத்தைப் படித்துக் காட்டப் பலரும் வீறு கொண்டு எழுந்தனர். உடனடியாகக் கண்ணனூர்க் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்றனர். விக்ரஹங்களையும், கல்லையும் கும்பிட்டு வருபவர்களுக்கு நாம் எக்காலத்திலும் பணியக் கூடாது என்றனர். கண்ணனூர்க் கோட்டை அவர்கள் வசம் போய்விட்டால் பின்னர் மதுரைக்கு வந்து நம்மையும் தோற்கடிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். அப்படி ஏற்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது! உடனடியாக நாம் கண்ணனூர் புறப்பட்டுச் சென்று நம் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதோடு அல்லாமல் கோட்டையையும் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.

ஒரு சிலர் ஹொய்சள வீரர்களை அடியோடு அழித்து ஒழிப்பதாக சபதமும் செய்தனர். இன்னும் சிலர் தங்கள் தலைப்பாகைகளைக் கழட்டி அவிழ்த்துத் தங்கள் குதிரைகளின் கழுத்தில் கட்டினார்கள். அப்படிக் கட்டியவர்கள் சுல்தானையும் இந்த சுல்தானிய ராஜ்யத்தையும் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யச் சித்தம் எனத் தெரிவிப்பதாக அர்த்தம். அப்படி அஞ்சா நெஞ்சம் படைத்த சுமார் ஐநூறு வீரர்கள் முன்னணியில் அணிவகுத்தார்கள். படையின் வலப்பக்கம் சைஃபுதீன் பகதூர் என்பவரும் இடப்பக்கம் அல்மாலிக் முகமது என்பவரும் தங்கள் படைகளுடன் அணி வகுக்க நடுவில் கியாசுதீன் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தன் சொந்தப்படையுடன் பங்கு கொள்ள அவர்களுக்கும் பின்னால் மேலும் மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அணி வகுத்து வர ஓர் பெரிய படை ஜெயகோஷத்துடன் கண்ணனூரை நோக்கிப் புறப்பட்டது.

எல்லோரும் அதிகமாக வெறியுடன் இருந்தார்கள். எவரும் இரவு, பகல் பார்க்கவில்லை. ஒரே மூச்சாக விரைந்தனர். கிடைத்த குறுக்கு வழிகளில் எல்லாம் சென்றார்கள்.தாங்கள் படை எடுத்து வரும் செய்தி ஹொய்சளர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதி கவனமாக இருந்தார்கள். ஆகவே விரைவாக ஐந்தாம் நாளே அதிகாலையில் அவர்கள் கண்ணனூரை நெருங்கி விட்டார்கள். வழக்கமாய்க் காவிரியைக் கடக்கும் இடத்தில் கடந்தால் சப்தம் கேட்டு ஹொய்சளர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் மேலும் கிழக்கே சென்று வெகு தொலைவில் காவிரியைக் கடந்தார்கள்.  கிழக்குத் திசையிலிருந்து கண்ணனூருக்கு அணி வகுத்து வந்தார்கள்.

இங்கே ஹொய்சள வீரர்களோ ஆபத்து ஏதும் இல்லை என நினைத்துக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருந்தனர். குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அவை ஒரு பக்கம் மேய்ந்து கொண்டிருக்க வீரர்கள் ஓய்வாகப் படுத்தபடியும் கூட்டமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்போது நடுப்பகல் வேளையாகிவிட்டபடியால் சாப்பாடு முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். தளபதிகள் தங்கள் தங்கள் கூடாரங்களில் மதிய நேரத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். மன்னரும் தன் கூடாரத்தில் படுத்திருந்தார். திடீர் என "ஹோ"வென இரைச்சல் கேட்க என்ன சப்தம் எனப் புரியாமல் திகைத்த ஹொய்சளர்களை சுல்தானியர்கள் மேலே விழுந்து கண்டபடி தாக்க ஆரம்பித்தார்கள். 

No comments: