கிட்டத் தட்ட முடியும் தருணம் வந்துவிட்டது இந்தச் சிதம்பர ரகசியம் தொடருக்கு. ஆனாலும் என்னோட மனம் என்னமோ நடராஜர் பற்றியும், அந்தத் திருமேனியைப் பற்றிய புதுப் புது விஷயங்களைச் சேகரிப்பதிலுமே சென்று கொண்டிருக்கின்றது. என்றாலும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமே? அது போல் இன்னும் மிஞ்சினால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளுக்குள் முடிந்துவிடும். இப்போது நாம் நடராஜத் திருமேனி சிதம்பரம் வந்த கதையைத் தொடர்வோமா??
*************************************************************************************
சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.
அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.
அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.
விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை காண்போமா??
2 comments:
படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது
ஒரு முறை நேரில் சென்று பார்க்கவும்.
Post a Comment