எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 17, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்- நெல்லையப்பர்!


திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.

கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். இந்த வேணுவனம் திருநெல்வேலியானது இன்னொரு பக்தராலே.

அவரும் வேதசர்மா என்ற பெயரோடு தினமும் வேணுவனநாதருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அவரைச் சோதிக்க எண்ணிய ஈசன் நாளடைவில் அவருக்குச் செல்வம் குறையும்படி செய்ய, அக்கம்பக்கம் சென்று இறைஞ்சிப் பணமோ நெல்லோ பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்துவந்தார். ஒருநாள் அக்கம் பக்கம் வீடு வீடாய்ச் சென்று நெல்லை வாங்கிச் சேகரித்து சந்நிதி முன்னால் காயப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார். திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதசர்மா மழை நீரில் நெல் நனைந்து அடித்துச் சென்றுவிடுமே என எண்ணி வேகமாய் ஓடி வந்தார். என்ன ஆச்சரியம்?? நெல்லைச் சுற்றிக் கொண்டு மழை நீர் ஓடியது. நடுவே உள்ள காய்ந்த இடத்தில் மட்டும் வெயில் அடிக்க நெல் அங்கே காய்ந்து கொண்டிருந்தது. அசந்து போனார் வேதசர்மா. மன்னனுக்கு விஷயம் போக மன்னனும் வந்து பார்த்து அசந்து போனான். உலகிற்குப் பெய்த மழை வேதசர்மாவின் நெல்லைக் காத்த அதிசயம் ஊரெங்கும் பரவியது. நெல் நனையாது காத்த ஈசனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என அழைக்கலானான் மன்னன். வேணுவனம் என்றிருந்த அப்பகுதியும் திருநெல்வேலி என அழைக்கப் பட்டது.

ஈசன் பெயர் நெல்லையப்பர் என்றிருந்தாலும் வேணுநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார். அம்பாள் வடிவுடை அம்மை என்றாலும் காந்திமதி என்ற பெயரிலேயே அறியப் படுகிறாள். இதைத் தவிர அம்பாள் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் எனவும் அழைக்கப் படுகிறாள். மிக மிகப் பெரிய கோயிலாக பிரமிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருஷங்கள் பழமையான கோயில் என்று சொல்லப் படுகிறது. நிறைய இதிகாச, புராணத் தகவல்களோடு அதி அழகான சிற்பக் கலை வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் உள்ளது. ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித் தனிக் கோயில். தனித் தனி ராஜ கோபுரங்கள். ஸ்வாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைக்கும் மண்டபத்தைக் கல் மண்டபம் என்று சொல்கின்றார்கள்.

மிகப் பெரிய தெப்பக்குளம் ஒன்று கோயிலின் உள்ளேயே இருக்கிறது. சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் பாதுகாக்கப் படுகிறது. வேண்டுமானால் உள்ளே சென்றும் பார்க்கலாம். ஆனால் கீழே இறங்க முடியாது. கோயிலின் பிரம்மாண்டம் அசத்துகிறது. மூலஸ்தானத்தில் நெல்லையப்பருக்கு அருகேயே பெருமாளும் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். முக்கியமான ஐந்து சபைகளில் இரண்டு சபைகள் இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. குற்றாலத்தில் நாம் கண்டது சித்திர சபை. இங்கே நாம் காண்பது தாமிர சபை. இந்தத் தாமிர சபை இரண்டாம் பிரஹாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் மட்டுமில்லை. இங்குள்ள நந்தியும் பெரியதாய் உள்ளது. நந்தி வெள்ளை நிறத்தில் உள்ளது. விநாயகரும் பெரிய விநாயகர். ஒன்பது அல்லது பத்தடிக்குக் குறையமாட்டார். தக்ஷிணா மூர்த்தி, சண்டேஸ்வரர், துர்கை, பைரவர் போன்ற பரிவார மூர்த்திகள் உண்டு. இரண்டாம் பிரஹாரத்தில் தான் இசைத் தூண்கள் உள்ளன. மூன்றாம் பிரஹாரம் மிகப் பெரியது என்றும், 3 யானைகளுக்கு மேல் சேர்ந்து நடக்கலாம் என்றும் சொல்கின்றனர். இந்தப் பிரஹாரத்தில் இருந்தே அம்மன் கோயிலுக்குச் செல்லும் மண்டபம் உள்ளது. மிகப் பெரிய இவை பார்க்கவே பிரமிப்பை ஊட்டுகிறது. இந்தப் பிரஹாரத்தில் தான் மேலே சொன்ன தெப்பம் உள்ளது. இதைத் தவிர வெளித் தெப்பமும் ஒன்று உண்டெனச் சொல்கிறார்கள். பார்க்கவில்லை.

நாங்க தங்கி இருந்த அறையிலிருந்து நடந்தே போகலாம் என்று சொன்னாலும் பேருந்தில் போனோம். ஊர் மிக அழகும் சுத்தமுமாய் உள்ளது. கோயில் ராஜ கோபுரங்களை அடுத்த வீதிகளைச் சுற்றிக் கடைகள்,கடைகள், கடைகள். திருநெல்வேலியின் பாரம்பரிய போத்தீஸுக்கும், ஆரெம்கேவிக்கும் நடுவே சென்னையின் நல்லியும் இடம் பெற்றுள்ளது. திரும்பிப் பேருந்தில் வர வேறு வழி. என்றாலும் குழப்பம் இல்லை. கோபுர வாசலுக்கு நேரே இருட்டுக்கடை அல்வாக்கடை. போகும்போது தான் கடை திறந்து சிறிது நேரம் என்றார்கள். திரும்பி வந்துதான் எப்படியும் அல்வா வாங்கணும். ஆகவே திரும்பி வேறே வழியில் கடைக்குச் சுத்திண்டு வந்தோம். ஒரே அதிர்ச்சி. பெரிய வரிசை அல்வாவுக்கு. அல்வாவுக்கே அல்வா கொடுக்கவெல்லாம் முடியலை. பெண்கள் வரிசை நல்லவேளையாக(?) தனியே இருந்தது. நான் அதில் போய் நின்றேன். திருநெல்வேலிக்குப் போறோம்னதும், அல்வாவுக்கான முன்பதிவுகளும், கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கான முன்பதிவுகளும் நிறையவே இருந்தன. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நின்னதும் அல்வா கிடைத்தது. நாம வாங்கற ஒரு கிலோ, அரை கிலோவெல்லாம் அவங்களுக்கு பிசாத்து போலிருக்கு. அலக்ஷியமாப் பார்த்தாங்க. சரிதான்னு நினைச்சுட்டு வாங்க வேண்டியவங்களுக்கு எல்லாம் வாங்கிக் கொண்டோம். வரும் வழியிலே கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தோம். அல்வாவை முடிச்சுட்டு அறைக்குத்திரும்பினோம். அடுத்த பதிவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், அதன் பின்னர் சங்கரன் கோயிலும். காத்திருங்கள். ஆண்டாளையும், வடபத்ரசாயியையும் பார்க்க.


திருநெல்வேலி அல்வாக்கடை படம் உதவி: நன்றி, துளசி.

6 comments:

குப்பன்.யாஹூ said...

nice post, thanks for sharing

Jayashree said...

கோவில் அழகு, பிரம்மாண்டம் தானே ? எனக்கு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலும் பிடிக்கும். சங்கரன் கோவிலும் நன்றாக இருக்கும். முந்தி டவுன் பஸ் ஸ்டான்ட் க்குக் பின்னால ஒரு பிள்ளை ஒருத்தறோட "ம்ளாபொடி" தோசை, இட்லி வியாபாரம் சாயந்திரமா இருக்கும் . சாஃப்டா, புளிக்காம வெள்ளை வெளேர் என்று.....ம்ம் யம்மி!! திருநெல்வேலி சைவ பிள்ளைமார் இட்லி, தோசைக்கு நிகர் இல்லை:))

ambi said...

//கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தோம். //

ஆமா, ஆமா! சொன்னாங்க. தாமிரபரணி மகாத்மியம் புக் கிடைக்குமா?னு நைசா விசாரிச்சீங்களாமே. :p

நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சோ என்னவோ ஏற்கனவே அதை ஒளிச்சு வெச்ருந்தோம் நானும் தம்பியும். :))))

Geetha Sambasivam said...

@வ(அ)ம்பி, நைசா என்ன நைசா, நேராவே விசாரிச்சேன், அதான் கொடுக்கலையே? அதுக்காக எழுதாம விடுவோமா என்ன??? நீங்க ஒளிச்சு வைச்சாலும் வைப்பீங்க, கணேசன் அப்படிச் செய்யமாட்டானாக்கும்! :P:P:P:P:P:P:P:P

Geetha Sambasivam said...

வாங்க குப்பன் யாஹு, தொடர் வருகைக்கு நன்றிங்க.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, நீங்க சொன்ன மாதிரி எதுவும் இல்லை அங்கே. ஆனால் சந்திரவிலாஸ்னு ஒரு ஹோட்டல் இருக்காம், நெல்லையப்பர் கோயில் பக்கத்திலே உள்ளூர்க்காரங்களால் பல வருஷங்களாய் நடத்தப் படுவதுனு சொன்னாங்க. அது பத்தியும் அப்புறம் தான் கேள்விப் பட்டோம்.