எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, May 25, 2009

தாமிரபரணிக்கரையிலே சிலநாட்கள்!

விண்ணில் இருந்து நேரே பூமிக்கு வரும் அம்பைப் போல் நீர் விழுவதால் வானதீர்த்தம் என்றும் பாணதீர்த்தம் எனவும் பெயர்க்காரணம் சொல்கின்றனர். இங்குதான் சாஸ்தா கோயில் இருப்பதாயும், சொரிமுத்தையனார் கோயில் எனப்படும் இதுதான் சாஸ்தா கோயில்களிலேயே முதன்மையானது எனவும் தாமிரபரணி நதியின் நடுவில் இது அமைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். கோயிலைச் சுற்றித் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் எனவும் தைமாத அமாவாசை மற்றும் ஆடி அமாவாசைகளில் இங்கே வழிபாடு சிறப்பு எனவும் சொல்லப் படுகின்றது.

இதற்கடுத்த கல்யாணி தீர்த்தம் பாபநாசம் லோயர் டேமை ஒட்டி இருக்கும் இந்தக் கல்யாணி தீர்த்தத்தைப் பார்க்கவெனச் சிறப்பான தனி மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதாயும், வெள்ளக் காலங்களில் பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் காணப்படும் எனவும் சொல்கின்றனர். அகத்தியருக்குத் திருமணக் காட்சி கொடுத்ததாய்ச் சொல்லப் படும் சரியான இடம் இதுவே எனவும் சொல்கின்றனர்.

அடுத்து வருவது அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தில் இருந்து பெருகும் நீர்ப்பெருக்கு அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் நடுவே சென்று அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுவதாயும், இந்த அருவி ஆபத்தில்லாதது எனவும், இங்கேயும் முன்னோர் வழிபாடுகள் செய்வது சிறப்பு என்றும் சொல்லப் படுகின்றது.

அடுத்து வருவது பாபநாசம்: மலை உச்சியில் இருந்து வரும் தாமிரபரணி நதி சமபூமிக்கு வரும் இடமே பாபநாசம் ஆகும். இங்கு சித்திரை முதல்நாள் விஷு அன்று அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்சி கொடுத்தது பெரும் விழாவாக நடக்கின்றது. வேதங்கள் இங்கே இறைவனைக் களாமரங்களாய் நின்று வழிபட்டதாகவும் சொல்லப் படுகின்றது. அதனால் இறைவனுக்கு முக்களா மூர்த்தி என்ற பெயரும் உண்டு. தன்னை அடைந்தாரின் பாவங்களைப் போக்குவதால் பாவநாசர் என்ற பெயரும், விராடபுருஷனாக மஹாவிஷ்ணு இவரை வழிபட்டதால், வயிராசர் என்றும், ஜோதி வடிவில் விளங்குவதால் பரஞ்சோதி எனவும் இறைவன் வழங்கப் படுகின்றார். கோயிலுக்கு நேர் எதிரே தாமிரபரணியானவள் வடக்கு நோக்கித் திரும்பிச் செல்லுகின்றாள். அந்த இடத்தின் அழகை வர்ணிக்க இயலாது. சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, மலையிலிருந்து மெல்ல, மெல்ல தளிர் நடை போட்டு இறங்கும் தாமிரபரணி நீரின் உண்மையான சுவையை அங்கே அறிய முடியும்.

மலைகளின் மூலிகைச் சத்தைத் தன் ஜீவசக்தியாக வைத்துள்ள இந்த நீரை ஒரு வாய் குடித்தாலே அப்பா! என்ன சுவை, நீருக்கு இத்தனை சுவையா என வியக்கத் தோன்றுகிறது. கரும்புச் சாறுபோல் இனிமையான நீர். இதே போல் நீர் மதுரைக்கு அருகே தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கே கொடைக்கானல் மலையில் இருந்து இறங்கும் மஞ்சளாற்றின் நீரும் அருமையான சுவையோடும், மூலிகைத் தன்மை நிறைந்தும் விளங்குகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரே இந்தியாவுக்கு ஒரு அரிய பொக்கிஷம். மலைவளம் மட்டுமின்றி, மூலிகை வளம், நீர்வளம், மண்வளம் என அனைத்தையும் வாரி, வாரி வழங்குகின்றது.

இந்த மலைத் தொடர்களிலேயே அருமையான கோயில்களும், சித்தர்கள் வழிபாடு நடத்திய இடங்களும் அமைந்துள்ளன. பாபநாசம் கோயிலில் பெருமான் கல்யாணசுந்தரராக அகத்தியருக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சிற்பம் கருவறைக்கு நேர் பின்னே காணக் கிடைக்கும். இந்தப் பாபநாசம் கோயில் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றுண்டு. இங்கே உள்ள இறைவியின் பெயர் லோகநாயகி, உலகம்மை. இந்த ஊருக்கு அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில், நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இறைவன் மேலும், குறிப்பாய் உலகம்மை மேலும் அதீத பக்திப் பெருக்கோடு வாழ்ந்து வந்தார் அவர்.

தினந்தோறும் உலகம்மையின் அர்த்தஜாம வழிபாட்டைக் காணச் செல்லும் வழக்கம் உள்ளவர் இவர். அம்மையைக் கண்ட பரவசத்தில் வழியிலே பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டே வரும் வழக்கம் உள்ளவர். ஒருநாள் இரவு இவ்வாறு பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அப்போது, தினமும் இவருக்குத் தெரியாமல் இவர் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பின் தொடரும் உலகம்மை அன்றும் வந்து கொண்டிருந்தாள். கவிராயர் உரக்கப் பாடிவரும்போது தற்செயலாக அவர் வாயில் இருந்த தாம்பூலம், கூடவே வந்து கொண்டிருந்த உலகம்மையின் உடையில் பட்டுத் தெறித்துவிட்டது.

1 comment:

குப்பன்.யாஹூ said...

நன்றிகள் பல, அற்புதமான விஷயத்தை இடத்தை உலகெங்கும் அறிவித்தமைக்கு.

ஆமாம், லோகனாயகி பாபனாசர் திருக்கோவிலின் எதிரில் தாமிரபரணி நதியில் குளிப்பதற்கு கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும், அதுவும் அதிகாலை பொழுதில் அந்த இடத்தில் கிடைக்கும் ரம்மிய்ம், அமைதி, மகிழ்ச்ச் உலகில் வேறு எங்கும் கிடைக்காது.

கோவிலுக்கு சற்று பின் புறத்தில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியும் ஒரு மிகக் சிறந்த இடம்.

தொடரட்டும் தாமிரபரணி பதிவுகள்.

குப்பன்_யாஹூ