எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, October 20, 2006

42.ஓம் நமச்சிவாயா-13

எங்களுடன் வந்தவர்களில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரை வருகிறார் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நியாலத்திலேயே உடல் நிலை முடியாமல் போனது இங்கே வரும்போது நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கிறது. அவரை எங்கள் அறைக்குக் கூட்டி வந்து படுக்க வைத்து ஆக்ஸிஜன் கொடுக்க முயன்றார்கள். அவர் தனக்கு ஒன்றும் இல்லை என மறுக்கப் பின் அவரோடு வந்தவர்களில் ஒருவர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குச் சிகிச்சை தரப்பட்டு மேலே பயணம் தொடர வேண்டாம் என வற்புறுத்தப்பட்டார். சாகாவில் தான் மருத்துவ உதவி கிடைக்கும். மேலே போகப்போக மருத்துவ உதவி கிடைக்காது. சாகா கிட்டத்தட்ட ராணுவக் கண்டோன்மெண்ட் மாதிரி ராணுவ வீரர்கள் நிறைந்த ஊராக இருந்தது. ஆகவே அங்கே மருத்துவ உதவியும் கிடைத்தது. சீன மொழி தெரிந்த ஸ்ரீமதி ஸ்ரீலட்சுமி என்பவர் கூடப் போய் பேசும்போது மொழி பெயர்த்து உதவினார். இவர் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு மொழியில் பிரபல எழுத்தாளர் என்றார்கள். இவர் தன்னுடைய சம்மந்தி ஸ்ரீமதி செளமினி மற்றும் அவர் தோழி ஸ்ரீமதி கண்ணம்மா என்பவருடனும் வந்திருந்தார். குழுவிலேயே இவர்களுக்கு தனிக் கவனிப்பு இருந்து வந்தது. மூவரும் பலவிதப் பயிற்சிகளை மேற்கொண்டு இதற்கெனத் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். பஜனை,கூட்டுப் பிரார்த்தனை முதலியன இவர்கள் இல்லாமல் நடைபெறாது. இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. பின்னால் வரும்.

திரு கோபாலகிருஷ்ணன் வரப்போவது இல்லை என்பது நிச்சயம் ஆகி விட்டது. திருமதி நர்மதாவும் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் திரு கோபாலகிருஷ்ணன் அளவுக்கு இல்லை என்பதால் அவர் பயணத்தைத் தொடர்ந்தார். சாப்பாடு நல்ல சாப்பாடாகக் கொடுத்து வந்தாலும் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பலராலும், அநேகமாக எல்லாராலும் சாப்பிட முடியவில்லை. 1/2 வயித்துக்கு ஏதோ கொறிப்போம். கூடியவரை நீர் ஆகாரம் மட்டும் சாப்பிட்டு வந்தோம். காபி,டீ அவர்கள் கொடுக்கும் பெரிய கப்பில் குடிக்க முடியாது என்பதால் அதற்குப் பதில் ஹார்லிக்ஸ், சாக்லேட் ட்ரிங்க் என்று குடித்து வந்தோம். காலை உணவாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகைக் கஞ்சி, பாதாம், பிஸ்தா போட்டது, பான் கேக், தோசை, பூரி என்று கொடுத்தார்கள். எதுவும் தொடப் பிடிக்காது. வெறும் ஹார்லிக்ஸ் மட்டும் சாப்பிடுவோம். மத்தியானம் வண்டியை டிரைவர்கள் எங்கே சாப்பிட ஏற்பாடு செய்துள்ளதோ அங்கே நிறுத்துவார்கள். சிலசமயம் ரொம்ப சீக்கிரமாக இருந்தால் வேறு எங்காவது நிறுத்துவார்கள். வெறும் சாதம், கலந்த சாதம் ஒன்று, சப்ஜி(சாம்பார் என்ற பெயரில்) மோர் அல்லது தயிர், பதப்படுத்தப்பட்ட பழங்கள், ஜூஸ் இருக்கும். சாதமும் தயிரும் சாப்பிட்டு விட்டுப் பின் ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். வெட்ட வெளியில்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது திடீரெனக் காற்று வீசும், அல்லது பனிமழை பெய்யும். ஜவ்வரிசிகள் போல ஐஸ்கட்டிகள் விழும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை என்பதே கிடையாது. இது கிட்டத் தட்ட 800 கி.மீட்டருக்கு நீடிக்கிறது. தண்ணீருக்குக் குறைவு இல்லை. ஆனால் எல்லாத் தண்ணீரும் பனி உருகி ஓடி வருவதால் வரும் தண்ணீர் என்பதாலும் அந்தப் பனிக்குப் பசுமை இருக்க முடியாது என்பதாலும் மரங்களே இல்லை. சில இடங்களில் ஒருவகைப் புல் இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் சில வீடுகள் இருக்கும். சில இடங்களில் கட்டுகிறார்கள். கட்டினாலும்மொத்தம் 10 வீடுகளுக்குள் தான் இருக்கும். எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள். குறுகிய வாயிலைக் கொண்டது. ஒரே ஒரு ஜன்னல் போன்ற அமைப்பைக் கொண்டது. வீடுகள் இருக்கும் இடங்களில் "யாக்" என்று சொல்லப்படும் காட்டெருமைகளைப் பழக்கி வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் ஒரு நாய் கட்டாயம் இருக்கிறது. இந்தக் காட்டெருமைகள்,ஆடுகள், குதிரைகள் மேயும்போது காவல் போலக் கூடப் போகிறது.

அன்று இரவு எங்களுடன் திரு கிருஷ்ணா என்ற எங்கள் பயணக் கண்காணிப்பாளர் மட்டும் தங்கினார். மறுநாள் காலை வெளியே வந்து பல் தேய்த்து, முகம் கழுவ முடியவில்லை. குளிர். ஒரு பெரிய ட்ரம் நிறைய வெந்நீர் போட்டு வைத்திருந்தார்கள். எல்லாம் எடுக்கும்போது சூடாக இருந்தது. கையில் விடும்போது ஆறி விடுகிறது. கையை எல்லாம் இழுக்க ஆரம்பித்தது. தேள் கொட்டினால் கடுக்குமே அதுமாதிரிக் கையெல்லாம் கடுக்க ஆரம்பித்தது. எனக்கு ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கும்போது குளிர் நாட்களில் கை, காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அரிப்பு ஏற்படும். சில சமயம் கை, கால் விரல்கள் எல்லாம் சிவந்து வீங்கி விடும். அதனால் கொஞ்சம் பயமாக இருந்தது,என்ன ஆகப் போகிறதோ என்று. நல்லவேளையாக காலில் உல்லன் சாக்ஸ் போட்டிருந்த காரணத்தாலும், தண்ணீர் தொட்டு வேலை செய்யும் நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தாலும் காலில் ஏற்பட்ட அரிப்பு ஒன்றையும், மூக்கில் இருந்து தொடர்ந்து வந்த ரத்தத்தையும் தவிர வேறு பயந்த மாதிரி மூச்சு விடுவதில் தொந்திரவு எதுவும் வரவில்லை. என்னுடன் நான் தினசரி சாப்பிடும் மாத்திரைகள் தவிர INHALER -ம் அதில் போடும் காப்ஸ்யூலும் நிறைய எடுத்துப் போயிருந்தேன். கொஞ்சம் திணறினாலும் உடனேயே எடுத்துக் கொள்ள வசதியாகக் கையிலேயே இருந்தது. ஒண்ணும் இல்லாட்டியே நான் தினமும் இருமுறை Inhale செய்துக்கணும். இப்போ கேட்கவே வேண்டாம். இங்கே எனக்குப் பதினைந்து நாள் வருவது அங்கே 1 வாரம் கூட வரவில்லை. நல்லபடியாகப்போய் விட்டுத் திரும்ப வேண்டுமே என்ற கவலை வந்தது.

"பர்யாங்க்" கிளம்பினோம். மீண்டும் சிறிது பள்ளத்தாக்குப் பயணம். மலை ஏறுதல், கீழே இறங்குதல், பள்ளத்தாக்கில் பயணம். இப்படிப் போனது பயணம். வழியில் ஒரு இடத்தில் சீனப் போலீஸின் செக்போஸ்ட். அங்கே நாங்கள் யாத்திரிகர்கள் என்பதைத் தெரிவித்தபின் மீண்டும் பயணம்.வழியில் கூட வந்த சிலரின் வண்டிகள் பங்க்சர் அல்லது டயர் தொந்திரவு என்று மாற்றி மாற்றி வந்தது. உடனேயே எல்லா வண்டிகளும் நிற்கும். எந்த வண்டி சரி இல்லையோ அது சரி செய்தபின் தான் கிளம்பும். எங்கள் டிரைவர் எல்லா வண்டிகளின் ரிப்பேர் வேலைக்கும் உடனேயே போய் விடுவார். அது முடிந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனபின் தான் அவர் வண்டியை எடுப்பார். இப்படி எல்லா இடத்திலும் கடைசியாக வண்டியைக் கிளப்பினாலும் எல்லாருக்கும் முன்னால் குறுக்கு வழியாகப் போய் முன்னால் நிற்பார். அவர் போகும் வழியைப் பார்த்தால் நிஜமான கைலாசம் போகப் போகிறோம் என்றே தோன்றும். மலையில் இருந்து குதிப்பார் வண்டியில் எங்களையும் வைத்துக் கொண்டு. பாதையோ படு மோசமான பாதை. பத்ரிநாத், கேதாரநாத் பாதைகளோடெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதை பாதை என்றே சொல்ல முடியாது. மலையை வெட்டி வழி உண்டு பண்ணி இருக்கிறார்கள். வண்டி ஜன்னலைத் திறந்தால் புழுதி பறக்கும். கதவை மூடினால் ஜன்னல் வழியாகச் சூரிய வெளிச்சம் பட்டு சூடாக இருக்கு. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓட்டினால் உடனேயே டிரைவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வதோடு அல்லாமல் வண்டியில் உள்ள சில சில்லறைப் பழுதுகளையும் சரி பார்த்துக் கொள்கிறார்கள். மலைப்பாதையில் போனால் எத்தனை மலை வருகிறதோ அத்தனையும் முடிந்தால் தான் வண்டி நிற்கும். வண்டியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு நின்றால் கூடப் பின்னால் வரும் வண்டிகள் முன்னால் கடந்து வர முடியாது. அவ்வளவு குறுகலான பாதைகள். ஆகையால் மலைகள் கடக்கும் முன்பே அதற்குத் தயார் செய்து கொள்கிறார்கள். மதிய உணவு முடிந்து ஓய்வும் எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் 6-00 மணிக்குள் "பர்யாங்க்" வந்து சேர வேண்டும் என்று வந்து கொண்டிருந்தோம்.

டாக்டர் நர்மதாவின் உடல் நிலை சற்றுக் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. அவருடன் வண்டியில் கூட வந்த ஸ்ரீநிவாசனும், அவர் மனைவியும்தான் எல்லாத் தங்கும் இடங்களிலும் கூட இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெற்ற மகள் போல கல்பனா ஸ்ரீநிவாசன் திருமதி நர்மதாவிற்குப் பணிவிடை செய்து வந்தார். மாலை "பர்யாங்க்' வந்தது. இங்கே முதல் முதலில் நாங்கள் "Mud House" எனப்படும் களிமண்ணால் கட்டப் பட்ட வீடுகளில் தங்க வைக்கப் பட்டோம். எங்கள் அறையில் 5 பேர் தங்கலாம். எங்களுடன் திரு தாரகராமன் என்பவர் தன் மனைவியுடனும், திருமதி லலிதா என்ற பெண்மணி மைலாப்பூரில் இருந்து தனியாக வந்திருந்தார். தங்கி இருந்தார்கள். திருமதி தாரகராமனும் உடல் நிலை மோசமாக இருந்தார். சர்க்கரை நோய் வேறே வாட்டிக் கொண்டிருந்தது. தினமும் ஊசி போட்டுக் கொள்வார். அன்று போடமுடியவில்லையாம். அதனால் ரொம்பவே முடியாமல் இருந்தார். நான் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டேன், எனக்கு வரப்போவதைப் பற்றி உணராமல். நாளைப் பயணத்தின் முடிவில் "மானசரோவரை" அடையலாம்.. "திருக்கைலை"யின் முதல் தரிசனமும் கிடைக்கும். இதுதான் நினைப்பாக இருந்தது. என் கணவருக்கு இன்னும் மூச்சு விட முடியாமல் போனது. அதோடு விடாத இருமல் வேறே இருந்தது. கேட்டதில் சிலருக்கு இப்படி இருக்கும் என்றும் இது ஒன்றும் பயப்படும்படி இல்லை என்றும் சொன்னார்கள். ஆனால் செந்தில் என்ற இளைஞர் கஷ்டப்பட்டதைப் பார்க்கும்போது எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.

7 comments:

வல்லிசிம்ஹன் said...

டீபாவளி நல் வாழ்த்துக்கள் கீதா.
உங்கள் மூலமாக மனசரோவர் பார்த்த திருப்தி கிடைக்கிறது.
ரொம்ப நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்கள் குடும்பத்திற்கு எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்.ரொம்பத்தான் பயமுறுத்துகிறீர்கள்.படிப்பவர்கள் போகவே கூடாது என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.பயனத்தினுலுள்ள நல்ல விஷயங்களையும் இன்னும் சிறப்பாக எழுதுங்கள்.இப்பொழுதுதான் கதை சூடு பிடித்து விறு விருப்பாக செல்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

தத்தாரேயரின் வரலாற்றை சொன்னதற்கு நன்றி.உங்களுக்கும் உங்கல் குடும்பத்துக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

தி.ரா.ச.சார், போகவே கூடாது என்பது என் எண்ணம் இல்லை. இன்னும் ஒரு 4 நாளில் முடிந்ததும் என் அபிப்பிராயத்தை முன் வைக்கிறேன். அப்புறம் வல்லிக்குக் கொடுக்க வேண்டிய பின்னூட்டமும் எனக்கு வந்திருக்கிறது. ரொம்பவே நன்றி. :D

Porkodi (பொற்கொடி) said...

வாளில படம் எல்லாம் பாத்தேன், ஆனா ஏன் ஒண்ணுலயும் ஆள் நிக்கல? இருந்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)

Porkodi (பொற்கொடி) said...

இத்தன நோவை வெச்சிட்டு பயணம் பண்ண நீங்க உண்மைலயே பெரிய்ய்ய்ய தைரியசாலி தான் ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லி அம்மாவுக்கு அனுப்பவேண்டியது தவறுதலாக உங்களுக்கு வந்து விட்டது.மன்னிக்கவும்.முடிந்தால் செய்யவும்.