எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Wednesday, April 13, 2011
நமசிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க, சுகாசன மூர்த்தி!
ஈசன் பிரணவப்பொருளின் ஸ்வரூபம் ஆவார். எல்லாவற்றுக்கும் மூலமான வித்து பிரணவமே ஆகும். மிக மிக சூக்ஷ்மம் நிறைந்த இந்தப் பிரணவம் உலகின் அனைத்து ரூபங்களிலும் வியாபித்து உள்ளது. இதை அறிந்தவர் பிரம்மத்தை அறிந்தவர் ஆவார் ; இதுவே பரப்பிரும்மம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பிரணவ மந்திரத்தை ஏகாக்ஷரம் எனவும் ஆதி மந்திரம் எனவும் அழைக்கின்றனர். அ+உ+ம இவை மூன்றும் சேர்ந்து உச்சரிக்கப்படுவதே பிரணவம் ஆகும். இதிலிருந்து வேதங்கள் தோன்றின. முதலெழுத்தான “அ”காரம் ரஜோகுணத்துடன் கூடிய நான்கு முக பிரம்மாவை சிருஷ்டி செய்யும். “உ”காரமோ சத்வ குணத்துடன் கூடிய விஷ்ணு ரூபமாகவும் பிரக்ருதி எனப்படும் யோனியாகத் தோன்றி இவ்வுலகைக் காக்கும். “ம”காரமானது தமோ குணத்துடன் ருத்ரனாகத் தோன்றி சம்ஹரிக்கும் தொழிலைச் செய்யும். இதன் பிந்துவே மஹேஸ்வர ரூபமாக மறைத்தல் என்னும் திரோபாவத்தைச் செய்கிறது. கடைசியில் தோன்றும் நாதமானது சதாசிவ மூர்த்தியாக எல்லாவற்றையும், அனுகிரஹம் செய்யும். இதுவே “நாத பிந்து கலாதி நமோ நம:” எனப்படும்.
இந்த அதி அற்புதமான பொருளைப் பூரணமாக அறிந்து கொள்ளவேண்டுமெனில் குருமூலம் தீக்ஷை பெற வேண்டும். மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம், ஆகியவற்றின் மூலமாயும், குரு சிஷ்யன் என்னும் உறவினாலும் அந்தப் பரம்பொருளின் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஈசனை “ஓம்” என்னும் ஏகாக்ஷர சொரூபியாகத் தியானிக்கவேண்டும். குருவை தியானித்து வணங்கி அவர் மூலம் உபதேசம் பெற்றுத் தூய்மையான இடத்தில் பிரணவத்தை உச்சரித்துப் பஞ்சாக்ஷரம் ஜெபித்துப் பின்னர் முறைப்படி பூஜைகள் செய்து ஐக்கிய அநுசந்தானத்தை அடையவேண்டும். மூன்றையும் சேர்த்து ஓம் என உச்சரித்தலின் மூலம் சிவனையும், சக்தியையும் சிவசக்தியரின் அருளையும் பெறலாம்.
மேற்கண்ட பிரணவப் பொருளின் தத்துவத்தை உமாதேவியார் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி ஈசன் சுகாசனத்தில் அமர்ந்து அன்னைக்கு உபதேசித்தார். சுகாசனம் என்பது இடக்காலை மடித்து வைத்துக்கொண்டு வலக்காலைத் தொங்க விட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் கோலத்தைக் குறிக்கும். இவரின் இடத்தொடையில் அமர்ந்திருக்கும் அம்பிகையை “தர்மார்த்த காம மோக்ஷ பிரதாயினி” என அழைக்கப் படுவாள். இவ்விதம் வேதங்களையும் ஆகமங்களையும் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தையே சுகாசன மூர்த்தி என்று சொல்கிறோம். பாடம் நடத்தியதோடு அல்லாமல் அம்பிகைக்குப் பரிக்ஷையும் வைத்தாராம் ஈசன். அது ஒரு திருவிளையாடல். தென் பாண்டிநாட்டில் நடந்தது. அனைத்து ரகசியங்களையும் உபதேசித்த ஈசன் அம்பிகையிடம் தான் கூறியவற்றைக் குறித்து விளக்கம் அளிக்கக் கேட்டாராம். அன்னையவளால் பதில் சொல்ல இயலவில்லை. ஆச்சரியமா இருக்கா? ஆம், நம்மை எல்லாம் அன்பால் அரவணைக்கும் அன்னைக்கு நாடகம் நடத்திப் புரிய வைக்கவேண்டி இருக்கும் எனத் தோன்றி இருக்கலாம்.
இல்லை எனில் ஓம் என்னும் மூல மந்திரத்தை அ+உ+ம் என உச்சரிக்காமல் வரிசையைச் சற்றே மாற்றி, உ+ம்+அ என உச்சரித்தால் நாம் பெறுவது உமா என்னும் சொல். இது சக்திப் பிரணவம் என அழைக்கப்படும். மந்திரங்களுக்கெல்லாம் ஆதார சக்தியாகவும், அக்ஷரங்களின் ரூபமாகவும் இருப்பவள் சர்வேஸ்வரியே. ஆகவே இது சக்திப் பிரணவம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட அவளுக்குத் தெரியாதா ஐயன் கூறியவற்றின் விளக்கம் ! எனினும் அம்பிகை விளக்கம் சொல்ல இயலாமல் தவிக்க ஐயன் அவளை பூலோகத்தில் ஒரு வேதியரின் மகளாய்ப் பிறந்து வேத ஆகமங்களைக் கற்றுக்கொண்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டார். உரிய காலத்தில் தாமே அவளை மணந்து கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார். அப்படி அதிர்ஷ்டம் செய்த ஊர் தென் பாண்டி நாட்டில் ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள திரு உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊர்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சிவன் பற்றிய இன்னுமொரு பதிவிற்கு மிகுந்த நன்றிகள் மாமி
இப்பத்தான் அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்து கூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அம்பலத்திலாடுமே" விளக்கம் எனக்கு புரியற மாதிரி எழுத சொல்லி கேட்க்கணும்னு இந்த பக்கத்தை திறந்தேன். புது பதிவு வந்திருக்கு:)) சரி இப்ப நான் கேட்டதுக்கும் சொல்லுங்களேன் "ந ம சி வா ய" எப்படி அறிந்து கூறணும்ங்கறார் சிவவாக்கியர்?
வாங்க ராம்ஜி யாஹூ, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், புரிந்து கொண்டு தான் சொல்லணும், சிலர் பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டாம்னும் சொல்றாங்க. ஒரு மாதிரியாப் புரிஞ்சாலும் நீங்க குரு மூலம் உபதேசம் பெறுவதே நல்லது. நமசிவாய என்பதே ஈசனின் வடிவம், நம் உடலின் ஒவ்வொரு ஆதாரமும் ஒவ்வொரு எழுத்து. இதை எழுதப் போனால் பெரிய அளவில் வரும் என்பதோடு இதெல்லாம் குரு மூலம் கேட்டுக்கறதே நல்லது. :))))))
சில சமயம் யோசிக்கிறச்சே தப்பாய்ப் புரிஞ்சுண்டு இருக்கோமோனும் தோணும், ஆனால் ஆதாரங்களைக் குறிப்பிடுகிறது என்பது வரை சரினு தோணுது. :)
பீஜமந்திரமாகிய ஓம் மூலம் உடலின் எல்லாச் சக்கரங்களுக்கும் உரிய எழுத்துக்களைத் திரட்டிக் கடைசியில் ஒன்று சேர்ப்பதைக் குறிக்கிறது என நம்புகிறேன்.ஆறு சக்கரங்களுக்கும் உள்ள பீஜ மந்திரமே ஓம் நமசிவாயா என்ற வரை கேள்விப் பட்டிருக்கேன். அதைத் திரட்டி உச்சியில் சஹஸ்ராரத்தை அடைவதன் மூலமே கந்தன் பிறப்பு என்பதையும் சொல்லிக் கேள்வி. இதைக்குறிக்கும் வண்ணமே முருகப்பெருமான் குன்றுதோறும் குடி இருப்பதாயும், ஆறு படைவீடுகளின் உட்பொருளும் இதுவே எனவும் படித்திருக்கிறேன். இது குறித்து இன்னும் ஆழமாகப் போகவில்லை. ஆனால் உங்க கேள்வி மட்டும் இன்னமும் மனதிலே சுற்றுகிறது. இப்படி அவ்வப்போது தோன்றுவதை எழுதுகிறேன். :)))))))
Post a Comment