எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, December 18, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 2

திருநெல்வேலிக்காரங்க இணையத்திலே நிறைய இருக்காங்க. எல்லாருமே வந்து அவங்களோட மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக்கறதிலே சந்தோஷம். இங்கே ஆண்டாளை பூமாதேவினு சொன்னதுக்கு நீளாதேவினு திரு தேவ் அவர்கள் சொல்றார். இருக்கலாம். ஆனால் பொதுவாய்ச் சொல்றது பூமியில் கண்டெடுத்ததால் பூமாதேவியே தான் அவதாரம்னும் , இன்னும் சிலர் சாட்சாத் சீதையே ஆண்டாளாகப் பிறவி எடுத்ததாகவும் சொல்கின்றனர். ஆண்டாள் அவதரித்த காலம் முதற்கொண்டு மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் கூறி உள்ளார். ஆண்டாளின் திருப்பாவையில் வெள்ளி எழுதல் பற்றியும், வியாழன் உறங்குவதுபற்றியும் வருகிறது அல்லவா?

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

அந்த நிகழ்வு எப்போ நடந்தது என ஆராய்ந்து பார்த்து அது நடந்தது எட்டாம் நூற்றாண்டில் எனக் கண்டறிந்து. ஆண்டாள் பிறந்தது கி.பி. 716-ம் ஆண்டு ஆடிப் பூரத்தில் என்றும், அவள் திருப்பாவையைப் பாடிய அந்தக் காலம் கி.பி. 731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் நாள் அன்று அதிகாலை 3-50 மணியில் இருந்து 4-00 மணிக்குள் இருக்கவேண்டும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள். அந்த நாள் ஒரு பெளர்ணமி நாளாகவும் இருந்திருக்கிறது என்கின்றனர். ஆண்டாளின் வயது அப்போது பதினைந்து என்றும் சொல்கின்றனர்.

இத்தனைச் சிறிய வயதில் இப்படி ஒரு அறிவா என நாம் வியக்கின்றோம். இன்னும் வியந்து கொண்டே இருக்கிறோம். ஆண்டாளின் அறிவில் ஒரு பாதியாவது நமக்கு இருந்தால் போதுமே. ஆண்டாள் என்பதே பொய்யான ஒன்று. பெரியாழ்வாரே தம்மை நாயகி பாவத்தில் வைத்துக் கற்பனை செய்து எழுதிய கவிதைகள் இவை எனவும் ஒரு கூற்று உண்டு. மூதறிஞர் என அனைவராலும் அழைக்கப் படும் ஸ்ரீராஜாஜி அவர்களுக்கு இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் வரையில் ஆண்டாள் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பார். ஆனாலும் இந்தப் பாக்களையும், ஆண்டாளையும் தமிழ் உள்ளளவும் ந்ம்மால் மறக்க முடியாது. ஆண்டாளின் மனோ தைரியமும், அவள் கண்ணன் மேல் கொண்ட காதலும் வியக்க வைப்பது.



திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!” ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரநக்ஷத்திரத்தில். மிகச் சிறந்த விஷ்ணு பக்தர் ஆன விஷ்ணு சித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ர சாயிக்குப் பூமாலைகளோடு சேர்த்துப் பாமாலைகளும் சமர்ப்பித்து வந்தார். அதுவும் கண்ணனைச் சிறு குழந்தையாகக் கண்ணாரக் கண்டு, மனதிலே தம்மைத் தாயாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் நினைத்து உருகி, உருகிப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூற்றாண்டு” என இறைவனுக்கே பல்லாண்டு கூறும் பெருமையைப் பெற்றவர். அதனாலேயே பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். ஆண்டவனின் பூமாலைகளுக்கெனத் தனியே ஒரு நந்தவனம் அமைத்து அதில் பல்வேறு வண்ணங்களும், வாசமும் மிக்க மலர்ச்செடிகளை அமைத்து அதிலிருந்து சூரியோதயத்துக்கு முன்னேயே மலர்களைப் பறித்து மாலைகள் ஆக்கி வடபத்ரசாயிக்குச் சூட்டி மகிழ்ந்து வந்தார். அந்த நந்தவனத்தின் ஒரு பக்கம் துளசிச் செடிகள் பயிராக்கப் பட்டு வந்தன. துளசியின் மணம் ஊரையே தூக்கும். ஒருநாள் காலையில் துளசி பத்ரம் பறிக்கச் சென்ற பெரியாழ்வாருக்கு ஒரு குழந்தையின் இனிமையான அழுகுரல் கேட்டது. பிரமையோ என ஒரு கணம் எண்ணிய அவர், பின் தெளிந்து கீழே பார்த்தால் துளசிச் செடிகளின் ஊடே ஒரு அழகான குழந்தை அழுதுகொண்டு இருந்தது.பச்சிளம் பாலகி. அதைக் கையில் தூக்கியதுமே பெண்குழந்தை என அறிந்த பெரியாழ்வார் மனம் மகிழ்ந்து இது நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. பூமாதேவியே மகளாய் அவதரித்திருக்கிறாள், என எண்ணி வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

கோதை எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார் அந்தக் குழந்தையை. மிக அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்துவந்தார். பெரியாழ்வார் தம் அன்போடும், பாசத்தோடும், அந்தக் குழந்தைக்கு இறை உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்தார். அந்தக் குழந்தையோ தகப்பனுக்கு மிஞ்சிய பெண்ணாக வளர்ந்தது. பூமாதேவியோ எனப் பெரியாழ்வார் சந்தேகப் பட்டதை உறுதி செய்யும் வகையில் பிறந்து வளர்ந்து, விபரம் தெரிந்தது முதல் அந்தக் குழந்தை அரங்கன் மேல் இணையற்ற பக்தியும், பாசமும் கொண்டு வளர்ந்து வந்தது. தினமும் ஸ்ரீகிருஷ்ணலீலை குறித்துப் பெரியாழ்வார் அந்தப் பெண்ணிடம் பேசிவர, அவள் மனதில் அது ஆழப் பதிந்தது. அவள் விளையாட்டுத் தோழன் கண்ணன். அவள் தன்னைவிட்டுக் கண்ணன் இணைபிரியாது இருப்பதாக எண்ணினாள். இடை இடையே கண்ணன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டானோ எனவும் தோன்றியது அவளுக்கு. தினமும் மாலைகளைக் கட்டிக் கொண்டே பெரியாழ்வார் சொல்லும் கண்ணன் கதைகளையும், கண்ணன் மேலான பாடல்களையும் கேட்டுக் கேட்டு வளர்ந்து வந்த கோதைக்குக் கண்ணனே தன் மணாளன் என்ற எண்ணம் நாளாக நாளாக உறுதிப் பட்டு வந்தது. ஆனால் பெரியாழ்வாரோ இதை அறியவில்லை. பூக்களின் வாசம் மூக்கைத் துளைக்க, அந்த வாசம் தன் மூக்கில் ஏறினால் கூட இறைவனுக்குச் செய்யும் அபசாரம் ஆகிவிடுமோ என எண்ணும் பெரியாழ்வார் ஒரு துணியைத் தன் முகத்தில் சுற்றிக் கொண்டு பூக்களை மாலையாகத் தொடுப்பார்.

மாலைகளின் வண்ண விசித்திரமான பூக்களின் அழகும், அவை ஒன்றுக்கொன்று பொருந்தும்படி வண்ணக்கலவை அமைக்கப் பட்டு மாலையான அழகையும் பார்க்கப்பார்க்க கோதையின் மனம் அந்த மாலையின் வசப்பட்டது. மாலையின் வசம் மட்டுமா? அதை அணியும் ரங்கனின் அழகிலும் அவள் மனம் வசப்பட்டது. இவ்வளவு அழகான மாலையை அணியும் ரங்கன் எத்தனை அழகு? ஆஹா, இந்த மாலையை ரங்கன் மட்டும் அணியாமல் நாமும் அணிய நேர்ந்தால், நாமும் அந்த அழகு ரங்கனும் இந்த மாலையை ஒருவர் கழுத்தில் ஒருவர் போட்டுக் கொண்டால்? கோதையால் ஆசையை அடக்கமுடியவில்லை. அங்கு இருந்த மாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.பெரியாழ்வார் தன் அநுஷ்டானங்களைச் செய்யச் சென்றிருப்பதை உணர்ந்தாள். அங்கு இருந்த ஒரு கண்ணாடியின் முன் போய் நின்று தன் அழகைத் தானே ரசித்தாள். ஆஹா, எத்தனை அழகாய் இருக்கிறது இந்த மாலை நமக்கு? இதே போல் ரங்கனுக்கும் இருக்குமோ? நான் அணிந்த மாலையை அவன் அணிவானா? சட்டெனக் கழற்றிப் பூக்குடலையில் அந்த மாலையை வைத்தாள் கோதை. ஏதும் அறியாத பெரியாழ்வார் அந்த மாலையை எடுத்துச் சென்றுவிட்டார். ரங்கனுக்கு அன்று அந்த மாலைதான் அணிவிக்கப் பட்டது. அன்று மட்டுமா? இது தொடர்ந்தது. தினம் மாலைகளைக் கட்டிவைத்த பெரியாழ்வார் அநுஷ்டானங்களுக்குச் செல்வதும், கோதை மாலையை அணிந்து அழகு பார்த்துக் கொள்வதும், பின்னர் அதே மாலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று ரங்கனுக்கு அணிவிப்பதும் தொடர ஆரம்பித்தது. ஆனந்தத்தில் ஆழ்ந்த கோதைக் கண்ணன் மேல் பல பாடல்களைப் புனைந்து பாடினாள். ஊர்ப் பெண்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாவை நோன்பு நூற்றாள். கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆகப் போவதாயும் எண்ணி எண்ணி உவந்தாள். வாரணமாயிரம் புடைசூழ மதுசூதனன் நம்பி வந்து மாலையிடப் போவதாய் உறுதியாய் நம்பினாள். ஆனால் அவள் மன மகிழ்வைப் பொசுக்கும் வண்ணமாய் ஒருநாள்……

என்றும்போல் அன்றும் மாலையை எடுத்துச் சென்ற பெரியாழ்வார் பூக்குடலையில் இருந்து மாலையை எடுக்கும்போது அதிலிருந்து பெண்ணின் நீண்ட தலைமயிர் கூடவே வந்தது. அதைக் கண்ட பெரியாழ்வார் திடுக்கிட்டார். அன்று ரங்கனுக்கு மாலை இல்லை. மறுநாள் மனதில் ஏதோ சந்தேகம் ஜனிக்க, மாலையைக் கட்டிவைத்துவிட்டு ஒளிந்திருந்து கவனித்தார். கோதை வந்து திருட்டுத் தனமாய்ப் பார்த்துக் கொண்டே மாலையை எடுப்பதையும் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்துக் கொள்வதையும் கண்டார். உடனேயே மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். கோதையின் செயலைக் கண்டித்தார். கடுமையான வார்த்தைகளால் அவளைக் கடிந்து கொண்டார். அன்றும் ரங்கனுக்கு மாலை இல்லை. ரங்கனோ தவித்தான். என்ன ஆயிற்று? கோதையின் மாலைகள் ஏன் நமக்கு வரவில்லை? அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் ரங்கன் வந்தான். மாலை ஏன் வரவில்லை எனக் கேட்டான். கோதை சூடிய மாலையை ரங்கனுக்கு அணிவிப்பது எங்கனம்? எனப் பெரியாழ்வார் நினைத்ததாகவும், அதனாலேயே ரங்கனுக்கு மாலை இல்லை எனவும், துக்கத்துடன் சொன்னார். தூங்கினாலும், கனவின் தாக்கத்தினால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. அரங்கன் அவரைத் தேற்றினான். கோதை நமக்கு உகந்தவள் அன்றோ? அவள் இருக்குமிடம் நம்மிடம் அன்றோ? உமக்குக் கோதையின் பிறப்பைப் பற்றி ஏதும் தெரியவில்லை போலும்? சாக்ஷாத் பூதேவி அன்றோ அவள்? அவள் நமக்கு உகந்தவளே. அவள் சூடிக்கொடுக்கும் மாலைகள் நமக்கு மிகவும் உகந்தவை. கோதை சூடிக் கொடுத்த மாலைகளன்றி வேறு மாலைகள் நமக்கு வேண்டாம். எனத் திட்டவட்டமாய்ச் சொன்னான் ரங்கன்.

கனவு கலைந்து எழுந்த பெரியாழ்வார் நடந்தது கனவா, நனவா என்ற கலக்கத்தில் சற்று நேரம் இருந்துவிட்டுப் பின் தன் பெண்ணை அழைத்துக் கனவில் வந்த ரங்கன் சொன்னதை அவளிடம் சொன்னார். ஆண்டவனையே ஆளும் பேறு பெற்ற நீ இன்று முதல் “ஆண்டாள்” என்னும் பெயரால் அழைக்கப் படுவாய் என்றார். ஆண்டவனுக்கே மாலைகளைச் சூடிக் கொடுத்த நீ “சூடிக் கொடுத்த நாச்சியாரா”கவும் ஆவாய் என வாழ்த்தினார். மகள் ஏதோ பைத்தியமாய் இருக்கிறாள் ரங்கனைத் தான் மணப்பேன் என்கிறாள் என்று நினைத்த பெரியாழ்வார் அன்று முதல் ரங்கனிடம் அவளைச் சேர்ப்பது எங்கனம்? எனக் குழம்பினார். அப்போது ரங்கன் மீண்டும் அவர் கனவில் வந்து, ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரும்படி சொல்ல, அவ்விதமே அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். செல்லும்போது காவிரிக்கரையிலேயே கோதை காணாமல் போக, கலங்கினார் பெரியாழ்வார். கோதை தன்னிடம் இருப்பதையும் அவள் தனக்குத் திருவடிச் சேவை புரிவதையும் பெரியாழ்வாருக்குச் சூசகமாய்த் தெரிவித்தார் ரங்கநாதர். ஆனால் ஏற்கெனவே அப்பா ஒரு கிறுக்கு, பெண்ணோ பெரிய பைத்தியம் என்று சொல்லும் ஊர் என்ன சொல்லும்?? ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆண்டவனை இறைஞ்சினார் பெரியாழ்வார். அதன்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ரங்கமன்னார் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாளைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம்.


இனி கோயில் பற்றிய சில செய்திகள் நாளை!

4 comments:

Anonymous said...

நீங்க திருநெல்வேலியா?

Geetha Sambasivam said...

ம்ஹும், நான் மதுரை! :))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

ஆண்டாள் பிறந்தது மார்கழி மாதமா.
ஏன் எல்லாம் மாறி வருகிறது கீதா/

இன்னோரு பதிவில் ராமர் ஜாதகம் ஜனவரி மாதம் பிறந்ததாகச் சொல்கிறது.!!
எப்படியோ ,
பாவை நோன்பு மாதத்தில் அவள் இருந்ததும் இறைவனோடு ஒன்றியதும்
நீங்கள் விளக்கமுறச் சொல்வது மனதுக்கு மிக இதமாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

//ஆண்டாள் பிறந்தது மார்கழி மாதமா.
ஏன் எல்லாம் மாறி வருகிறது கீதா///

ஹிஹிஹி, ரேவதி, தட்டச்சுப் பிழை, சரி செய்துட்டேன். :))))))))))