சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும், பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம், இத்தனை மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்யமுடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும், நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள், யக்ஞங்கள் முறைப்படி செய்து, அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். ஹோமங்களும், யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது, பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ, இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப் படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்துவிடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும், பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ, பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும், பெண்களும் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும்.
சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் எனப் பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும், குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்ட்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம்.
அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும், அபயஹஸ்தம் காத்தலையும், அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும், தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும், குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம், ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும், அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்ட உண்மை கூறுகின்றது. ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் "ந" காரத்தையும், பாதாம்புஜங்கள் "ம" காரத்தையும், லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) "சி" காரத்தையும், டமருக ஹஸ்தம் "வா" காரத்தையும், அபய ஹஸ்தம் "ய" காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடைவிடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும், சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டைவிரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும், தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும், வெளி வந்தும், உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
*************************************************************************************
இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் கணவருக்குத் தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள முக்கிய காரணமாய் இருந்த எங்கள் குருவும் சிதம்பரம் கோயிலின் தீட்சிதரும் ஆன திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவருக்கே காணிக்கை ஆக்குகின்றேன்.
துணைப் புத்தகங்கள்: A Study of Chidambaram and its Shrine, by T.Ramalinga Dikshithar M.A.Litt.,
Swamy Sivananda's Website: www.sivananda.org
Yoga details taken from : B.K.S. Iyengar's Books and சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.
சிதம்பர வைபவச் சுருக்கம்: நடராஜ ரத்ன தீட்சிதர், ஸோமஸேது தீட்சிதர், T.ராமலிங்க தீட்சிதர்.(புத்தகம் வெளிவந்த வருஷம் தெரியலை, மிகப் பழைய புத்தகம்,)
வைதிக சம்வர்த்தனி: ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மாவால் போடப் பட்டது. அதிலே உள்ள சிதம்பர புராணம் ஸோமஸேது தீட்சிதரால் எழுதப் பட்டது.
தில்லைக் கோயில் வரலாறு: கலைமாமணி, பேராசிரியர் அமரர் திரு க.வெள்ளைவாரணனார், தில்லைத் தமிழ் மன்றம் வெளியீடு.
தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் பழமையும் திருச்சித்திரகூட அமைப்பும்: ஆக்கியோர் தமிழ்ப்பெரும்புலவர், சித்தாந்தப் பேராசிரியர் திருவாளர் சபா. சிவப்ரகாசம் பிள்ளை அவர்கள், தில்லை. வெளியிட்டோர் தில்லைத் திருமுறைக் கழத்தோர்.
திருச்சிற்றம்பலமும், திருச்சித்ரகூடமும்: டாக்டர் ந. ராமசுப்ரமணியன், சட்ட நிர்வாக ஆலோசகர், பிருந்தாவன் அவென்யு, சென்னை -45.
இவற்றைத் தவிர, திரு சிவசிவா என்னும் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பலவிதத் தகவல்களையும், முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு ஆகிராவும் ஒரு சில சுட்டிகள் கொடுத்து உதவினார். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப் பட்டது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ராமலிங்க தீட்சிதரின் மகன் தங்க தீட்சிதர், தெற்குத் தெரு நடராஜ தீட்சிதர் ஆகியோரை நேரில் சந்தித்தும் , நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் மூலமும், ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.
8 comments:
கீதாம்மா! எனக்கு நெஜமாக புல்லரிக்குது. இப்ப தான் நடராஜரை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். பின்பு உங்கள் சிதம்பர ரகசியும் என்ன ஆச்சு ஊருக்கு வேற போறேன்னு சொன்னாங்களேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்!
நல்ல ஒரு தொடர்! அருமையாக புத்தகம் போடும் அளவு இருந்தது எல்லா விஷயங்களும்!
நான் முன்பே சொன்னது போல புத்தகமாக போடலாம்!
அது சம்மந்தமாக நான் அங்கே வரும் போது பேசலாம்!
மிக மிக மனது நிறைவாக இருக்கின்றது!
நானும் முதல் அத்யாயம் முதல் இந்த அத்யாயம் வரை வந்தது இன்னும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கின்றது!
நம் எல்லோருக்கும் நடராஜர் அருள் கிடைக்கட்டும்!
மிகவும் அருமையான தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி. ஆனந்தகூத்தனின் அருளை பெற்றோம்.
அபி அப்பா, ஊருக்குப் போற அவசரத்திலே எழுதறேன். நடராஜ தீட்சிதரிடம் பேசினேன். அவரோட மெயில் ஐடியை எனக்கு அனுப்புங்க. முதல்லே வந்ததுக்கு மெயிலே போகலை, மத்தது பின்னால். நீங்க வந்து பின்னூட்டம் இட்டதுக்கு ரொம்பவே நன்றி.
வாங்க லோகன், அவ்வப்போது வந்து ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி.
சிரமம் பார்க்காமல், நிறைய தகவல்களை தொகுத்து அளித்தமைக்கு நன்றிகள் கீதாம்மா.
மிகப் பெரிய பணியினைத் தளராது செய்து முடித்திருக்கிருக்கிறீர்கள். மறக்காமல் எல்லா ஆதாரங்கள், கொடுத்துதவியவர்களை லிஸ்ட் பண்ணியது இன்னும் சிறப்பு.
வணக்கம்.
//சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.//
இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? அவர் எழுதிய இன்னொரு புத்தகமான ’ஆனந்த ரகஸியம்’ புத்தகம் உங்களிடம் உள்ளதா? ஒரு ஜெராக்ஸ் கிடைத்தாலும் உதவியாக இருக்கும். எனது மின்னஞ்சல் - haranprasanna at gmail.com
தற்செயலாக இன்று வேறு ஏதோ பார்க்க வந்து ஹரன் பிரசன்னாவின் கேள்வியைப் பார்க்க நேர்ந்தது. புத்தகத் திருவிழா ஒன்றில் வாங்கப்பட்டது சுந்தர யோக சிகிச்சை. பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்த ரகசியம் இல்லை!. :( வருத்தமாக இருக்கிறது உடனே பதில் போடாமல் எட்டு ஆண்டுகள் கழித்துப் போடுவதற்கு. இதற்குள் உங்களுக்குப் புத்தகமே கிடைத்திருக்கும்.
Post a Comment