எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, October 05, 2006

37. ஓம் நமச்சிவாயா-8

கைலை யாத்திரையின்போது உடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறேன். பயணம் மூன்று நிலைகளில் அமையும். ஆகவே அதற்குத் தகுந்தவாறு சாப்பாடு, உடல் பயிற்சி மட்டும் இல்லாமல் கொண்டு போகும் பொருட்களும் இருக்க வேண்டும்.பயணத்தின் மூன்று நிலைகள் கீழ்வருமாறு:

முதல் நிலை: நமது இருப்பிடமான ஊரில் இருந்து காட்மாண்டு வரை செல்லுதல்.

2-ம் நிலை: காட்மாண்டுவில் இருந்து கைலை மலை அடிவாரம் ஆன தார்ச்சன் (பேஸ் கேம்ப்) வரை செல்லுதல்.

3. கைலை மலையைச் சுற்றி வரும்(பிரதட்சிணம்) "பரிக்ரமா" செல்லுதல்.
பின்னால் திரும்பி வரும்போது கொண்டு போகும் பொருட்களே உபயோகம் ஆகிவிடும் என்பதால் அதைச் சேர்க்க வேண்டாம்.
பயணத்தின் போது தேவைப்படும் பொருட்களின் விபரம்:

1. சூட்கேஸ்: சென்னை அல்லது நாம் இருக்கும் இடத்தில் இருந்து காட்மாண்டு வரை செல்லும் நாட்களுக்கும், பின் திரும்பி காட்மாண்டு வந்ததும் உபயோகிக்கவும் தேவையான உடைகள் இதில் இடம் பெறும். திருக்கைலை யாத்திரை போகும் சமயம் இந்தப் பெட்டியைப் பூட்டி ஹோட்டலில் கொடுத்துவிட்டால் அவர்கள் பாதுகாப்பு அறையில் இருக்கும். திரும்பி வந்ததும் அடையாளச் சீட்டைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் கொண்டு போகும் அதிகப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போன்றவற்றை ஹோட்டலில் இருக்கும் லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் இல்லை.

2. முதல் பை:(பூஜைப் பொருட்கள்)
1.இதில் மானசரோவர் தீர்த்தம் எடுக்க இரண்டு 5 லிட்டர் கேன், 500-மில்லி பாட்டில்-1(கெளரி குண்டம்) தீர்த்தம் எடுக்க.மானசரோவரில் மணல் எடுக்க ஒரு பை, எம்.சீல்-1.
2.மானசரோவரில் மூர்த்தங்கள் சேகரிக்க ஒரு துணிப்பை-1
3. உலர் பழ வகைகள். மானசரோவரிலும், கைலையிலும் நைவேத்தியம் செய்ய(வீட்டிற்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் அளவுக்கு)
4. நன்கு காய வைத்த வில்வம் இலைகள் ஒரு பாலிதீன் பையில், கட்டி கற்பூரம், ஊதுபத்தி, நெய்த்திரி, மற்றும் மண் அகல் அல்லது வெங்கல விளக்குகள், மற்றும் நறுமணம் உள்ள பூஜைப் பொருட்கள்.

3. இரண்டாம் பை(யாத்திரைக்குத் தேவையான துணிகள் வைக்க)
பெண்கள், ஆண்கள் எல்லாருக்குமே உள்ளாடைகள் நிறையவே வேண்டும். ஒரு டஜன் கூட வைத்துக் கொள்ளலாம். அதைத் தவிர
1.தெர்மல் வேர் 1 செட் போதாது. 2செட் வைத்துக் கொள்ளவும்.
2.ஆண்களுக்கு ஹாஃப் ஸ்வெட்டர், பெண்களுக்கு உல்லன் ப்ளவுஸ்(டெல்லியில் கிடைக்கும்)
முழு ஸ்வெட்டர்,
உல்லன் க்ளவுஸ்,
தெர்மல் க்ளவுஸ்,
உல்லன் தொப்பி, மஃப்ளர், நைலான் மற்றும் உல்லன் சாக்ஸ், ரெயின் கோட்,
ப்ளாஸ்டிக் செருப்பு,
ஆக் ஷன் ட்ரெக்கிங் ஷூ
காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் வரை அணிய ட்ரெஸ் செட் (இதில் கூடிய வரை ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட்டும், பெண்கள் ட்ராக் சூட் அல்லது சல்வார், குர்த்தாவும் அணிவதுதான் நல்லது.
திரும்பி வரும்போது அணியவும் தேவையான உடைகள் மற்றும் டவல், கைக்குட்டை போன்றவைகள்.
சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க Hat, Mask, Trek Bag போன்றவை ட்ராவல்ஸ்காரர்களால் அளிக்கப் படும். ட்ராவல்ஸ்காரர்கள் கொடுக்கும் இந்தச் சிவப்புப் பையில் தான் நம் துணிகளை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுத்து விட்டால் நம்முடனேயே வந்து கொண்டிருக்கும் ட்ரக்கில் வரும்.
ப்ளாஸ்டிக் பக்கெட் ஒரு 2 அல்லது 3 லிட்டர் பிடிக்கும் அளவு, ஒரு மக்.(மானசரோவரில் குளிக்க முடிந்தால் குளிக்கவும், மற்றும் ட்ராவல்ஸ்காரர்கள் அளிக்கும் வெந்நீர் வாங்கிக் கொள்ளவும் பயன்படும்.)

இதைத் தவிர சோல்டர் பேக் அல்லது backpack என்று சொல்லப்படும் ஒரு பையில் கீழ்க்கண்ட பொருட்களை வைத்துக் கொண்டு நாம் காரில் போகிறபோதும் சரி, கைலை பரிக்ரமா போதும் சரி கூடவே கொண்டு வர வேண்டும். அந்தப் பையில்

குளியல் சோப், துவைக்கும் சோப்
டூத் ப்ரஷ், டூத் பேஸ்ட்
நிவியா அல்லது பாண்ட்ஸ் கோல்ட் க்ரீம், மற்றும் சன் க்ரீம்
வாசிலின், சீப்பு, கண்ணாடி(முகம் பார்க்க)
கத்தரிக்கோல்(சின்னது) ஒரு டார்ச்
தலைக்குத் தேவையான க்ரீம்
டாய்லெட் டிஸ்ஸூ பேப்பர் ரோல்

பனியினால் ஏற்படும் கண்பார்வைக் குறைவையும் பனியில் சூரிய ஒளி படும்போது ஏற்படும் கூசுதலைத் தவிர்க்கவும் கறுப்புக் கண்ணாடி(இது முக்கியம்)
காமரா, அட்ரஸ் டைரி, பேனா

அவரவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள்
ஸ்டீல் ஃப்ளாஸ்க் பெரியது(2 பேரானால்)
தேவைப்பட்டால் கூலிங் ஃப்ளாஸ்க்.

இதைத் தவிரப் பரிக்ரமாவுக்குச் செல்லும்போது கீழ்க்கண்ட பொருட்கள் அடங்கிய 3 பாக்கெட்டுகள் தேவை. இவை நாம் சாப்பிட மட்டும். ஆகவே கையிலிருக்கும் சோல்டர் பையில் போடவேண்டும்.

முந்திரி,திராட்சை, பேரீச்சை, தேவையானால் பாதாம்,பிஸ்தா, எலக்ட்ரால், க்ளூக்கோஸ்,மில்க் சாக்லேட்,பிஸ்கட், கடலை, வாந்தி வந்தால் போட்டுக் கொள்ள ஆல்பக்கோடா பழம்,நாரத்தங்காய் ஊறுகாய் அல்ல்து உப்பு எலுமிச்சங்காய் ஊறுகாய்,ஆரஞ்சு மிட்டாய்கள்.

எல்லாவற்றையும் சென்னையில் இருந்தே எடுத்துப் போனதால் எல்லாவற்றையும் பாக் செய்து விட்டுப் படுத்தோம். காலை 4 மணிக்கே ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து "waking call" வந்தது. இனி திருக்கைலை யாத்திரையின் முதல் நாள் துவக்கம். பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தயாரானோம்..கீழே சாப்பிடும் இடத்துக்கு வரச் சொன்னார்கள். அன்று காபி, டீ ஹோட்டல்காரர்களே கொடுத்தார்கள். இரண்டு பஸ்கள் வந்தன. அவரவர் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். எல்லாரும் "ஓம் நமச்சிவாயா" சொல்ல அங்கே இருந்தவர்களில் வயதானவர் ஒருத்தர் கற்பூரம் ஏற்றிச் சுற்றிக் கொட்ட எல்லாரும் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே பிரயாணத்தைத் துவங்கினோம்.

பி.கு; மேலே குறிப்பிட்ட பொருட்களில் என்னுடைய அனுபவத்தின் படி யாரும் டூத் ப்ரஷ், பேஸ்ட் கொண்டு போக வேண்டாம். மவுத் வாஷ் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குளிரிலே அவர்கள் கொடுக்கும் ஒரு கப் வெந்நீரில் பல் எல்லாம் தேய்க்க முடியாது. பல் தந்தி அடிக்கும்.. ஊருக்குத் தகவல் கொடுக்கவும் முடியாது. ரொம்பக் கஷ்டம். மேலும் சோப்(குளியலுக்கோ, தோய்க்கவோ) தேவை இல்லை. மானசரோவரில் குளிக்க முடிந்தாலே பெரிய விஷயம். எங்கே துவைக்க? அவ்வளவுதான் உங்க கை உங்க கிட்டே இல்லை.லிக்விட் சோப் உடலுக்கு மட்டும் எடுத்துப் போங்கள். தினமும் முகம், கை, கால் கழுவ உபயோகப் படும். இது மாதிரி தேவைப் பட்ட சமயங்களில் என்னுடைய அபிப்பிராயத்தையும் சேர்த்துச் சொல்கிறேன்.

பெண்களுக்கு சாக்ஸ் வாங்கும்போது டெல்லியில் வாங்குவது நல்லது. அங்கே கால் கட்டை விரல் மட்டும் தனியாக மாட்டும்படிக் கிடைக்கும். செருப்புப் போட்டுக் கொள்ளும்போது வசதியாக இருக்கும். பொதுவாய் வடமாநிலங்களிலேயே பெண்கள் சாக்ஸ் என்றால் இப்படித்தான் தருவார்கள்.

10 comments:

Porkodi (பொற்கொடி) said...

காய்ச்சல் வராப்புல இருக்கு.. வேண்டிக்கோங்க எல்லாரும் :(

Porkodi (பொற்கொடி) said...

யம்மாடி.. எப்படி வயசானாலும் உங்களுக்கு எல்லாம் இவ்ளோ நல்லா நினைவு இருக்கு! கலக்கறீங்க போங்க :)

எம் சீல் எதுக்கு? மணல் பையை மூடவா? அதே போல அங்க சன் க்ரீம் என்னத்துக்கு :-/ கை பை கை பை னு சொல்றதே ஒரு மூட்டை ஆகிடுச்சு, இதுல ட்ரக் வேறயா.. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், நிஜமான காய்ச்சலா? அல்லது இந்தப் பதிவால் வந்த காய்ச்சலா? அதான் யாருமே வர மாட்டேங்கிறாங்களே! ஆன்மீகம் படிக்க யாருமே இல்லைங்கறது ரொம்பவருத்தமா இருக்கு.
எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு யார் சொன்னது உங்களுக்கு? ஞாபக சக்தியைப் பார்த்தீங்க இல்லை? இது என்ன மூட்டை, இதெல்லாம் விட மூட்டை தூக்கி இருக்கோம். என்னோட முந்தைய பதிவுகளில் பாருங்க.

Porkodi (பொற்கொடி) said...

வயசாகல வயசாகலனு சொல்லறத நிறுத்திட்டு கேட்ட கேள்விக்கு பதில சொல்லுங்கம்மா.. நல்ல விஷயங்களுக்கு எப்போதுமே ஆதரவு கம்மியா தான் இருக்கும், கடமையைச் செய் பலனை எதிர் பாராதே னு உங்க வயசுக்கும் அனுபவத்துக்கும் தெரிய வேணாமா உங்களுக்கு :)

Porkodi (பொற்கொடி) said...

நிஜமான காய்ச்சல் தான், சிக்ககுனியாவோனு நடுங்க வெச்சுடுத்து :(

Geetha Sambasivam said...

நறநறநறநற பொற்கொடீஈஈஈஈஈஈஇ, சிக்கன் குனியாவா இருக்குமோங்கற கவலையிலே ஒண்ணும் சொல்லலை. உடம்பு சரியாகட்டும் அப்புறம் கவனிச்சுக்கிறேன்.

Geetha Sambasivam said...

வேதா, இப்போவெல்லாம் முன்னை மாதிரி எழுத முடியலை. போட்டு வந்ததின் தாக்கம் இப்போத் தான் தெரியுது. தொடர்ந்து எழுத முடியலை. கையில் வலி வந்துடுது.

Geetha Sambasivam said...
This comment has been removed by a blog administrator.
Geetha Sambasivam said...

சொக்காயி, வாங்க புதுவரவா? நீங்க, நல்வரவு.

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதா, இப்போவெல்லாம் முன்னை மாதிரி எழுத முடியலை. போட்டு வந்ததின் தாக்கம் இப்போத் தான் தெரியுது. தொடர்ந்து எழுத முடியலை. கையில் வலி வந்துடுது

இதெல்லாம் சகஜம்தான் 70 வயசிலெ ஏதோமுடிஞ்சவரைஎழுதுங்கோ நாங்க அட்ஸெட் பண்ணிக்கறோம்.