எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, January 13, 2007

ஓம் நமச்சிவாயா-27

எங்களை விட்டு அதிர்ச்சி விலகவே இல்லை. அடி ஏதும் பட்டிருந்தால்? மருத்துவ உதவிக்குக் கூட யாருமே இல்லை. இப்போது தான் "சக்தி விகடனில்" எங்களுக்கு ஒரு வருஷம் முன்னால் கைலை யாத்திரை மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த டாக்டர் கங்கா அவர்கள் எழுதியதில் தெரிந்து கொண்டேன். அவங்க குழுவில் ஒரு வண்டி இம்மாதிரிக் கவிழ்ந்து ஒருத்தருக்குக் கண்ணில் கண்ணாடித் துகள்கள் குத்தியும், வேறு இருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. டிரைவருக்குக் காயம் அதிகம் இருந்ததால் அவரை இன்னொருத்தர் துணையுடன் 1,000 கி.மீ கிழக்கே இருந்த தலைநகரான "லாசா"வுக்கு அனுப்பினாங்களாம். மற்றவர்களுக்கு டாக்டர் கங்காவும், அவங்க குழுவிலே வந்த மற்ற 5 மருத்துவர்களும் முதலுதவி செய்து இருக்காங்க. கைலை யாத்திரை முடிந்து திரும்பி டெல்லி வரும் வரை தினமும் மருத்துவம் செய்து இருக்காங்க. அவங்க எழுதி இருந்தது, "நான் குழந்தைகள் நல மருத்துவர், மற்றவர்கள் யாருமே கண் மருத்துவரோ அல்லது எலும்பு முறிவு மருத்துவரோ இல்லை. எங்களுக்குத் தெரிந்த வரை மருத்துவம் செய்தோம். கடவுள் அருளால் எங்க மருத்துவத்துக்குப் பயன் ஏற்பட்டது." என்று எழுதி இருக்கிறார்கள். அந்தக் குறைந்த பட்ச மருத்துவ உதவி கூட எங்களுக்குக் கிட்டாது. ரத்தம் வந்தால் வந்தது தான். அதோடு தான் கிட்டே இருக்கும் பர்யாங்கிலோ அல்லது மேம்பட்ட மருத்துவ உதவிக்காக லாசாவிற்கோ போகவேண்டும். எனவே, ஒரு சிறு சிராய்ப்புக் கூட இல்லாமல் நாங்கள் தப்ப முடிந்தது அந்தக் கைலை நாதன் திருவுளம் அன்றி வேறு ஏதும் இல்லை.

எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றிரவு பர்யாங் வந்து சேர்ந்தோம். டாக்டர் நர்மதாவிற்கு உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்பட்டது. அவங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்கள் திருமதி கல்பனாவும் அவள் கணவர் ஸ்ரீநிவாஸனும். இருவரும் இளம் வயதினராக இருந்தாலும் மிகப் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் டாக்டர் நர்மதாவிற்குச் சேவை செய்தார்கள். பர்யாங்கில் உடலில் க்ளூகோஸ் ஏற்ற வசதி இல்லை என்பதால் மறுநாள் சாகா போனதும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டது. இரவில் பெரியவர் சங்கரனையும் அவருடன் சேர்ந்து அறையில் தங்கி இருந்த மற்ற நால்வரையும் சாப்பிட அழைக்க மறந்து போய் அவர்கள் இரவு 11 மணி வரை பார்த்துவிட்டுச் சமையல் பகுதிக்கு வந்து பார்த்தால் ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஸ்ரீலட்சுமியின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் எல்லாரும் உடனேயே திரு கிருஷ்ணாவையும், மனோகரனையும் கூப்பிட்டு மருத்துவ உதவி இல்லாமல் வந்ததற்கும், இப்போது சாப்பாடு சாப்பிடும்போது எல்லாரும் வந்தாச்சா என்று கவனிக்காததற்கும், அறைகள் சரியாகக் கொடுக்கப் படவில்லை என்றும் புகார் கொடுத்துத் திரும்பிப் போகும் போதாவது சரியாகக் கவனிக்கும்படிச் சொல்லி இருக்காங்க. எங்களுக்கு மறுநாள் காலை தான் திரு சங்கரன் சொல்லி இது தெரியும். நாங்கள் ஒரு 10 பேர் விடுதியின் மறுபக்கமாய்த் தங்கி இருந்தோம். விடுதின்னு தான் பேரு. எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட அறைகள். ஆனால் படுக்க மெத்தை, போர்த்திக் கொள்ள ரஜாய், தலையணை கிடைக்கும். சற்றுக் குறை சொல்ல முடியாத விஷயம் இது ஒண்ணுதான். இல்லாவிட்டால் என்னதான் அவங்க கொடுத்த "ஸ்லீப்பிங் பாக்" உபயோகித்தாலும் தினமும் அதில் உள்ளே போய்ப் படுத்துவிட்டு வெளியே வருவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது.

மறுநாள் காலை எல்லாரும் "சாகா" நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்போதும் எங்கள் வண்டி முன்னால் போய்க் கொண்டிருந்தது. அப்போது மறுபடி நல்ல வேளையாகச் சமவெளியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வண்டியின் சக்கரம் எங்களுக்கு முன்னால் ஓடி வந்தது. மறுபடி வண்டிகள் நிறுத்தப்பட்டுப் பார்த்தால் இம்முறை புனாவில் இருந்து வந்திருந்த திரு ராமச்சந்திரன் வந்த வண்டி அது. ஒரு பக்கச் சக்கரம் கழன்று ஓடியே போய் விட்டது. பின் ஒரு 2,3 பேர் அதை எடுத்து வரப் போக மற்ற டிரைவர்கள் வேறு சக்கரத்தை மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சக்கரம் மாற்றி வண்டி சரியாக இருக்கிறது என உறுதி செய்ததும் மறுபடி கிளம்பினோம். ஒரு வழியாக "சாகா" வந்தோம். சிலர் "பிரம்மபுத்ரா"வைக் கிட்டே போய்ப் பார்க்கப் புறப்பட நாங்கள் தொலைபேசப் போனோம். டாக்டர் நர்மதா அங்கே ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. இரவு 9 மணி வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுப் பின் விடுதிக்குத் திரும்பினார் டாக்டர் நர்மதா அவர்கள். அவங்க கணவரும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சளைக்கவில்லை. சற்றும் அலுத்துக் கொள்ளாமல் அவங்க கூப்பிட்ட நேரத்துக்குக் கேட்ட உதவிகள் செய்து வந்தார். பின் மறு நாள் காலை "சாகா"வில் இருந்து "நியாலம்" நோக்கிப் புறப்பட்டோம். எல்லாரும் வழியில் மலை இறங்கும் போது பயப்பட்டிருக்கின்றனர். எல்லாரும் ஒரு முகமாய்ச் சொன்னது:போகும்போது இவ்வளவு தெரியவில்லை. இப்போ ரொம்பவே கஷ்டமாக இருக்கு." என்று தான். எல்லாம் "நியாலம்" போய்விட்டால் சரியாகி விடும் என்று நினைத்தோம். பின் அங்கிருந்து "நட்புப் பாலம்" கிட்டே தானே? நியாலம் போனாலே பாதி நிம்மதி என்ற நினைப்புடன் சாகாவில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

No comments: