எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, November 24, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் 7


அடுத்த க்ஷேத்திரம் சனிக்கானது. இந்த க்ஷேத்திரம் ஏற்கெனவே நாம் நவதிருப்பதியில் பார்த்தது தான். ஸ்ரீவைகுண்டம் க்ஷேத்திரம் இப்போ நாம்போக வேண்டியது. போகிற வழியெல்லாம் முன்னாடியே பார்த்துட்டோம் இல்லையா? இந்தக் கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப் படுகிறது. இந்தக் கோயிலில் தான் நவ கைலாயக் கோயில்கள் உருவாக காரணமாய் இருந்த உரோமச முனிவருக்குச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகிறது. (சிற்பத்தைப் பார்க்கவில்லை) மேலும் எல்லாக் கோயில்களிலும் இருப்பது போல் நடராஜர், வீரபத்திரர் போன்றோரின் சிற்பங்களும் உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மனும் காட்சி கொடுக்கிறார். இந்தக் கோயிலின் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜர் இங்கே சந்தன சபாபதி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார்.

மூலவர் காசிவிஸ்வநாதர், சிவகாமி அம்மனுடன் உள்ளார். இந்தக் கோயிலில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ வழிபாடு செய்கின்றனர். தடைப்பட்ட திருமணங்கள், இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கு இங்கே பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் எனச் சொல்லப் படுகிறது. ஸ்ரீயும், வைகுண்ட வாசனும் இந்தத் தலத்தில் தங்கி இருப்பதாலேயே இது ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப் படுவதாயும், நவதிருப்பதிகளிலும், 108 திவ்ய தேசங்களிலும் ஒன்றான கள்ளர்பிரான் கோயிலான நவதிருப்பதிக் கோயிலும் இங்கேயே அமைந்துள்ளதும் விசேஷமாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகிறது. நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகவும், நவ கைலாயத்தின் சனிக்குரிய தலமாகவும் இருப்பதும் தனிச்சிறப்பு எனச் சொல்லப் படுகிறது. எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்னவெனில் குமரகுருபர ஸ்வாமிகளின் அவதாரத் திருத்தலம் இது. அன்னை மீனாக்ஷியின் அருளைப் பெற்றவரும், வடநாடான காசிக்குச் சென்று திரும்பி வந்து காசிமடத்தைத் திருப்பனந்தாளில் ஸ்தாபித்தவரும் , சகலகலாவல்லி மாலையைப் பாடி மொழித்திறனைப் பெற்றவரும் ஆன குமரகுருபரரின் அவதாரத் தலம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

இந்தக் கோயிலின் நந்தியைச் சுற்றிலும் `108 விளக்குகள் ஏற்ற அமைக்கப் பட்டுள்ளது. இவற்றில் விளக்கு ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் எனச் சொல்லுகின்றனர். இங்கே காவல் காப்பது பூதநாதர் ஆகும். பூதநாதருக்குத் தனிச் சிறப்புடன் சித்திரைத் திருநாளில் முதல் மரியாதை செய்யப் படுகிறது. சாஸ்தாவின் அம்சமான பூதநாதருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனத் தைலம் மட்டுமே தடவி வடைமாலை சார்த்துவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. மற்றக் கோயில்களில் பைரவர் சந்நிதியில் கோயிலின் சாவியை வைப்பது போல் இங்கே பூதநாதர் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்து வந்ததாகவும், பூதநாதரை மிஞ்சி எவரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரியவருகிறது. சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்சவமும், ஆறாட்டுவிழாவும் நடக்கிறது. ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம், கந்த சஷ்டி, சிவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம் கொஞ்சம் பெரிய ஊராக இருப்பதால் இரவு ஒன்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

2 comments:

குப்பன்.யாஹூ said...

மிக அற்புதமான ஊர், கோயில்

ஆனால் மிக மோசமாக நாம் பராமரித்து கொண்டு இருக்கிறோம்.

ஸ்ரீவை சிவன் கோயிலுக்கு எதும் திர்ப்பணி செஞ்சால் பதவி பொய் விடும் என்ற ஒரு தவறான நம்பிக்கையால் அரசியல்வாதிகள் எதும் செய்யமல இருக்கின்றனர் (தொழில் அதிபர்களும், சண்முகநாதன் அமைச்சரான பொது கூட இந்த நம்பிக்கை தான் காரணம்).

அமெரிக்க அல்லது இங்கிலாந்து என்றால் இந்த ஊரை மிக பெரிய பிரபலம் ஆகி இருப்பார்.

அற்புதமான ஊர் வடிவமைப்பு, அழகான டிசைன் , தாமிரபரணிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நீங்கள் கூடவே அஞ்சுலாம்ப் பற்றியும் எழுதி இருக்கலாம்.

தொடரட்டும் இந்த நற்பணி
நன்றிகள் மற்றும் vaaltthukkaludan

Geetha Sambasivam said...

//ஸ்ரீவை சிவன் கோயிலுக்கு எதும் திர்ப்பணி செஞ்சால் பதவி பொய் விடும் என்ற ஒரு தவறான நம்பிக்கையால் அரசியல்வாதிகள் எதும் செய்யமல இருக்கின்றனர் (தொழில் அதிபர்களும், சண்முகநாதன் அமைச்சரான பொது கூட இந்த நம்பிக்கை தான் காரணம்).//

தெரியாத விஷயம் திரு குப்பன் யாஹூ,

அஞ்சு லாம்ப் பற்றிச் சின்ன வயசில் கேட்டது. இப்போ அது பத்தி நினைப்பில்லை. :(