எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Monday, November 29, 2010
அண்ணாமலைக்கு அரோஹரா! 2
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
அருணாசலேஸ்வரர் கோயில் ஐந்து பிராகாரங்களோடு இருந்தாலும் மாடவீதியும் கிரிவலப் பாதையும் இரண்டு பிரஹாரமாய்க் கணக்கெடுத்துக்கொள்ளப் படுகிறது. கிரிவலப் பாதையில் யாரும் கால்களுக்குச் செருப்புப்போட்டுக்கொண்டு நடப்பதில்லை. கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரியும். கருவறை பல்லவர் காலத்திலேயே அமைக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. கோபுரங்கள் ஒன்பது உள்ளன. அருணகிரிநாதர் கிளி உருவில் காட்சி அளித்த கோபுரம் கிளி கோபுரம் என்றே அழைக்கப் படுகிறது. இதைத் தவிர மற்ற கோபுரங்கள் பெரிய கோபுரம், கிட்டி கோபுரம், அம்மணி அம்மாள் என்பவர் கட்டிய அம்மணி அம்மாள் கோபுரம், வடக்குக் கட்டை கோபுரம், மேலக்கோபுரம் (இதைப் பேய்க் கோபுரம் என்கின்றனர்) மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்சன கோபுரம்(தெற்கு கோபுரம் இப்படி வழங்கப் படுகிறது) வல்லாள ராஜா கோபுரம்(போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் கட்டியது) இந்த வாசலே வல்லாளன் திருவாசல் என அழைக்கப் படுகிறது. கிழக்குக் கோபுரம் 216 அடி உயரத்துடனும் 11 நிலைகளுடனும் காட்சி அளிக்கிறது.
இதைத் தவிரவும் கோயிலில் அநேக மண்டபங்களும் இருக்கின்றன. அவை தீர்த்தவாரி நடக்கும் தீர்த்தவாரி மண்டபம், ஞானப்பால் மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உருத்ராக்ஷ மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை. திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானம் செப்பால் ஓடு வேயப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தூண்கள் அழகிய வேலைப்பாடுகளோடும், ஓவியங்களும் நிறைந்த மண்டபம். பார்க்க ஒரு நாளாவது வேண்டும். :( பிராகாரங்களின் மதில்கள் உயரமாய்க் குறைந்தது முப்பது அடி உயரத்துடன் காட்சி அளிக்கின்றன. அகலமே நிறைய இருக்கும்போல் தெரிகிறது. இந்த மதில்கள் மூலவரின் திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ளன. இவற்றில் மேற்கு மதில் ஆதித்திய சோழனாலும், பின்னர் அவன் மைந்தன் முதலாம் பராந்தக சோழனாலும், கிழக்குச் சுவர் உத்தம சோழனாலும் கட்டப்பட்டவை எனத் தெரிய வருகிறது. கருவறைக்குள் நுழையும் வாசலே உத்தம சோழன் பெயரால் அழைக்கப் படுகிறது. கருவறைக்குள் உத்தமசோழனின் சிற்பமும் இருக்கிறதாய்த் தெரிய வருகிறது. இந்தத் தகவல் முன் கூட்டியே தெரியாது என்பதால் நாங்க தேடிப் பார்க்கலை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிழக்கு வாயிலின் வலப்பக்கம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் மற்றக் கோயில் மண்டபங்கள் போல் இல்லாமல் சரியாக ஆயிரம் தூண்கள் உள்ளதாயும் தெரிவிக்கின்றனர்.
வல்லாள கோபுரத்தில் வல்லாளனின் சிலை இருப்பதாயும் கூறினார்கள். அண்ணாந்து பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வல்லாளனுக்காக ஈசனே குழந்தையாக வந்து ஈமக்கடன்களைச் செய்வதாயும் ஐதீகம். அந்த வரலாறு வருமாறு:
குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா, இறைவனை வேண்டினார். ஒரு நாள் அண்ணாமலையாரே சிவனடியார் உருவில் அரண்மனைக்கு வந்தார். தன்னுடன் தினம் ஒரு பெண் தங்க வேண்டும் என்றும், அன்றிரவு தங்கப் பெண்ணே கிடைக்கவில்லை என்றும் கூறி மன்னனைக் கேட்கிறார். கோயிலில் தேவதாசியர்கள் இல்லாமையாலும், மற்றப் பெண்களை அனுப்ப மனமில்லாமையாலும் தன் மனைவியான சல்லாமா தேவியையே அந்தச் சிவனடியாரிடம் அனுப்பி வைக்கிறான் வல்லாள ராஜன். சல்லாமா தேவி உள்ளே சென்றதுமே சிவனடியார் மறைந்து ஒரு பச்சிளம் குழந்தை இருக்கிறது. திகைத்த தேவி தன் கணவனிடம் சொல்ல, அண்ணாமலையார் ரிஷபாரூடராய்க் காட்சி அளிக்கிறார். மன்னனுக்குத் தாமே குழந்தையாக வந்து இறுதிக்கடன்களை நிறைவேற்றுவதாய் வாக்கும் கொடுத்து மறைகிறார்.
இதனால் ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அண்ணாமலையார் அருகிலுள்ள, "கொண்டப்பட்டு" என்னும் கிராமத்துக்கு எழுந்தருளி, வல்லாள ராஜாவுக்கு உத்தரகிரியைநடத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் நடராஜப் பெருமானின் செப்பு விக்ரஹம் காணப்படுகிறது. அதை ஒட்டி இருக்கும் அறைகள் ஈசனின் அணிகலன்கள், ஆடைகள், பொக்கிஷ அறை போன்றவை ஆகும். இங்குள்ள கல்லால் ஆன சங்கிலித் தூண் அருகே இருந்து சுரங்கப்பாதை ஒன்று மலையை ஊடுருவிச் செல்வதாய் ஒரு கருத்து உண்டு. கிளி கோபுரத்தின் தெற்கே இருக்கும் விநாயகர் யானையாக வந்து கொடுங்கோல் அரசன் ஒருவனை மிரட்டியதாயும் செவிவழிச் செய்திகள் உண்டு. கிளி கோபுரத்துக்கு அடுத்துக் காணப்படும் மண்டபம், மங்கையர்க்கரசி என்பவரால் கட்டப்பட்டது. இங்கு மலைமீது தீபம் ஏற்றும்போது உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுவது வழக்கம்.
கிளி கோபுரத்திற்கு எதிரே நந்தி மண்டபம். மண்டபம் வல்லாள ராஜாவால் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சின்ன மண்ட்டபத்தில் அண்ணாமலையார் யோகி உருவில் சூக்ஷ்ம வடிவில் உறைவதாகவும், இங்கு அமர்ந்து ஆழ்நிலைத் தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்பதும் ஐதீகம். சிவகங்கைக்குளத்துக்கு அருகே கம்பத்து இளையனார் சந்நிதியில் முருகன் வில்லேந்திய கோலத்தில் காட்சி கொடுக்கிறான். அருணகிரிநாதருக்காக பிரெளட தேவராயன் என்பவனுக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் இது என்கின்றார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பக்கம் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பகவான் ஸ்ரீ ரமணர் பலகாலம் இங்கே தங்கி தவம் இருந்ததைக் கூறும் இந்தச் சந்நிதி "பரோசா தலையார் காண்" என்ற வெளி நாட்டுப் பெண்மணியால் அவர் தலைமையில் புநர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 1949-ம் வருஷம் அப்போதை கவர்னர்ஜெனரல் ஸ்ரீராஜாஜி அவர்களால் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 108-க்கும் மேல் கல்வெட்டுக்கள் உள்ள இந்தக் கோயிலில் பரத சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணத்தை விளக்கும் நாட்டிய நிலைகள் 108-ஐயும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
தொடருங்கள் பல புதிய தகவல்கள்
பாதாள லிங்கம் சன்னிதி எனக்கு ரொம்ப பிடிச்சது.அந்த இடத்தின் அமைதி தனி தான்.
வாங்க எல்கே, நன்றி.
வாங்க ஜெயஸ்ரீ, எல்லாருக்குமே அந்த இடம் பிடிச்சிருக்குத் தான்! :))))
என்ன மிஸஸ் சிவம் மழை அம்பத்தூரில் கடுமையா இப்பவும்? ரோடு போட்டாளா இல்லை மறுபடி puddles ஆ. உங்களையும் brother திவா வையும் நினைத்துக்கொண்டேன் கடலூரிலும் ரொம்ப மோசம் போல இருக்கு. பாவம் ஜனங்க!! மழை வேணும் தான். வருண பகவானுக்கும் "மேச்சா மாமியாரை மேய்ப்பேன் இல்லைனா பரதேசம் போவேன் " போல இருக்கு :(( இங்க ஓஞ்சிருந்ததுன்னு நினைச்சிருந்து சந்தோஷப்பட்டிருந்தோம் , பூமாக்கு பொருக்கல, ஒரு தூக்கிவாரி போட்டாங்க அந்தம்மா இன்னைக்கு :(( அளவு சின்னதானாலும் ஆட்டம் பலமாத்தான் இருந்தது!!சீக்கிரம் மழை நின்னு ஜனங்களுக்கு கஷ்ட்டம் இல்லாம நல்ல படியா ஆக வேண்டிக்கறேன்
ஓ ஜெயஸ்ரீ அக்கா! எபப்டி இருக்கீங்க? கடலூரிலே சூரியனை பாத்து 15 நால் ஆச்சு! தின்மும் மழைதான். கிணத்துல தண்னி ரொம்ப நாளா கையால சொம்பிலே சேந்தரா மாதிரி இருக்கு. இனிமே பூமி உரிஞ்ச முடியாதாகையால் எங்கும் வெள்ளம்தான்! ஒரு வழியா இன்னிக்கு ஓஞ்சு இருக்கு. ஏழை பாழைகளுக்கு எல்லாம் கஷ்டம்தான். :-(
அம்பத்தூர் என்னிக்குமே ஐலன்ட் தான்! :-))com
வாங்க ஜெயஸ்ரீ, மழை கடுமையாத் தான் இருக்கு. அப்படி இப்படி சண்டை போட்டு சாலையைப் பராமரிக்கச் சொன்னதாலே வீட்டு வாசல்லே எப்போவும் நிக்கும் முழங்கால் ஜலம் இந்த வருஷம் இல்லை. ஆனால் தண்ணீர் இன்னமும் ஓடிண்டு இருக்கு. சனிக்கிழமை ராத்திரியும், முந்தாநாள் ஞாயிறு அன்றும் ஆரம்பித்து நேற்று வரை பெய்த மழையில் வீட்டைச் சுத்திக் குளம்போல் தண்ணீர். படுக்கை அறை இரண்டுக்கும் ஒரு மயிரிழைத் தண்ணீர் கூடப்போயிருந்தால் கூட உள்ளே நுழைந்திருக்கும்! :(((( மத்தியானம் ஒரு மணி நேரம் மழை நின்னது. ராத்திரிக்கு அப்புறமா மழை இல்லையோ, பிழைச்சோம். மற்றபடி வழக்கம்போல்,எலி, பூனை, நண்டு, நத்தைனு எல்லாம் வந்து குடி இருக்கு. :)))))))சிறுபாம்புக்குட்டிகள் கூடவே குளிக்க வந்துடுதுங்க. பெரிய சுப்புக்குட்டியைத் தான் கண்ணிலேயே காணோம். தினம் ஒரு சிறுபாம்பை எடுத்து வெளியே விடறோம். மெல்லிசா இருக்கா எப்படியோ உள்ளே வருது.
வாங்க திவா, அதிசயமா இருக்கு??? :P
//ஏழை பாழைகளுக்கு எல்லாம் கஷ்டம்தான். :-(
அம்பத்தூர் என்னிக்குமே ஐலன்ட் தான்! :-))com//
க்ர்ர்ர்ர்ர்ர், உங்க கடலூர் மட்டும் என்னவாம்??? :P:P:P:P
மறந்துட்டேனே ஜெயஸ்ரீ, இப்போ ஒண்ணும் பாதிப்பு இல்லையே?? துளசி வேறே நியூசியில் ஏதோ விபத்துனு எழுதி இருந்தாங்க. முழு விபரமும் படிக்கலை. எல்லாம் நல்லபடியாய் இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
இருபத்துஒன்பது வாலிபர்கள் உயிரோடு எரிஞ்சுபோன துக்கம் மைனிங்க் ஆக்ஸிடென்ட்ல. வயிதெரிச்சலா துக்கமா வந்தது பாவம் என்ன கனவுகளோ!! 18 தேதி அதில போன ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண் அழுதது கஷ்ட்டமா இருந்தது, ஒரு developed country நு பீத்திக்கறா, safety issues கவனமா இருந்து , bunkers வெச்சிருக்க வேண்டாமானு ரொம்ப கோவமா வந்தது(( என்னமோ பொழுது விடிஞ்சா இந்த மாதிரி ந்யூஸ் தான் எப்பவும். இன்னிக்கி கார்த்தால கொரியன் ஒரு பொண்ணோட அழுகை அங்க நடக்கற சண்டைல பாதிக்க பட்டவ பாவம்.
Post a Comment