
அடுத்து நாம் காணப் போவது இந்த உலகையே தன் ஆட்டத்தால் ஆட்டி வைக்கும் ஈசனின் பிச்சை எடுக்கும் கோலம்.
பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”//
என்று திருமூலர் தம் திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்தில் இறைவனின் பிட்சாடனத் திருக்கோலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.
தாருகாவனத்து முனிவர்கள் தத்தம் மனைவியரோடு கூடி கடுந்தவம் செய்து வந்தனர். தவங்களால் பல சித்திகளையும் பெற்றனர். அளப்பரிய ஆற்றலையும் பெற்றனர். தாம் தவங்கள் செய்து பெற்ற ஆற்றலால் ஆணவம் அதிகம் ஆகியது முனிவர்களுக்கு. ஈசன் அருளாலேயே இவை கிடைத்தன என்பதையும் மறந்து, ஈசனையும் மறந்து, தம் தவமே சிறந்தது, தம் ஆற்றலே சிறந்தது, தாமே அனைத்திலும் வல்லவர்கள் என்னும் எண்ணம் மேலோங்கியது. செருக்கு அடைந்த அவர்களுக்குப் புத்தி புகட்ட ஈசன் நினைத்தார். உடனே போடப் பட்டது ஒரு கலந்து உரையாடல் கைலையில். கலந்து உரையாடியது ஈசனும், சாட்சாத் மகாவிஷ்ணுவும்தான். என்ன உரையாடினார்கள்?? தாருகாவனத்து முனிவர்களின் கொட்டத்தை எப்படி அடக்கவேண்டும் என்பது பற்றியேக் கலந்து பேசிக் கொண்டனர். அந்தப் படிக்கு ஈசன் ஒரு அழகான இளம் வாலிபனாக மாறினார். அரையிலே பாவம், அந்தப் பித்தனான பிச்சைக்காரனுக்கு ஆடை இல்லை. நிர்வாணக் கோலம். பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் வந்த கபாலம் கையில் திருவோடாக மாறிக் காட்சி அளிக்கின்றது. பக்கத்தில்?? உமை அம்மை எங்கே?? இந்தப் பிச்சைக்காரக் கோலத்தைக் கண்டு பயந்து ஓடிவிட்டாளா என்ன?? இல்லை, இல்லை எங்கேயும் போகவில்லை, தன் பதியும், சோதரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றாள். தொப்புழ் வரையில் நீண்டிருந்த இடக்கையில் பிச்சைப் பாத்திரமாய்க் கபாலமும், வலக்கரத்தில் புல்லும் ஏந்திக் கொண்டு பிச்சை எடுக்கக் கிளம்புகின்றார், அனைவருக்கும் படியளக்கும் அண்ணல்.

பர்த்தாக்களுக்கு ஏற்ற பத்தினிமாராகச் செருக்குடன் தான் இருந்தனர் முனிவர்களின் பத்தினியரும். இந்த அழகர் அங்கே போய்ப் பிச்சைக்கு நின்றாரோ இல்லையோ, இவர் யார்? எங்கிருந்து வந்தார்?? பிச்சை ஏன் எடுக்கின்றார் என்பதெல்லாம் மறந்துவிட்டது ரிஷிபத்தினிகளுக்கு. வந்தவர் அழகில் அனைவரும் மயங்கினர். தங்கள் வீட்டு வேலைகளை மறந்தனர். தாம் யார் என்பதையும் மறந்தனர். அனைத்தும் மறந்து அந்தப் பிச்சைக்காரரைச் சென்று அருகில் பார்த்து மயங்கி நின்றனர். இது தான் சமயம் என வந்த பிச்சைக்காரன் அங்கிருந்து நகர முற்பட, ரிஷிபத்தினிகளும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு தம் ஆடைகள் குலைவதையும் நினையாமல் அவர் பின்னே செல்கின்றனர்.


திடீரென அந்தப் பெண் அங்கிருந்து செல்ல ஆரம்பிக்க ரிஷிகளும் பின் தொடர, அவர்களுக்கு முன்னால் ரிஷிபத்தினிகள் ஓடுவதையும், ரிஷி பத்தினிகளுக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரன் அதிரூப லாவண்யத்துடன் செல்லுவதையும் கண்டதுமே அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. உடனேயே தங்கள் தவற்றை உணர்ந்த அவர்கள் அந்தப் பிச்சைக்காரனை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆபிசார வேள்வி ஒன்றைத் துவங்குகின்றனர். அந்த வேள்வியில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என்னும் அசுரன் போன்றவர்கள் வர ஒவ்வொருவராய் பிட்சாடனர் மேல் ஏவினார்கள் தாருகாவனத்து ரிஷிகள். பாம்புகளை அணிகலனாய் அணிந்து கொண்டார் எம்பெருமான். விலங்குகளைக் கொன்று அவற்றின் தோலை ஆடையாக அணிந்து கொள்கின்றார். இனி மிச்சம் இருப்பது முயலகன் ஒருவனே. அவனையும் தம் திருவடியின் கீழ் போட்டு மிதிக்கின்றார். அவன் ஆணவம் அழிய, ரிஷிகளின் ஆணவமும் அழிந்து உண்மையை உணர்ந்து வந்தவர் சர்வேசன் என்பதை அறிந்து கொள்ளுகின்றனர்.
இந்தப் பிட்சாடனத் திருக்கோலம் காலம் செல்லச் செல்லக் கொஞ்சம், கொஞ்சம் மாறுபட்ட நிலைகளில் காண முடிகின்றது. வலக்காலை முன்னே எடுத்து வைத்து நடக்கும் கோலத்தில், இடக்கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்துடனும், காட்சி அளிக்கும் இவரின் வலக்கையில் உள்ள புல்லை ஒரு மான் தின்னும் கோலத்திலும் பார்க்கலாம். இடக்கரங்களில் திரிசூலம், உடுக்கை , பாம்பு ஏந்தியும் ஆடையாகப் பாம்பையே அரையில் அணிந்த வண்ணமும் தலையில் ஜடாமுடியுடனும், வலக்காலில் வீரக் கழல்களுடனும் காட்சி அளிக்கின்றார். வேதங்களைப் பாதுகையாக அணிந்த வண்ணமும், பாதச் சிலம்புகள் ஆகமங்களாகவும், பாம்புகள் யோகசாதனையின் குறியீடுகளாகவும் உள்ளன. இந்த பிட்சாடனரின் மற்றொரு கோலம் கஜசம்ஹார மூர்த்தியாகக் காண முடியும்.
13 comments:
ஸ்ரீரங்கம் பக்கத்துல உத்தமர் கோவில் ல தானே பிக்ஷாடனர்?ப்ரம்மன் தலையை கிள்ளி அது கையில ஒட்டிண்டு போகாம ப்ரம்மஹத்தி வந்து அது போக பிட்சையாண்டியா பிச்சை எடுத்து பாத்திரத்துல பிச்சை தங்காம பசியால இங்க வந்து பூர்ணவல்லி தாயர் சாதம் போட சாப்பிட்டு பசி போறதுனு கேட்டிருக்கேன். அதுக்கப்புறம் அந்த உத்தியை இவா கிட்டையும் மச்சினன் துணையோட பண்ணறார்போல இருக்கு!! திருமூலர் பாட்டு எத்தனை பொருள் மிகுந்தது இல்லையா!!
MIKA NALLA MURAIYIL KUURIYATHARKKU NANTRI PALA !
மோகினிக்கு ஸ்ரீரங்கம் மோகினி அலங்காரம் அருமை. இந்த பிச்சையாண்டவருக்கு காரைக்காலில் ஆனி பௌர்ணமியன்று அருமையாக மாங்கனித்திருவிழா நடக்கும். ஐயனின் அழகை என்னவென்று சொல்ல. எவ்வளவு நேரமானாலும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.
பிரம்மோற்சவ காலங்களில் ஒன்பதாம் நாள் மாலை பிக்ஷாடணர் உற்சவம் நடக்கும்.
முதன் முதலில் ஐயன் மோகினி காண ஆனந்த தாண்டவம் ஆடி அருளினார், அதை தில்லையில் இன்றும் ஆடிக்கொண்டிருக்கிறார் நாம் எல்லோரும் உய்ய.
திருநெல்வேலி நகர்த்து நெல்லை அப்பர் காந்திமதி கோவில் ஆணி மாத திருநாளில், ஏழாம் திருநாள் அன்று கங்காள நாதர் (கங்கையை படைத்த /அணிந்த சிவன்) பிச்சை பாத்திரம் வைத்து கொண்டு வருவார்.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
மிக அருமையான பதிவு.பிக்ஷாடனர் பற்றிய மேலும் பல தகவல்களையும் இணைத்திருக்கலாம்.தாருகாவனம் என்பது எங்கே இருக்கிறது?ஆபிசார வேள்வியை ரிஷிகள் செய்யலாமா?செய்யலாம் எனில் அவர்களை அசுரர்கள் துன்புருத்தியபோது இம்முறையை ஏன் கடைபிடிக்கவில்லை?
வாங்க ஜெயஸ்ரீ, நீங்க சொல்வது சரி, உத்தமர் கோயிலில் தான் பிக்ஷாடனர், என்றாலும் பல ஊர்களும் சொல்றாங்க. உத்தமர் கோயில் போக வாய்ப்புக் கிடைக்கலை இன்னும். திருமூலரிலே கிடைக்காததும் உண்டா?? பிக்ஷா விதி என்னும் தலைப்பிலே மேற்கண்ட பாடல்கள் கிடைக்கும். தினமும் ஒருமுறையாவது திருமந்திரத்தில் ஏதாவது ஒரு தலைப்பிலே பாடல்கள் படிச்சுடுவேன். நன்றி உங்கள் கருத்துக்கு.
lcnathan, வரவுக்கும் கருத்துக்கும், நன்றிங்க.
வாங்க கைலாஷி ஐயா, மோகினியை உங்க கிட்டே இருந்து தான் என் கிட்டே அழைத்து வந்தேன். கேட்டிருக்கணும், தோணலை, மன்னிக்கவும். அருமையான படத்தை இட்டிருக்கிறீர்கள். காரைக்கால் உற்சவம் பற்றி இப்போது அறிந்து கொண்டேன். மாங்கனித் திருவிழா தான் தெரியும்.
வாங்க ராம்ஜி, திருநெல்வேலி பற்றிய தகவல்களுக்கும் நன்றிப்பா.
வாங்க ஆதிசைவரே, முடிந்த வரையிலும் தகவல்கள் கொடுக்க முயல்கிறேன். முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
APPO PITCHADANAR PAKKATHULA KULLAMA THALAI MELA THATTU VACHUKITTU NIRKIRAVAR YAAR?
பிட்சாடனர் கதை இது வரை பிட்டு பிட்டாதான் தெரிஞ்சு வச்சிருந்தேன். இன்னிக்குதான் ஒழுங்கா தெரிஞ்சுகிட்டேன்! நன்றி அம்மா.
சிவ சிவ
ஈசனுக்கு எப்படி தோசம் வரும்? அவர் இறைவர்.தவறாகப் பதிவிடாதீர்கள். 7ம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார்,திருமுருகன் பூண்டி தேவாரம். 'இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு' இசுக்கு: ஆணவம். பயிக்கம்: பலி.
அவர் பிரம்மாவின் தலையைக் கொய்ததே, ஆணவத்தை நீக்கத்தான். அவர் போக்கிலன் வரவிலன். சேர்ந்து அறியாக் கையான்.
Post a Comment