எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 17, 2007

ஓம் நமச்சிவாயா-28

அத்தியாயங்களின் எண்களைக் குறிப்பதில் தவறு நேரிடுகிறது. முக்கியக் காரணம் நான் இணையத்தில் இருக்கும்போது எழுதுவது இல்லை. நேரம் கிடைக்கியில் எழுதி வைத்து விட்டுப் பின் காப்பி, பேஸ்ட் செய்கிறேன். அப்போது இருக்கும் மன அழுத்ததில் சில சமயம் போஸ்ட் பப்ளிஷ் ஆனால் போதும் என்ற வரை ஆகி விடுகிறது. இணையப் பிரச்னை அவ்வளவு மோசமாக இருக்கிறது. சில சமயம் ஒரு நாள்பூராவும் முயற்சி செய்யும்படி ஆகி விடும். சில சமயம் மறுநாள் முயற்சி செய்ய வேண்டும். அப்போது எழுதிச் சேர்க்கும்போது தவறு நேருகிறது. இனிமேல் தான் சரி செய்யவேண்டும். கூகிளில் முத்தமிழ்க் குழுமத்துக்குக் கொடுக்கும்போதே கூகிள் இணைப்புப் போய் விடுகிறது. இதுவும் சிலருக்கு இருப்பதாய்ச் சொல்கிறார்கள். இதுக்கு நடுவிலே இந்த டாட்டா இண்டிகாம் தொந்தரவு வேறே. "டாட்டா இண்டிகாம்" இணைந்தால் இணையம் வராது. REFER DNS SERVER ERROR என்றே வரும். இல்லாட்டி டாட்டா இண்டிகாம் இணையாது. THE REMOTE COMPUTER DID NOT RESPOND என்றே வரும். இன்னிக்கு ஒரு சோதனைப் பதிவு கொடுத்தேன். போயிருக்கு. இதைப் பார்க்கணும்,என்ன ஆகிறது என்று. நிற்க.

"சாகா"வில் இருந்து "நியாலம்" போகும் போதும் எல்லார் மனதிலும் கவலையும், பயமும் தான் மேலிட்டு இருந்தது. மனதில் தைரியம் இல்லை. இன்னும் சிலபேர் ஊருக்குப் போனால் போதும் நல்லபடியாக என்ற மனநிலையில் இருந்தனர். அன்று பூராப் பயணம் முடித்து சாயங்காலம் "நியாலம்" போய்ச் சேர்ந்தோம். இம்முறை மாடியில் இல்லாமல் கீழேயே சற்று நல்ல முறையில் ஆன அறைகள் தரப் பட்டன. அங்கிருந்து சாப்பிடும் இடமும் கிட்டவே இருந்தது. எல்லாரும் கொஞ்சம் கவலையை மறந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஷாப்பிங் செய்யவும், தொலைபேசவும் போனார்கள்.நாங்களும் தொலைபேசிவிட்டு வந்தோம். நான் முன்னமே சொன்னபடி நான் ஒரு மோசமான ஷாப்பர். அப்படி ஒண்ணும் பெரிசா வாங்க இல்லவும் இல்லை. நாங்கள் போகிற ஊர்களில் எல்லாம் இம்மாதிரிப் பொருட்களை வாங்கிக் குவித்தால் பணமும் நிச்சயம் வேஸ்ட் அதோடு நேரமும் வேஸ்ட். ஆகவே வாங்குபவர் சிலருக்கு மொழி புரியாத காரணத்தால் கொஞ்சம் உதவி விட்டு வந்து விட்டோம்.

அன்று இரவு "கூட்டுப் பிரார்த்தனை"யும் இறந்து போன ஸ்ரீலட்சுமிக்காக அஞ்சலிக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் குழுவினர் அனைவரும் சேர்ந்து சமையலில் உதவிய ட்ராவல்ஸ் கார நண்பர்களுக்கும், மற்ற ட்ராவல்ஸ்காரர்களுக்கும் எங்களாம் முடிந்த பணம் போட்டு அவர்கள் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். இது தனியாக அவரவர் விருப்பத்தின் பேரில் செய்வது. ஆகவே கொஞ்சம் பணம் இதுக்குத் தனியாய் ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருந்தோம். இது மாதிரி எங்களுக்குப் பயணத்தில் கொடுத்த "பெப்ஸி, கோலா" போன்ற பானங்கள்,நாங்கள் மலை ஏற்றத்துக்கு வாங்கி வைத்த "ரெட் புல்" எனப்படும் சீன நாட்டுப் பானங்கள் எல்லாவற்றையும் எங்கள் வண்டி ஓட்டிக்குக் கொடுத்து விட்டோம். அந்தக் குழுவிலேயே "ரெட் புல்" குடிக்காத ஒரே பயணிகள் நாங்கள் இருவரும் தான். தவிர, டிரைவருக்கு எங்களுடன் வண்டி ஓட்டி நல்லபடிக் கொண்டு சேர்த்ததற்கு ஆளுக்கு 100 யுவான் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டோம். அன்றிரவு கழிந்து மறுநாள் எல்லாரும் உற்சாகத்துடன் புறப்பட்டோம்."போடோகுயிச்சி" (?) என்னும் ஆறு வழி நெடுக வரும். மிக மிக நீளமான ஆறு அது. நியாலத்தில் கொஞ்ச தூரத்தில் மலை ஏறும்போது கீழே ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறு மலை இறங்க இறங்க கரை ஓரத்தில் வண்டிகள் போகின்றன. அப்போதும் வண்டிகள் கிட்டத் தட்ட 2,500 மீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கும்.

ஒவ்வொரு மலைப் பாதையும் முடிந்து நதிக்கரை வந்ததும் அந்தக் குறுகலான பாதையில் வண்டி போகிற போது மனம் பக், பக்கென்று அடித்துக் கொள்கிறது. இதில் எங்களுக்குள் விவாதம் வேறே. போகிறப்போ இந்த வழியில் போகவில்லை என்று என் கணவர் சொல்ல, நானும் திரு சங்கரனும் "இங்கே வேறு வழி ஏது? எல்லாம் இந்த வழி தான், இதோ இந்த இடம் பார்த்தோம், அந்த அருவி பார்த்தோம்" என்று நினவு படுத்திக் கொண்டே வந்தோம். இங்கே இருந்து கீழே நட்புப்பாலம் வழியாக நேபாளம், இந்தியா போன்ற நாடுகளுக்கு ட்ரக்கில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் வேறே அணி வகுத்து வரும். எதிரே ஒரு வண்டி வந்து விட்டால் அவ்வளவு தான். எல்லா வண்டிகளும் நின்று, எந்தப் பக்கம் முதலில் போகவேண்டுமோ அவர்களுக்கு வழி விட்டுப் பின் போகிற வரை சற்றுப் பயம் தான். அருவிகள் மேலே இருந்து கீழே விழ அருவியில் நனைந்து கொண்டே வண்டிகள் போகின்றன. ஒரு இடத்தில் அருவித் தண்ணீர் மிக வேகமாகக் கொட்டும். அங்கே போனதும் எல்லா வண்டிகளும் சற்று நின்று வண்டியை நன்றாகக் கழுவி விட்டுக் கொண்டு மேலே செல்கின்றன. இம்மாதிரி மலைகள் ஏறி, இறங்கி வரும் வழியில் ஒரு இடத்தில் திடீரென எங்கள் வண்டி நின்றது. அப்போது நாங்கள் ஒரு மலையில் உச்சியில் ஏறி விட்டோம். இனி மறுபக்கமாய்க் கீழே இறங்கிக் கரையைக் கடந்து வேறு மடிப்பு மலையின் பக்கம் போகவேண்டும். வண்டி நிற்கவே என்ன என்று பார்க்க என் கணவரும், திரு சங்கரனும் கீழே இறங்கினார்கள். வண்டிச் சக்கரத்தை வண்டியுடன் சேர்க்கும் இடத்தில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட் கழன்று விட்டிருக்கிறது. சற்றும் கவனிக்காமல் அந்த இடத்தில் வளைவில் வண்டியைத் திருப்பி இருந்தால் அதோ கதி தான். டிரைவர் வண்டியில் இருந்து ஏதோ லெதர் பெல்ட் போன்ற ஒன்றை எடுத்து அதைச் சக்கரத்தோடு சேர்த்துக் கட்டினார். இதற்குள் மற்ற டிரைவர்களும் வந்தார்கள். எல்லாரும் சேர்ந்து சக்கரத்தைக் கட்டி விட்டுப் பின் வண்டியைக் கிளப்பினார்கள். அந்த இடத்தில் ஊர் ஏதும் இல்லை. "ஜாங்மூ" என்னும் ஊர் வரும். அங்கே தான் நாங்கள் கஸ்டம்ஸில் மறுபடி பேர்களைப் பதிய வேண்டும். அது வருவதற்கு இன்னும் சற்று நேரம் ஆகும். அதற்குள் இப்படி. கொஞ்சம் கவலையாகத் தான் இருந்தது. இது வரை முன்னால் போய்க் கொண்டிருந்த வண்டி இப்போது சற்று மெதுவாகப் போக ஆரம்பித்தது.

"ஜாங்க்மூ" வந்ததும் சரி செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால் "ஜாங்க்மூ" வந்ததும் நாங்கள் கஸ்டம்ஸில் வேலையை முடித்துக் கொண்டுத் திரும்பி வண்டியில் ஏறினால் மறுபடி மலை ஏற்றத்தில் இதே தொந்திரவு. இம்முறை சக்கரம் கழன்றே வந்து விட்டது. பின்னாலும் முன்னாலும் வண்டிகள். வண்டியை ஒதுக்கினால் கீழே பாதாளத்தில் ஓடும் ஆறு. வண்டி ஒரு இஞ்ச் தள்ளி ஒதுங்கினாலும் அதோ கதி தான். மெதுவாக மற்ற வண்டிகள் போன பின் உதவிக்கு நின்ற 2 வண்டி டிரைவர்களின் உதவியுடனும் எங்கள் டிரைவர் சக்கரத்தை மறுபடி இறுக்கிக் கட்டினார். நட்புப் பாலம் எவ்வளவு தூரமோ? இன்னும் எவ்வளவு போகணுமோ என்று கவலைப் பட்டபோது கீழே இறங்கினதும் நட்புப் பாலத்துக்கு அருகே உள்ளே கடைத்தெரு வந்ததும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. இனிமேல் இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்து நட்புப் பாலம் வந்ததும் அங்கேயும் நாங்கள் திரும்பி விட்டதற்கான அடையாளப் பதிவு செய்து கொண்டுப் பின் நேபாள எல்லையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நாங்க்ள் நேபாளம் வந்ததற்கான பதிவையும் செய்து கொண்டுப் பின் 2 கி.மீட்டருக்கு மேல் நடந்து வண்டிகள் நிற்கும் இடம் போய் வண்டிகளில் ஏறிக் கொண்டு காட்மாண்டு செல்லவேண்டும். ஆனால் நட்புப் பாலம் வந்ததுமே எங்களில் பலர் ஆறுதல் அடைந்தோம். நேபாள் எல்லை வந்ததுமோ இந்தியாவே வந்து விட்டது போல் நிம்மதி வந்தது.

6 comments:

இலவசக்கொத்தனார் said...

சரிங்க. இனி ரெகுலராப் படிக்க இன்னும் ஒருத்தன். ஒரே மூச்சா எல்லாப் பதிவையும் உக்கார்ந்து படிச்சாச்சு. நல்லா எழுதறீங்க.

Anonymous said...

//வண்டிச் சக்கரத்தை வண்டியுடன் சேர்க்கும் இடத்தில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேட் கழன்று விட்டிருக்கிறது. சற்றும் கவனிக்காமல் அந்த இடத்தில் வளைவில் வண்டியைத் திருப்பி இருந்தால் அதோ கதி தான்.//
விருவிருப்பாக பயணிக்கிறது பயணக்கதை.

ஜாங்க்மூ - ஜம்மு போல பெயர் இருக்கிறதே.

Geetha Sambasivam said...

ரொம்பவே நன்றி, இ.கொ.

@ஜீவா, ஜாங்மூ, திபெத்தியப் பெயர். ஜம்மு வேறே, இது வேறே.

Anonymous said...

Hello Geetha Madam,

One more good news to you, I have created the blog account to leave comments for your blog. I really enjoyed reading all your Om Namashiva...pls contiune. Long back I left message at veda's blog (hope you remember me). Belated Happy New year and Pongal.

EarthlyTraveler said...

பிரயாணம் விறு விறுப்பாக செல்கிறது.நிஜமாகவே அந்த ஓட்டுனர்கள் கையில் நம் உயிர் இருக்கு.இத்தனை இடர் பாடுகளுக்கு நடுவில் பத்திரமாக சேர்த்த அவர்களுக்கு என்ன தந்தாலும் தகும்.
--SKM

Geetha Sambasivam said...

புதுசா வந்த சூடான பூனைக்கும், (சங்கர்?) எஸ்.கே.எம்மிற்கும் நன்றிகள்.