கேட்கக் கதை போல் இருந்தாலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பதிவு செய்யப் பட்டது. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியும் கூட. முதலில் இதைப் பதிவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள்.
முந்நூறு வருடங்களுக்கு முன்பாக சங்கரன்கோயிலின் உற்சவ மூர்த்தியைக் காணவில்லை. திடீரெனக் காணாமல் போயிற்று. அப்போது சங்கரன் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆளுகையின் கீழே இருந்த காலகட்டம். திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகரைக் காணோம் என்ற மனவருத்தம். அருகே இருந்த ராமநாதபுரத்துக்காரர்களுக்கோ, எங்கள் ஆளுகையில் இருந்தவரையில் இம்மாதிரியான ஒன்று நிகழ்ந்ததா?? என்ற எகத்தாளம். மக்கள் மனம் புழுங்கினர்.
அக்காலத்தில் திருநெல்வேலிச்சீமையை ஆண்டவர் நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான ஆறை அழகப்பமுதலியார் என்பார் ஆகும். ராமநாதபுரமோ சேதுபதி அரசரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் மூர்த்தம் சேதுபதியின் ஆளூகைக்கு உட்பட்ட பகுதிக்குப் போயிருக்கோ என்ற ஐயம். என்றாலும் இதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?? ஆறை அழகப்ப முதலியாருக்கு நிம்மதியே இல்லை. தம் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டு தம் புகழுக்கும், பக்திக்கும், இறை வழிபாட்டின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டதே என மனம் வருந்தித் துடித்தார். சிறந்த சிவபக்தரான அவர் மனம் கசிந்து உருகினார்.” சங்கரன் நயினார் கோயிலின் நாயகரைக் கண்டுபிடித்து அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்யும் வரையில் அன்னம் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால் என் உயிரே போனாலும் சரி. அப்படி என் உயிர் போயிற்றென்றால் இதுவும் ஈசன் அருள் என அதை ஏற்பதே நல்லது. இனி என் வேலை நயினாரைக் கண்டு பிடித்து சங்கரன் கோயிலிலே சேர்ப்பது ஒன்றே.” என்று கடுமையான சபதம் எடுத்துக்கொண்டு சங்கரன் கோயில் நாயகரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவருடைய நண்பர்கள் இம்முயற்சியைச் செய்யவேனும் உடலில் பலம் வேண்டாமா? இத்தகையதொரு கடும் விரதத்தை மேற்கொண்டால் எங்கனம் அலைந்து திரிந்து மூர்த்தத்தைத் தேடுவது? அதோடு ராஜ்ய நிர்வாகம் வேறே இருக்கிறதே? விரதத்தைத் தளர்த்துங்கள் என வேண்டிக் கொண்டனர். திட்டமாய் மறுத்த அழகப்ப முதலியார் மேலும், மேலும் நண்பர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பால்கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டார். இரவிலும், பகலிலும் தூங்காமல் நாயகரைத் தேடும் முயற்சி தொடங்கியது. கடும் முயற்சியின் பேரில் சங்கரன் கோயில் நாயகர் காணாமல் போன அன்றிலிருந்து கோயிலின் அர்ச்சகர்களுள் ஒருவரான சண்பகக்கண்நம்பி என்பவரும் காணாமல் போய்விட்டார் என்று தெரியவந்தது. நன்கு விசாரித்ததில் நம்பியே விக்ரஹத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்பதும் உறுதியானது.
ஆம், உண்மையில் சண்பகக்கண்நம்பியே அந்தத் திருட்டைச் செய்தார். நாயகரைக் கொண்டு போய் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அடகு வைத்துவிட்டார். ஆறை அழகப்பமுதலியார் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு தெரிந்து கொண்டே இவ்விதம் செய்திருந்தார். மன்னன் சேதுபதிக்கோ நாயகர் தங்கள் ஆளுகைக்குள் வந்தது தெரிய வரவே, உள்ளூர மனம் மகிழ்ந்தான். அந்த நாயகரை அடகுக்கடையில் இருந்து மீட்டு, உத்தரகோசமங்கை கோயிலிலே அவரை வைத்து வழிபாடுகள் செய்துவர உத்தரவிட்டான். இங்கே ஆறை அழகப்பருக்கு இந்தச் செய்திகள் யாவுமே கிட்டியது. ஒற்றர்கள் அறிந்து வந்து முழுத் தகவல்களையும் கொடுத்தனர். இரு ஆட்சிப் பகுதிக்கும் எப்போது பகையே. நம்மிடம் நட்பு முறையில் சேதுபதி அரசர் இல்லை. ஆகவே அவருக்கு எழுதி வேண்டிப் பெற்றுக் கொள்வது இயலாத காரியம். மேலும் சேதுபதி கேட்பார். மூர்த்தம் உம் ஆட்சியின் கீழே இருந்தபோது அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வக்கோ, திறமையோ அற்றுப் போய்க் களவாட விட்டவருக்கு மீண்டும் இந்த அரிய மூர்த்தத்தைக் கொடுக்க முடியுமா? உமக்கு எதற்கு அவர்? என்று பட்டெனக் கேட்டுவிடுவார். மானமே போய்விடும். சமஸ்தானத்து மந்திரிகளையோ, திவான்களையோ அனுப்பலாமா?
ம்ஹும், அவர்கள் எல்லாம் சேதுபதியின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறார்களே. மேலும் அவர்கள் போய் சேதுபதியை நேரில் பார்ப்பதும் இயலுமா?? முடியாதென்றோ தோன்றுகிறது. என்ன செய்யலாம்??? அப்போது அந்த சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி சமஸ்தானத்தின் ஸ்தானாதிபதியான பொன்னம்பலம்பிள்ளையின் நினைவு வந்தது முதலியாருக்கு. பொன்னம்பலம் பிள்ளை திறமைசாலி. எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரரையும் இளக வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஊற்றுமலை ஜமீந்தாரிணி பூசைத்தாயாரையே ஆனானப் பட்ட வடகரைத் தலைவரோடு சமாதானம் செய்து வைத்தவர் ஆயிற்றே? ஆனால் பொன்னம்பலம் பிள்ளை நம்மை வணங்குவதே இல்லையே? மற்ற ஸ்தானாதிபதிகள் கப்பம் செலுத்த வந்தால் கீழே விழுந்து ஆறை அழகப்ப முதலியாரை வணங்கிவிட்டே செல்வதுண்டு. இந்தப் பொன்னம்பலம் பிள்ளையோ நேரிலும் வருவதில்லை. எங்கேனும் பார்க்க நேர்ந்தாலும் கீழே விழுந்து வணங்குவதும் இல்லை. இவன் பேரில் நடவடிக்கையும் எடுக்க முடியாவண்ணம் கப்பத்தை ஒழுங்காய்ச் செலுத்திவிடுகிறான். இப்போது இவனையா போய் உதவி கேட்பது? அழகப்ப முதலியாரின் தன்மானமும், கெளரவமும் தடுத்தது.
9 comments:
கீழ விழுந்து வணங்கணுமா!!
சுவாரஸ்யமா இருக்கு கதை.
Nice narration.
Next part pls. :)
வாங்க வல்லி, ஆமாம், எல்லாம் ஈகோ படுத்தும் பாடு! வேறே என்ன?? என்றாலும் தமிழால் உயர்ந்தவர்கள், உயர்த்தினவர்களும் கூட. அதிலும் அந்தப் பூசைத் தாயாரின் தமிழால் எதிரிகள் கூட நண்பர் ஆனார்கள் என்றால் பாருங்க!
@அம்பி, அட, அம்பி, விலாசம் மாறி வந்துட்டீங்க போல??? :P:P:P:P:P
அடாடா, இண்ட்ரஸ்டிங்கா போகுது...ஆர்காட்டாரை/டாடா இண்டிகாமை குறை சொல்லாது சீக்கிரம் அடுத்த பகுதியை வலையேற்றவும். :)
அன்புள்ள ஐயா,
எனது ஊர் சிவகாசி. எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர்/கோமதியம்மை. இருப்பினும் நீங்கள் கூறியவற்றில் நிறைய விஸயங்கள் நாங்கள் இதுவரை கேள்விப்படாத தகவல்கள். மிகவும் நன்றி. தொடரை மிகுந்த ஆவலுடன் படித்துக்கொண்டு இருக்கின்றேன்.---கசேந்திரன்.
@மெளலி, என்ன இது??? ஆச்ச்ச்ச்ச்சரியம்ம்ம்மா இருக்கே??? அடுத்தது போடறதுக்குள்ளே டாடா படுத்தலும் ஆரம்பிச்சுடுத்து! :P
திரு கஜேந்திரன், பாராட்டுகளுக்கு நன்றி. அன்புள்ள அம்மா தான், ஐயா இல்லை. மீண்டும் நன்றி.
சுவாரஸ்யமா இருக்கிறது.
Post a Comment