ஸ்ரீவில்லிபுத்தூர் பல விஷயங்களுக்குப் பேர் போனது. முக்கியமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. எல்லா இடத்துப் பால்கோவாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவாவுக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப் படும். இதை அடுத்துக் கண்ணன் பிறந்த மதுராவிலும், அவன் குடித்தனம் நடத்திய துவாரகையிலும் கிடைக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சுத்தமான பசும்பால் தான். அதுவும் குஜராத் பூராவுமே அநேகமாய்ப் பசும்பால் தான். நாங்க இருந்த ஐந்து, ஆறு வருடங்களில் எருமையே பார்க்கலை. அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை. சக்கைனதும் ஏதோ சக்கையாய் இருக்கும்னு நினைக்காதீங்க. அருமையான வாசனைத் தைல மூலிகைகளின் வேர்கள், பூக்கள், மொட்டுகள், இலைகள் எல்லாம் சேர்ந்த ஒன்று. இடித்துச் சூரணம் மாதிரி இருக்கும். பொதுவாகவே மதுரைப்பக்கம் பெருமாள் கோயில்களில் தாயார் சந்நிதியில் மஞ்சளும், ஆண்டாள் சந்நிதியில் இந்தத் தைலச் சக்கையும் தான் பிரசாதம். அதுவும் மதுரை வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வருஷா வருஷம், ராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின்போது ஸ்வாமி வீதி உலா வரும்போது கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. ஒருதரம், இரண்டு தரம்னு வாங்கிட்டு, அம்மா வாங்கினதையும் சேர்த்து வெந்நீரில் ஊறவைச்சு, அம்மியில் அரைச்சுக் காலம்பர குளிக்கும்போது தலையில் தடவிக் கொண்டு ஊற வைச்சுக் குளிச்சால் மணமோ மணம்! பல நாட்கள் மணம் வீசும். சண்பகப் பாண்டியனுக்குச் சந்தேகமே வந்திருக்காது. ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை மணம் தான் தேவியின் கூந்தலில்னு அடிச்சுச் சொல்லி இருப்பான் அவனே. தருமிக்கும் பொற்கிழி கிடைச்சிருக்காது.
அருமை தெரியலை, போகட்டும். இப்போப் போயிருந்தப்போ பால்கோவா வாங்கினீங்களானு கேட்கிறீங்களா? ஆமாம், வாங்கினோம், வாங்கினோம், ஆனால் சுவை??? அதேபோல் தைலச் சக்கை கிடைக்கலை, ஆண்டாள் ஸ்நாநப் பவுடர்னு பாக்கெட்டுகளில் விற்கிறாங்க. அரை மனசோடு வாங்கிட்டு வந்தது இன்னும் இருக்கு தேய்ச்சுக்காமல். எல்லாம் அது ஒரு கனாக்காலமாயிட்டது. போகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையை இன்றைக்கும் மாறாமல் வைத்திருக்க ஆண்டாளின் பெயர் ஒண்ணே போதுமே? வேறே என்ன வேண்டும்?? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் புகழ் என்றைக்கும் மங்காது. அதே போல் நம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட அரசுச் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான். இதை அரசுச்சின்னமாக அறிவித்தவர் ஓமந்தூரார்னு நினைக்கிறேன். யாருப்பா அங்கே? ஓமந்தூரார் தானே அல்லது வேறே யாருமானு வந்து சொல்லுங்க கொஞ்சம். ஆனால் அப்போது பிரதமராய் இருந்த நேருவிற்கு சமயச் சின்னத்தை ஏற்க மனமில்லை என்றும், ஓமந்தூரார் இதை சமயச் சின்னமாய்ப் பார்க்கவேண்டாம் எனவும், திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாய்ப் பார்க்கும்படியும் சொன்னதாகக் கேள்விப்பட்டுப்படிச்சு இருக்கேன். இத்தனை புகழ் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் அடுத்ததாய்ப் புகழ் பெற்றவர் வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார். மேலும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் சொந்த ஊர் எனத் தெரிய வருகிறது.
வைணவ திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒரு திவ்ய தேசம் தான். கடைசித் தலமான இது ஆண்டாளின் பிறந்த வீடு. ஸ்ரீரங்கமோ ஆண்டாளின் புகுந்த வீடு. அதோடயா?? மதுரையின் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆண்டள் சூடிக் கொடுத்த மாலையையும், அவள் அனுப்பி வைக்கும் பரிவட்டங்களையும் அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குவார். இவருக்காக ஆண்டாள் நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாய் நேர்ந்து கொண்டாள். ஆனால் ஆண்டாளால் அதைச் செய்ய முடியவில்லைபோலும். ஆண்டாளின் இந்த விருப்பத்தைப் பின்னால் வந்த ஸ்ரீராமநுஜர் நிறைவேற்றி வைத்துவிட்டு ஸ்ரீவில்லி புத்தூர் சென்றால் என்ன ஆச்சரியம்??? அங்கே இருந்த ஆண்டாள் விக்ரஹம், “என் அண்ணாரே!” என அழைத்துக் கொண்டு முன் வந்து ஸ்ரீராமாநுஜரை வரவேற்றது. “பெரும்புத்தூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்ற வாழ்த்தையும் பெற்றாள் ஆண்டாள். இனி கோயிலுக்கு உள்ளே நுழையுமுன் சற்றே ஆண்டாளின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோமா?? அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிகச் சிறந்த சில கதைகளில் இதுவும் ஒன்று.
4 comments:
thanks for sharing. I always feel proud to say that I started my school (UKG, 1st standard) in srivilliputhur . that too under teacher Vedha.
Srivilliputhur is One of the holy town.
நானும் முதல் இரண்டு வகுப்புகள் ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் படித்தேன்.அந்த ஊரில் இருந்த
6 வருடங்கள் பொன்னானவை.
கீதா சொல்வது போல ஊரே மணக்கும். ஆண்டாள் மாலையின் அழகு சொல்லி முடியாது. தங்கள் ஊர்ப் பெண் மாப்பிள்ளையாகவே பாவித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது நினைவு வருகிறது.
மதிய வேளைகளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கோவிலில் பூக்கட்டும் பாக்கியம் கூட கிடைக்கும்.
வாங்க குப்பன் யாஹூ, ரொம்ப சந்தோஷம், உங்க மலரும் நினைவுகளைப் பகிர்ந்ததுக்கு
வாங்க வல்லி, நாங்க போயிருந்தப்போ அறநிலையத் துறை அதிகாரி ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்குக் கிளி பிரசாதம் அளிக்கப் பட்டது. அவர் தயவில் எல்லாம் நன்றாய்ப் பார்த்தோம்.
Post a Comment