நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞாநிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப்பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும் திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞாந நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞாந நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக்கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக்கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச்சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை.
தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞாநசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக்குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர்.
கார்த்திகை தீபம் நெருங்கிவிட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டுவிட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக்கொள்ளவும். நன்றி.
10 comments:
விதூஷின் அருணாச்சல மகாத்மியம் மொழிபெயர்ப்பு படித்தேன். இப்பொழுது உங்கள் தொடரா? விருந்துதான்.. தொடருங்கள்
கற்பக விருட்சம் போல ஆன்மீகச் செய்திகளையும் கதைகளையும் அள்ளி அள்ளித் தருகிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது கீதாம்மா. ரொம்ம்ம்ப மெதுவாகத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன்.
நன்றி எல்கே, விதூஷின் அருணாசல மஹாத்மியம் பக்கம் கூடப் போகலை. எங்கேயானும் அதன் சாயல் வந்துடுமோனு பயம்! :))))))))
வாங்க கவிநயா, நீங்க மீண்டும் வர ஆரம்பிச்சிருப்பது குறித்து சந்தோஷம், பாராட்டுக்கு நன்றிம்மா.
தருணா ருணமணி கிரணா வலிநிகர் தரும க்ஷரமண மகிழ் மாலை
தெருணா டியதிரு வடியார் தெரு மரல் தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு மாழ்வார் சிவனுல காள்வாரே.
-ரமணரின் அருணாசல அக்ஷர மண மாலை பாயிரம் போன வருஷத்துக்கு முந்தின வருஷம் கார்திகை பௌர்ணமி கிரி வலம் கிடைத்தது . நினைத்துக்கொண்டு நன்றி சொன்னேன். அர்ணாசலமா சொல்லுங்கோ சொல்லுங்கோ !!
தகவல்களை அளித்தமைக்கு நன்றி..
வணக்கம். என் பெயர் செ.மாதவன். நானும் சிவ பக்தன் தான். உங்கள் எழுத்துக்களை கண்டு மெய் சிலிர்த்தோம். அடியேனும் ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளோம்.
இத்தளம் சித்தர்களை பற்றி எடுத்து கூறுவதாய் அமைந்துள்ளது.
http://www.puduvaisiththargal.com/
தயைகூர்ந்து என் தளத்தை பார்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.
வாங்க ஜெயஸ்ரீ, இந்தத் தொடரும் நாங்க திருவண்ணாமலை செல்ல முயற்சி செய்தாப்போல் நீண்ட நாட்கள் எடுத்துக்கும் போலிருக்கு!
சாமக்கோடங்கி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
ஆர்விகே கார்த்திக், மாதவன் இருவருக்கும் நன்றி. உங்கள் வலைப்பக்கத்தைப் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன். நன்றிங்க.
Post a Comment