எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 14, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - தென்காசி விஸ்வநாதர்!

குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள், அல்லது நூற்றாண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான். அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது. இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை கோயிலுக்குப் பெயரை வழங்கி அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர். ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேஹம் செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர். இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர். அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990=ம் ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது.

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

3 comments:

மாதேவி said...

தென்காசி விஸ்வநாதரை தர்சித்தோம்.

"அருமையான சிற்பங்களுடன் கூடிய கோயில்" எனவும் மனத்தில் நிலைநிறுத்திக்கொண்டோம்.

Jayashree said...

இலஞ்சி முருகன் கோவில் மாதிரியே தெங்காசி குன்றத்து முருகன் கோவிலும் அழகா இருக்கும்.இடக்காட்டு ஸ்வாமி விருதுநகர் பக்கத்தில் சதுர கிரின்னு நினத்தேன்.

குற்றாலம், பாளையம்கோட்டையில் இருந்தவரை ஒரு சீசன் விட்டதில்லை . ஸ்டூடன்ட் லைஃப் !! குற்றாலம் போன பின் எல்லா இடத்துக்கும் நடை தான்.ஷெண்பகாதேவி தேனருவி ஒண்ணும் விட்டதில்லை. வி ஐ பி ஃப்ரெண்ட் ஓட போனா பழத்தோட்ட அருவி!!மெய்ன் ஃபால்ஸ் லேந்து கோவிலை பாக்கும்போதே கஷ்ட்டமா அப்பவே இருக்கும். சத்திரம் மாதிரி வைத்திருக்கும் ஜனங்கள்.அருமையே தெரியாம எவ்வளவு இடம் இப்படி நாசம்!! ஆன அங்க (முன்ன) கிடைக்கும் தைலம் தடவி குளித்தால் அதன் வாசனையே தனி!! இனிமே எங்க?!! ஹ்ம்.. அது ஒரு கனா காலம் !!

குப்பன்.யாஹூ said...

as always nice post.