எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 07, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்


எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.


உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.


காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.

5 comments:

LK said...

//ல் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.//

:((((

மாதேவி said...

ஏழுவகைத் தாண்டவங்கள் நல்ல விளக்கங்களுடன் அறிந்து கொண்டேன். நன்றி.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஸ்ரீமதி,
சப்த தாண்டவம் பற்றி மிக அருமையாக எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
1. சித்திர சபை ஆகிய குற்றாலத்திற்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் போய் வந்தேன். எனக்குத் தெரிந்து நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். அங்கிருந்த ஒருவர் மிக அழகாக ஒவ்வொரு ஓவியத்தையும் விளக்கிக்கொண்டே வந்தார். சிதம்பரத்தின் வடிவத்திலேயே அங்கே கூரை வேயப்பட்டிருப்பதைக் காணலாம். நடராஜருக்கு உரிய ஆறு அபிஷேகங்களும் அங்கு உண்டு எனவும், அபிஷேகத்தை ஓவியத்தின் மீது செய்ய முடியாது என்பதால், ஒரு நிலைக் கண்ணாடி அமைத்து அந்தக் கண்ணாடிக்கு அனைத்து அபிஷேகங்களும் நடக்கும் என்று என் தந்தை அடிக்கடி சொல்வார்.
2. காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்ததைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப் பற்றி விபரமாக எழுத வேண்டும். சிதம்பரத்திலும் மேற்கு கோபுரம் சிறு பின்னமான பிறகு தக்க ஆலோசனைகளின் படி, ஒரு கான்க்ரீட் பெல்ட் போட்ட பிறகு இப்பொழுது கொஞ்சம் சரியாகியிருக்கின்றது. காளஹஸ்தியில் கோயில் கட்டிய அதே கிருஷ்ண தேவராயர் தான், சிதம்பரத்தின் வடக்கு கோபுரத்தை, தனது குஜராத் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கட்டினார் என்று வரலாறு கூறுகின்றது. மண் தரம், காற்று அடிக்கும் விதம், காலம் ஆகிய சிலவற்றின் காரணத்தால் காளஹஸ்தி கோபுரத்திற்கு நடந்தது போல நடந்திருக்கின்றது. ஆனாலும், அலட்சியம் ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். பிறகு விபரம் எழுதுகின்றேன்.
www.natarajadeekshidhar.blogspot.com

கீதா சாம்பசிவம் said...

சித்திர சபை உண்மையிலேயே மோசமான நிலைமையில் தான் இருக்கிறது தீக்ஷிதர் அவர்களே. 2007-லே நாங்க போனோம். அதுக்கப்புறமும் பல பத்திரிகைகளிலும் அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் படிச்சிருக்கேன். :(((( சித்திர சபைக்கே பராமரிப்பு வேணும்.

கீதா சாம்பசிவம் said...

நன்றி எல்கே,

நன்றி மாதேவி.