வந்திருந்த அடியாரில் ஒருவர் திடீரெனத் தன் காலில் விழுந்ததும் சேதுபதி மன்னர் திகைத்துப் போனார். வணங்கிய பொன்னம்பலத்தா பிள்ளை எழுந்தார். உடனேயே,
“சேதுபதியென்று நர சென்மமெடுத்த தாய் கமல
மாதுபதிக்குன்னையன்றி வாயாதே- நீதிபதி
நீயே விசயரகுநாதனினையீன்ற
தாயே யருட்கோசலை!”
என்று சேதுபதி அரசர் விசயரகுநாத சேதுபதியைக் குறித்து ஒரு பாடல் பாடினார். தாங்கள் யார் என விசாரித்தார் சேதுபதி அரசர். மேலும் ஏன் இந்தப் பாட்டைப் பாடி என்னைப் புகழ்கிறீர்கள் என்றும் கேட்டார். பொன்னம்பலத்தாபிள்ளை தம் சுய அறிமுகத்தைச் செய்து கொண்டார். சேதுபதி அரசரின் புகழைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரைத் தரிசிக்கும் ஆவலில் இருந்ததாகவும், பழநியாண்டவனின் அருளால் இன்று இது நிகழ்ந்ததாகவும் கூறினார். அரசருக்கு இவர் தான் பொன்னம்பலத்தா பிள்ளை என அறிந்தது ஒரு ஆச்சரியம் எனில் அவர் தம்மீது ஒரு பாடல் புனைந்ததும், அதில் தம் தாயைக் கோசலை என்ற பெயரில் விளித்ததும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அரசரின் தாயின் பெயர் உண்மையிலும் கோசலை ஆகும். ஆனால் பொன்னம்பலத்தா பிள்ளையோ அதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பாடலில் அவர் சேதுபதி அரசரின் தாயைக் கோசலை என விளித்தது முற்றிலும் தற்செயலாகும். ராமரைப் பெற்றெடுத்த கோசலைக்கு நிகரானவள் என்ற புகழ்ச்சியான சொற்களுக்காகவே சொல்லி இருந்தார் பொன்னம்பலம் பிள்ளை. ஆனால் விஜய ரகுநாத சேதுபதி அரசருக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தன் தாயின் பெயர் இந்தப் பொன்னம்பலத்தா பிள்ளை எவ்விதம் அறிந்தார்? உண்மையிலேயே இவர் மிகுந்த பக்திமானாகவும், சிறந்த கடாக்ஷம் நிறைந்த வித்வானாகவும் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு நம் அன்னையின் பெயரும் தெரிந்திருக்கிறது. மன்னரின் மனம் மிக மிக மகிழ்ந்தது. இவர் ஸ்தானாதிபதியாக இருக்க உண்மையிலேயே சொக்கம்பட்டி ஜமீன் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டார். பொன்னம்பலத்தா பிள்ளையோ, தம் மனதில் ஏதோ பட்டதால் சொன்னதாகக் கூறினார். அரசருக்கு அவரிடம் மேலும் மதிப்பு அதிகமாயிற்று.
அவரை அமரச் செய்து பேச யத்தனித்த மன்னனிடம் தம்முடன் வந்த அனைவருக்கும் அந்த மரியாதை கிட்டவேண்டும் என பொன்னம்பலத்தா பிள்ளை சொல்ல, அரசர் இன்னும் வியப்பில் ஆழ்ந்தார். இப்படிப்பட்ட ஒரு ஸ்தானாதிபதி இருந்தால் மக்களுக்கு எவ்வளவு மன நிறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது மன்னருக்கு. பொன்னம்பலத்தா பிள்ளையுடன் வந்தவர்களில் முக்கியமான சிலருக்கு ஆசனம் அளிக்கச் செய்தார். அரசர்களுக்கு முன் சரியாசனத்தில் அமருவது என்பதே நடக்காத அக்காலகட்டத்தில் சேதுபதி அரசரோடு சரியாசனத்தில் பொன்னம்பலத்தா பிள்ளை அமர்ந்தார். இருவரும் சற்று நேரம் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டனர். சேதுபதி அரசருக்குப் பொன்னம்பலத்தா பிள்ளையின் அறிவாற்றல் வியப்பில் ஆழ்த்தியது. இவரைப் பற்றிக் கூறும் அனைத்தும் உண்மையே அன்றிக் கட்டுக்கதை அல்ல என்பதையும் புரிந்து கொண்டார். அவரைச் சில நாட்கள் அங்கே தங்கச் சொன்னார். இசைந்த பிள்ளையும் சிலநாட்கள் அங்கே தங்கிக் கொண்டு அங்கிருந்தே பழநிக்குப் போய் முருகனை மனமார வேண்டிக் கொண்டு மீண்டும் ராமநாதபுரம் வந்தார். பின்னர் தம்முடன் வந்தவர்களில் சிலரை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பினார். தக்க தருணம் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.
ஒருநாள் மன்னரிடம் பேசும்போது, “இந்த சமஸ்தானத்தின் பெரிய கோயில்களைத் தரிசிக்கத் தமக்கு ஆசை என்றும் முக்கியமாய் திரு உத்தரகோச மங்கையைத் தரிசிக்கவேண்டும் என்றும் மணிவாசகப் பெருமான் உருகி உருகிப் பாடிய பல திருப்பாடல்களையும் பாடி அந்தப் பெருமானை வழிபட ஆசை என்றும் தெரிவித்தார். மஹாராஜாவும் இசைந்து அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பொன்னம்பலத்தா பிள்ளையை திரு உத்தரகோச மங்கையை தரிசித்து வரும்படி அனுப்பி வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளைக்கு மனம் படபடத்தது. தாம் மேற்கொண்ட கைங்கரியம் நல்லபடியாக முடியவேண்டும். அதற்கு அந்தப் பெருமானே உதவ வேண்டும். உண்மையில் உத்தரகோச மங்கையின் மற்ற மூர்த்தங்களை விட அங்கே தற்சமயம் குடி இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை அல்லவோ காணவேண்டும்? அதற்காகத் தானே தாம் வந்திருப்பது??? வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கோயிலுக்குச் சென்றார் பொன்னம்பலத்தா பிள்ளை.
ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம் செய்தார். ஆலயக் குருக்களை ஒவ்வொரு மூர்த்தமாகச் சொல்லித் தரிசனம் செய்து வைக்குமாறும் மூர்த்தங்களின் சிறப்புகள், வரலாறு போன்றவற்றையும் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தமாகத் தரிசனம் செய்து வைக்கப் பட்டது. ஆயிற்று. இதோ, வந்தாயிற்று. இதோ, இதோ, இங்கே இருக்கிறாரே சங்கரன் கோயில் நாயகர். பொன்னம்பலத்தா பிள்ளை எதுவுமே தெரியாதது போல் ஒன்றுமே கேட்காமல் குருக்கள் முகத்தைப் பார்த்தார். குருக்களும், “இவர் சங்கரநயினார் கோயிலின் நாயகர்” என்று சொல்லி மூர்த்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளையின் மனம், உடல், என அனைத்தும் பதறியது. என்றாலும் மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டே, “சங்கரன் நயினார் கோயிலின் நாயகரா? இங்கே எப்படி வந்தார்?” என்று மீண்டும் எதுவுமே தெரியாதது போல் கேட்டார். குருக்கள் விளக்கிச் சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ஒரு க்ஷணம் அந்த நாயகரை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. சீச்சீ, ஒரு அரசன் தம் அரசை இழந்துவிட்டு மாற்று நாட்டு அரசனின் கீழ் இருப்பது போலல்லவா நம் நாயகர் இங்கே வந்து இருக்கிறார்?? என்ன கொடுமை இது? அவருக்குரிய சிறப்புகளை எல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்துவிட்டாரே? ஐயனே, உனக்கே இது ஏற்புடையதாய் உள்ளதா?” அடுத்த கணம் அவர் எண்ணமெல்லாம் ஒரு அழகான தமிழ்ப்பாடலாக உருவெடுத்தது.
“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”
6 comments:
மதிப்பிற்குரிய அம்மா,
தொடரைப் படிக்க படிக்க என் கண்களில் நீர் முட்டுகிறது. ஆர்வம் மேலிடுகிறது. விரைந்து இந்த தொடரினை எழுதுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
- கஜேந்திரன், சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
மதிப்பிற்குரிய அம்மா,
சங்கரன் கோவில் தொடரைப் படிக்க படிக்க என் கண்களில் நீர் முட்டுகிறது. ஆவல் மேலிடுகிறது. தயவுசெய்து விரைந்து தொடரை எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
== கஜேந்திரன், சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
தொடருங்கள்..அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
வாங்க கஜேந்திரன், நிஜமாவே கண்ணீர் வரும்தான் புற்றெங்கேனு படிக்கறச்சே. பல வருஷங்களாப் படிச்சும் ஒவ்வொரு தரம் படிக்கும்போதும் எனக்கும் கண்ணீர் வந்துடும்.
வாங்க மெளலி.
//“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”//
அருமை அருமை.
இறைவன் புன்னை வனத்தில் இருந்த போது காவற் காத்தவருக்கு இப்போதும் முதல் மரியாதை நடப்பதை தலவரலாறு படித்தேன். அவர் பெயரில் இருந்த பெயரை மாற்றி முத்துராமலிங்க தெரி என்று இப்போது மாற்றி விட்டார்களாம்.
நிறைய கதைகள் உள்ள கோவில்.
Post a Comment