எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 01, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" (தன்னை மறந்த நிலை?)என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் இடது பதம் தூக்கி ஆடும் நடராஜர் மதுரை வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது பதம் தூக்கி ஆடுவார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அன்னை மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர், திருமணத்திற்கு வந்திருந்த ரிஷி, முனிவர்களை விருந்துண்ண அழைக்க, வியாக்ரபாதரும், பரஞ்சோதியும் தாங்கள் இருவரும் தினமும் தில்லையம்பலத்து ஆடிய ஈசனின் ஆட்டத்தைக் கண்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் எனச் சொல்ல, புன்னகை புரிந்த ஈசன் மதுரை மாநகரிலே ஒரு வெள்ளியம்பலத்தை உருவாக்கி அங்கேயே திருநடனம் புரிந்தார். அந்த வடிவிலேயே அர்ச்சாவதாரமாக இருந்து மீனாக்ஷி அம்மன் கோயிலின் வெள்ளியம்பலத்தில் ஈசன் அருள் புரிந்து வந்த ஒரு சமயத்தில், விக்கிரம பாண்டியனுக்குப் பின்னர் ராஜசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனைப் பற்றித்திருவிளையாடல் புராணம் கூறுவதாவது:

கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி
வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்
அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை
எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்.

ராஜசேகர பாண்டியன் ஆடல்கலையைத் தவிர மற்ற கலைகளில் நன்கு தேர்ந்தவன். அவன் அவைக்குச் சோழ நாட்டில் இருந்து வந்த ஓர் புலவன், அவனுக்கு பரதம் தெரியாது எனக் கண்டு ஆச்சரியமடைந்து, அப்போது பூம்புகாரில் ஆண்டு கொண்டிருந்த கரிகால் பெருவளத்தானுக்குத் தெரியாததே இல்லை எனப் பெருமிதமாய்ச் சொன்னான்.

பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.

இதைக் கேட்ட ராஜசேகர பாண்டியன் மனம் வெதும்பி பரதமும் கற்றுத் தேர்ந்திட வேண்டும் என எண்ணி பரதம் பயிலத்தொடங்கினான்.

ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற
நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி
வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான்.

உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால
வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா
அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற
நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்.

இந்தக் கூத்துக் கற்கும்போது தன் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் ஏற்படும் நோவை உணர்ந்த ராஜசேகர பாண்டியன், "ஆஹா, இதைக் கற்கும் எனக்கு இவ்வளவு நோவு ஏற்பட்டதெனில், இடையறாது ஆடும் ஈசனின் கால்களும் இதை விட அதிகமாய் நோவு எடுக்குமே" என வருந்தினான். ஈசனின் நிலையை எண்ணி, எண்ணித் துயரம் அதிகம் கொண்டான் ராஜசேகர பாண்டியன். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மன்னன் அன்றிரவு வெள்ளியம்பலம் சென்றான். தன்னிரு கைகளையும் சிரமேல் கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக ஈச்னை வேண்டினான். ஆடிய பாதத்தை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடும்படியும் அவ்வாறு ஈசன் கால் மாறி ஆடவில்லை எனில் தன் சுரிகை என்னும் வாளை நிலத்தில் ஊன்றி அதன் மேல் வீழ்ந்து தன் உயிரை விடப் போவதாயும் ஈசனிடம் கூறிவிட்டுப் பாண்டியன் வாள் மேல் வீழ்ந்து உயிரை விடத் தயாரானான்.

விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.

1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

ஆஹா, என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்? தூக்கிய திருவடியை ஊன்றி, ஊன்றிய திருவடியைத் தூக்கிக்கொண்டு கால்மாற்றி ஆடத்தொடங்கினான் கூத்தபிரான்.

நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

பெரியாய் சரணம் சிறியாய் சரணம்
கரி ஆகிய அம் கணனே சரணம்
அரியாய் எளியாய் அடி மாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்.

என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண
நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி
மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்
அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான்.

அதைக்கண்ட ராஜசேகரன் இந்தத் திருநடனம் அனைவரும் காணும் வண்ணம் இப்படியே நின்று அருள் செய்யவேண்டும் என வேண்ட அன்று தொட்டு இன்று வரை வலக்காலைத் தூக்கி ஆடிய நிலையிலேயே ஈசன் காட்சி தருகிறார் மதுரை வெள்ளியம்பலத்தில்.
டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.

5 comments:

sury siva said...

இந்தப்பதிவை ஒரு உபன்யாசமாக ( ஆன்மீகச் சொற்பொழிவாக) சொல்லிப்பார்த்தால் இப்படி இருக்குமோ ?

திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் அனுமதியை எதிர்பார்த்து, இந்த வீடியோ எனது வழக்கமான்
குடும்ப வலைப்பதிவில் http://menakasury.blogspot.comஇதில் எல்லாமே சங்கமம்...spirutual and mundane இடுகிறேன்
சற்று நேரத்தில் பார்க்கலாம். கேட்கலாம்.

சுப்பு ரத்தினம்.

Geetha Sambasivam said...

Comments on this blog are restricted to team members.
You're currently logged in as கீதா சாம்பசிவம். You may not comment with this account.//

உங்களோட அந்தக் குறிப்பிட்ட பதிவில் உபந்நியாசமும் கேட்கமுடியலை, உங்க அநுமதி வேணும், இது சொந்த வீடியோனு துரத்திடுச்சு, பின்னூட்டம் போட்டால் மேலே கண்ட பதில் தான் வந்தது. பின்னூட்டமும் ஏத்துக்கலை! :))))))))))))))))))

sury siva said...

கேட்டுவிட்டீர்களா இப்பொழுது ? சரி செய்துவிட்டேன்.
வீடியோ அப்லோடு செய்யும்பொழுது ப்ரைவேட் என்னும் பட்டனை டிஸேபிள் செய்யவேண்டும்.
அதை மறந்ததால், வந்த வினை.

இந்தத் தொடர் எனக்கு மிகவும் மன நிறைவினைத் தருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Geetha Sambasivam said...

நாளைக்குத் தான் கேட்கணும், மின்சாரம் இல்லை. அதனால் கேட்க முடியலை, நாளைக்கு ரெண்டு பேருமே கேட்டுட்டுப் பின்னூட்டமும் போடறேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கிறதுனு தெரிஞ்சு மிகவும் மகிழ்ச்சி, நன்றி.

Geetha Sambasivam said...

adobe flash player install panninen. appadiyum ketka mudiyalai. virus problem computerle irunthathu. O.S ippoo than re install panninen. appadiyum ketka mudiyalai, ennanu puriyalai, yaraiyavathu ketu parkiren. :((((((( sound than jasthiya varuthu. athai kuraicha onnume varalai!