நியாலம் வந்ததில் இருந்தே என் கணவருக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. கொஞ்சம் நடந்தாலே மூச்சு இரைத்தது. அதுவும் அங்கே படி ஏறி இறங்க ரொம்பச் சிரமப்பட்டார். தெருக்கள் வேறு ஏறி ஏறி இறங்க வேண்டும். ரொம்ப உயரமாக இருக்கும்,. திடீரெனக் கீழே இறங்க வேண்டும். எனக்குப் பருவ நிலையின் மாற்றம் எப்போதுமே ஒத்துக் கொள்ளாது. மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கும். இப்போது வர ஆரம்பித்தது. எங்கள் குழுவில் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லக் கூடியவர்கள் ஒரு பத்து பேரும், பூரண ஆரோக்கியத்துடன் திரு மனோஹரைத் தவிர ஒரு 4,5 பேரும் தான் இருந்தார்கள். இந்நிலையில் சாகா பிரயாணம் துவங்கியது. எங்கள் குழுவில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரைக்கு வருகிறார். அவர் தலைமையில் சிலர் வந்தார்கள். ஆனால் இந்தக் கோபாலகிருஷ்ணனுக்கு நியாலம் வந்ததில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் போனது. அதோடு சாகாவுக்கும் கிளம்பி வந்தார். ஏற்கெனவே டாக்டர் நர்மதாவின் உடல் நிலையிலும் பிரச்னை இருந்தது.
வழியில் ஒரு சிறிய நதிக்கரையில் பகல் 2 மணி சுமாருக்கு வண்டிகள் நின்று எல்லாரும் மதிய உணவு எடுத்துக் கொண்டோம். டிரைவர்கள் எல்லாருக்கும் நாங்கள் சாப்பிடும் சைவ உணவு ஏற்காது என்பதால் அவர்களுக்கு என்று இந்த மாதிரிச் சில இடங்களில் திபெத்தியர் உனவு விடுதிகள் இருக்கின்றன. அவை வந்ததும் வண்டிகள் நிறுத்தப்பட்டு டிரைவர்கள் அங்கே போய்ச் சமைத்துத் தரச் சொல்லிச் சாப்பிடுவார்கள், எங்களுக்குப் பூண்டு, வெங்காயம், மசாலா சேர்க்காத உணவு.
வழி எல்லாம் நிறைய நதிகள், ஓடைகள், சிற்றோடைகள் கடக்க வேண்டி இருந்தன. மனித நடமாட்டம் என்பதே இல்லை. நியாலத்தில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட சீனர்கள் தான். சீன் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மக்களை அங்கே குடியேற்றிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் அவர்கள் ஆதிக்கம்தான். உள்ளூர் மக்கள் நம்மிடம் வந்து காசு கேட்கிறார்கள். சாப்பிடக் கேட்கிறார்கள். மிகவும் வறுமையுடனும், இழிந்த நிலையிலும் இருக்கிறார்கள். பெண்கள் வந்து சூழ்ந்து கொண்டு பொட்டு, துணி, வளையல், மணிமாலை முதலியன கேட்கிறார்கள். என்னிடம் இருந்த வளையல்களை எல்லாம் கொடுத்தும் ஒரு கூட்டம் சூழ்ந்து கொள்ளவே எல்லாரும் சேர்ந்து என்னை வண்டியில் ஏறிக் கதவை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். அப்படியும் ஜன்னல் கதவை வந்து தட்டித் தட்டிக் கேட்டார்கள். பிஸ்கட், சாக்லட்,தின்பண்டங்கள் என்று யாரிடம் என்ன இருந்ததோ அதைக் கொடுத்தோம். எங்களுடன் வண்டியில் கூடவரும் பெரியவர் சங்கரன் தன் கைப்பையில் இருந்து பிரசாதங்கள் விபூதி, குங்குமம் என்று குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளுடன் ஒரு குழந்தையாக விளையாடினார்.
மலைகளின் தோற்றம் விசித்திரம் விசித்திரமாக இருந்தது. ஒரு இடத்தில் பாறைகளாய்த் தோற்றம் அளிக்கும். ஒரு இடத்தில் நீலமலைகளாகக் காட்சி அளிக்கும். ஒரு இடத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும். அதே போல் மலைகளின் மேலிருந்து விழும் தண்ணீரும். வெள்ளியை உருக்கி ஊற்றியது போலப் பனி உருகி ஓடி வந்து கொண்டிருக்கும். தண்ணீர் சில இடங்களில் நிறமற்று இருக்கும். சில இடங்களில் பளபளக்கும் பச்சை நிறத்துடன் நடுவே வெள்ளி ஜரிகை போட்டது போல வெள்ளி நிறத்துடனும் இருக்கும். ஒரு ஏரி முழுக்கமுழுக்க நீல மலைகளின் ஒளி விழுந்து பிரதிபலிக்கிறது. தூரத்தில் இருந்தே ஒரு ஏரி முழுக்க பலவிதமான நீலக் கலர்களில் எத்தனை ரகம் உண்டோ அத்தனை ரகத்திலும் காட்சி அளிக்கிறது. கிட்டே போனால் அப்பாடி,எவ்வளவு பெரிய ஏரி? என்ற வியப்பு ஏற்படுகிறது.
இத்தனை இருந்தும் மருந்துக்குக்கூட புல், பூண்டு கிடையாது. ஏதோ ஒரு வகையான செடிகள் தான். மரங்களே பல மைல்களுக்குக் கிடையாது. அங்கங்கே "யாக்" எனப்படும் காட்டு எருமைகள், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில இடங்களில் காட்டுக் குதிரைகளும் தென்பட்டன. காட்டு எலி ஒரு முயல் அத்தனை பெரிசாக இருக்கிறது. அதை முயல் என்றே முதலில் நினைத்தோம். அப்புறம்தான் தெரிந்தது காட்டு எலி என்று. திபெத்தியன் நாய்களும் கூட மிகப் பெரிதாக இருந்தன. நாங்கள் ஏற்கெனவே இந்த நாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருந்தோம். ஆகவே தனியாக எங்கேயும் போகமாட்டோம். அன்று மாலை சுமார் 6-00 மணி அளவில் நாங்கள் பிரம்மபுத்திரா நதி ஆரம்பித்து ஓடி வரும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நதியைக் கடந்தால் "சாகா" என்னும் தங்கும் இடம். குளிர் தெரிய ஆரம்பித்தது. Altitude மாற்றத்தினால் யாருக்கு என்ன தொந்திரவு இனிமேல் தான் தெரியும். எல்லாரும் தலைக்குத் தொப்பி, கழுத்தைச் சுற்றி மஃப்ளர், ஸ்வெட்டர், கோட் என்னும் ஜெர்கின் எல்லாம் போட்டுக் கொண்டு இருந்தோம். பிரம்மபுத்திரா நதியைக் கடந்து, கடக்கும் இடத்தில் பாலம் சற்றுச் சிறியதாக இருக்கிறது. இருந்தாலும் எல்லா இடங்களிலும் இம்மாதிரி பாலங்களைக் கடந்து ரோடுக்கு வரும் இடம் நடுவில் சற்று இரும்புத் தண்டவாளங்களைப் போட்டு இருப்பதால் அதை வண்டி கடக்கும் போது "திக், திக்" என்று அடித்துக் கொள்ளும். மலைப் பாதையில் உயரத்தில் இருந்து இறங்கினால் சரிவாக எல்லாம் இறங்க முடியாது. கிட்டத் தட்ட 10 அடி அல்லது 15 அடிக்குமேல் உயர்த்தில் இருந்து வண்டி குதிக்கும். அப்படியே செங்குத்த்த்த்த்த்த்தாகக் கீழே இறங்கும். எல்லாருடைய உயிரும் ஒரு முறைக் கைலை போய் விட்டு மீண்டு வரும். இம்மாதிரி இன்னும் 2 நாள் போயாக வேண்டும். "சாகா" வந்ததும் அங்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் இடம் சென்றதும், நாங்கள் நாங்களாகவே ஒரு சுமாரான அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உள்ளே போய்ச் சாமானை வைத்தோம்.
சாமான்கள் ஏற்றிய ட்ரக் இன்னும் வராததால் காபி, டீக்கு நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.ஆகவே போய் ஃபோன் செய்து விட்டு வரலாம் என்று நினைத்தோம். நான் கழட்டி வைத்த தொப்பியைப் போட்டுக் கொள்ளப் போனபோது காதில் போட்டிருந்த கம்மல் கழன்று இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நேபாளில் லாக்கரில் வைக்கிறேன் என்றதற்கு என் கணவர் கம்மல் இல்லாவிட்டால் முகம் நல்லா இல்லை, (இல்லாவிட்டாலும் இருக்கிறது தானே இருக்கும்) அவருக்குப் பயமாக இருந்திருக்கு. என்று சொல்லி விட்டார். கழன்ற கம்மலைப் போட நினைத்துக் காதில் கை வைத்தால் கம்மல் மட்டும் வந்தது. திருகு காணோம். நல்ல வேளையாக மாட்டல் கம்மலிலேயே இருந்தது. திருகைத் தேடினோம். கிடைக்க வில்லை. கம்மலைக் கழற்றிக் கைப்பையில் வைத்துக் கொண்டு ஃபோன் செய்யப் போனால் அங்கே அவங்க காட்டிய தொகை சீனப் பணத்தில் 48 யுவான் என்றிருந்தது. சற்று நேரம் பேசிப் பார்த்து விட்டு (கால்குலேட்டரிலேயே தான்) வந்துவிட்டோம். மனதில் கம்மல் திருகு தொலைந்ததற்கும் இப்போது பேச முடியாமல் போனதற்கும் முடிச்சுப் போட்டு நினைவுகள். அறையில் வந்து ஜெர்கினைக் கழற்றினால் கீழே ஏதோ விழுந்த சத்தம். உடனேயே லைட்டைப் போட்டுப் பார்க்கலாம் என்றால் அங்கே ஜெனரேட்டர் போட்டால்தான் மின்சாரம் வரும். மின்சாரமெல்லாம் கிடையாது. தடவித் தடவிப் பார்த்தபோது கம்மலின் திருகு கிடைத்தது ஒருவழியாக.
11 comments:
நல்ல வேளையாக மாட்டல் கம்மலிலேயே இருந்தது. திருகைத் தேடினோம். கிடைக்க வில்லை. சே தலைவலிக்கு தப்பு தலைவிக்கு அங்கே போயும் தலவலிக்கு பதில் திருகு வலி வந்துவிட்டதே
அப்பாடா பாதிதூரம் வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.போவதை பற்றி மறு பரிசீலனை செய்கிறேன்.
நல்ல வேளையாக மாட்டல் கம்மலிலேயே இருந்தது. திருகைத் தேடினோம். கிடைக்க வில்லை. சே தலைவலிக்கு தப்பு தலைவிக்கு அங்கே போயும் தலவலிக்கு பதில் திருகு வலி வந்துவிட்டதே
அப்பாடா பாதிதூரம் வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.போவதை பற்றி மறு பரிசீலனை செய்கிறேன்.
//என் கணவர் கம்மல் இல்லாவிட்டால் முகம் நல்லா இல்லை, (இல்லாவிட்டாலும் இருக்கிறது தானே இருக்கும்) //
ஹிஹி தெரிஞ்சா சரி
நல்லாவே விபரமாக எழுதிகின்றீர்கள்.
vandhuten.. adukulla 3 paagam potachu.. ena panradhu namaku madipu ilanalum, naama anbu vechutomla! pogama iruka mudiyadhu.. inum oru daram en pakkam varama poninga nu vainga, paati ellu paatiya promote agiduvinga, jakradai :)
தி.ரா.ச.சார், நிச்சயமாய்ப் போவது பற்றி நன்கு யோசிக்கவும். உங்கள் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஹி,ஹி,ஹி, நான் தலைவி என்பதால் யாரேனும் செய்த சதியோ? இப்போதான் தோணுது. ரொம்ப டாங்க்ஸு சார்.
புலி, இது நல்லாவே இல்லை, ஆமாம் சொல்லிட்டேன், உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நறநறநறநறநற போர்க்கொடி, வந்துட்டது யாருக்குத் தெரியும்? அவங்க அவங்க இங்கே கம்ப்யூட்டர் எடுக்காமப் பட்ட சிரமம் எல்லாம், அதுவும் சொந்த ப்ளாகே வரலைன்னா என்ன செய்றது? என்னவோ அங்கே ரொம்ப ஒழுங்கு மாதிரி, கொடுத்த மெயிலுக்குப் பதிலே இல்லை, உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என்ன மெயில சொல்றீங்க.. நான் எல்லாத்துக்கும் பதில் அனுப்பிச்சுருக்கேனே? உடம்பு இப்போ கொஞ்சம் தேவலை, சைனஸ்கு ஒரு ஸர்ஜரினு சொன்னாங்க, வழக்கம் போல் நாம ஜகா வாங்கிடுவோம்னு நம்பறேன் :)
வேதா, முழுக்கப் படிச்சுட்டுப் போகறதைப் பத்தி முடிவு செய்யவும்.
போர்க்கொடி, மெயில்ன்னா கணினி மூலம் அனுப்புவோமே அது, மயில் இல்லை, அது பறவை. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நறநறநற
//எனக்குப் பருவ நிலையின் மாற்றம் எப்போதுமே ஒத்துக் கொள்ளாது. மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கும். இப்போது வர ஆரம்பித்தது.//
aanalum payanam saidhullreegal.
Hats off to you.Vivarangal miga arumai.--SKM
Post a Comment