எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, July 12, 2019

அந்த இளம்பெண் யார்?

"ஆஹா,தம்பி, நீ விளக்கை அணைத்தாயா? அப்படி எனில் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனை நியாயமானது தான்!" என்றான் வந்தவன். அவன் முகத்தில் வல்லபன் மேல் சிறிது கூடப் பரிதாபம் தோன்றவில்லை. தூக்குத் தண்டனை வெகு சகஜம் என்பது போல் அவன் சாதாரணமாகக் கூற அதைக் கேட்டு வெகுண்டான் வல்லபன். புதிதாக வந்தவனைப் பார்த்து, "ஐயா, நீங்கள் உண்மை என்னவென்று அறியாமல் பேசுகிறீர்கள். இதோ இருக்கிறானே இவனும் இவன் ஆட்களுமாகச் சேர்ந்து என்ன காரியம் பண்ணி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இளம்பெண்ணைக் கையில்,காலில் சங்கிலி போட்டுக் கட்டிப் பிணைத்து எங்கேயோ கடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை நானும் என் நண்பனும் பார்த்துவிட்டோம் என்பதால் இப்போது என்னைக் கொல்ல நினைக்கிறான் இவன். என் நண்பன் எங்கே போனான் என்றே தெரியவில்லை." என்று கூறினான்.

ஆனால் வந்தவன் இதைக் கேட்டுப் பதறினதாகத் தெரியவில்லை. மாறாக அவன் முகத்தில் மகிழ்ச்சியே தாண்டவம் ஆடியது. பெண் என்றதும் எல்லோருக்கும் தோன்றும் எண்ணம் அவனுக்குள்ளும் தோன்றியது போல் கொஞ்சம் அசட்டுக்களையும் ஏற்பட்டது. முகத்தில் இருந்த மகிழ்ச்சி நன்றாகவே தெரிய அந்தப் புதியவன் வீரர் தலைவனிடம், "பெண்ணா? அதுவும் இளம்பெண்ணா? நல்லது! நல்லது! யாருடைய பெண்? எதற்குக் கடத்தினீர்கள்? நீங்களே சொந்தமாக வைத்துக்கொள்ளும் உத்தேசம் உண்டா? அல்லது வேறு யாருக்கானும் இந்தப் பெண் போகிறாளா?" என்றெல்லாம் ஆவலுடன் கேட்டான்.  இப்போது வீரர் தலைவனுக்கு வந்தவனிடம் ஏற்பட்டிருந்த மரியாதை சுத்தமாகப் போய்விட்டது.  ஏளனமாக அவனைப் பார்த்தான்.  அதற்குள்ளாக அந்த ஆடவனுடன் வந்த இதர ஏழு நபர்கள் தங்கள் கைகளில் மூட்டைகளை ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தனர். வீரர் தலைவன் அவர்களைப் பார்த்தான். அனைவரும் நெடுந்தூரப் பயணத்தில் களைத்திருப்பது புரிந்தது அவனுக்கு. ஆனாலும் அவர்கள் அனைவருமே கட்டுமஸ்தான தேகத்துடன் காணப்பட்டனர்.

உடனேயே தன் முகத்தில் வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டான் அந்த வீரர் தலைவன். "ஹாஹாஹாஹா! இந்தப் பையன் விபரம் தெரியாமல் பேசுகிறான்! தம்பி! இதோ பார்! நீ நினைப்பது போல் எல்லாம் அல்ல! அந்தப் பெண்ணை யாரென்று நீ நினைத்தாய்? எங்கள் தலைவர் காளிங்க மர்த்தனரின் பெண் தான் அவள். அவளுக்குச் சித்தப்பிரமை! ஒரு வருடமாக இப்படித் தான் இருக்கிறாள். கொங்கு நாட்டுக்குச் சென்று அங்கே ஓர் சாமியாரிடம் இவளுக்கு வைத்தியம் பண்ணிக் கொண்டு நாங்கள் திரும்புகிறோம். சங்கிலியைக் கழட்டி விட்டால் எங்கானும் ஓடி விட்டால்? எங்கள் தலைவருக்கு யார் பதில் சொல்வது? அதனால் தான் நாங்கள் அவளைச் சங்கிலியால் பிணைத்து இருக்கிறோம்! இது வழக்கமாக எல்லோரும் செய்வது தானே அப்பா!" என்று குரலைக் குழைத்துக் கொண்டு பேசினான் வீரர் தலைவன்.

வல்லபன் திகைத்து நிற்க, அந்தப் புதியவனோ வல்லபனைப் பார்த்து, "சரிதான்! நீ இதை எல்லாம் கவனிக்கவில்லை போலும்! என்ன பையனப்பா நீ!" என்ற வண்ணம் மறுபடி கொஞ்சம் அசட்டுச் சிரிப்பாகச் சிரித்தான்.  வல்லபன் தடுமாறிவிட்டான். ஆனாலும் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு யோசித்துப் பார்த்தவனுக்கு உண்மை புலப்பட்டது. உடனே புதியவன் பக்கம் திரும்பி, "ஐயா! இவர் சொல்லுவதெல்லாம் பொய்! நிச்சயமாய் அந்தப் பெண் பைத்தியமே அல்ல. ஏதோ ஓர் நாட்டின் அரசகுமாரி அவள். அவளைப் பார்த்தால் ராஜ லட்சணங்கள் தெரிகின்றன.  ஐயா, புதியவரே! நீங்களே அந்தப் பெண்ணை நேரில் கண்டு அவளிடம் விசாரியுங்கள்!" என வேண்டுகோளையும் விடுத்தான் வல்லபன்.  உடனேயே வந்தவனும் வல்லபன் சொன்னதை ஆதரித்து வீரர் தலைவனிடம், அந்தப் பெண்ணையே தான் நேரில் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதாகச் சொன்னான். வீரர் தலைவனுக்கு முகம் கறுத்தது. உள்ளூரக் கோபமும் கொந்தளித்தது. வல்லபனைக் கடுமையாகப் பார்த்தான்,

புதியவரைப் பார்த்து, "ஐயா! பெரிய மனிதரே! நீர் உண்மையிலேயே ஓர் பெரிய மனிதர் என எண்ணியே நான் இத்தனை நேரமாய் உங்களுக்கு பதில் கூறி வருகிறேன். இப்போது இப்படிச் சொல்கிறீரா? நான் கூறுவது உண்மையா, பொய்யா என உமக்குத் தெரியவேண்டும்! அது தானே! வாரும் ஐயா!  அந்தப் பெண்ணிடம் அழைத்துச் செல்கிறேன். நீரே அந்தப் பெண்ணிடம் எல்லா விபரங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்." என்று சொல்லிய வண்ணம் அங்கிருந்து ஒரு சேவகனுக்குக் கண் ஜாடை காட்ட, அவனும் தீவர்த்தியைத் தூக்கிக் கொண்டு முன்னே சென்றான். அனைவரும் அந்தப் பெண் இருந்த அறைக்குள் சென்றனர். அங்கே அந்தப் பெண் மஞ்சத்தில் சோர்ந்து போய்ப் படுத்திருக்க அவளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவள் உடல் மீது தாறுமாறாய்க் கிடந்தது.

No comments: