எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 10, 2007

சிதம்பர ரகசியம் - இன்னுமா புரியலை?





"சித்சபை"யின் தோற்றமும், அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு நீலத் திரை தொங்க விடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும் தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.

அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும், காணப் படுகிறான். அனைத்தும் அவனே! என்றாலும் பாமர மக்களுக்குச் செளகரியத்திற்காக அவன் உருவம் எடுத்து வருவதே நடராஜர். உருவமாக "ரூப" தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ "அருவுரு"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின் வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன், பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க, இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான் சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும் நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும், இறைவனின் மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச் செய்கின்றனர்.

சிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும் இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான். குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக, அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான் இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள் உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில் ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம் கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியாமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.

நம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால், நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதை இந்த இறைவனால் தான். ஆகவே தான் "சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த யோக முறைப் படியும் இது "அனாஹதம்" எனப் படுகிறது.அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம்.

இன்னும் எளிமையாகச் சொன்னால் "ஜீவாத்மா"வும் "பரமாத்மா"வும் ஐக்கியம் ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால்,இந்த இடத்தில் உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச பூதத் தலங்களில் "ஆகாயத் தலம்" என்றும் சொல்லுவார்கள்.