தமிழ்நாட்டின் சங்கரன் கோயிலைத் தவிர கர்நாடகாவிலும் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் ஒன்று உண்டு. கர்நாடகா மாநிலம் தாவன்கெரே மாவட்டத்தில் ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது ஹரிஹர் என்னும் ஸ்தலம். பெங்களூரில் இருந்து சுமார் 300கி.மீட்டர் தூரத்திலுள்ள இத்தலத்தில் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராய்க் காட்சி அளிக்கிறார். சிவன் காட்சி தரும் வலப்பக்கம் உமை அன்னையும், திருமால் காட்சி அளிக்கும் இடப்பக்கம் ஸ்ரீலக்ஷ்மி தேவியும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்டது. இதைக் கூஹாரண்யம் என அழைத்ததாய்க் கேள்விப் படுகிறோம். இதைக் குறித்த ஒரு தலபுராணக் கதை கீழே.
கூஹாசுரன் கடும் தவத்தால் எவராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். இவனை சம்ஹாரம் செய்ய வேண்டி விஷ்ணுவோடு இணைந்த வடிவாக தோன்றி அசுரனை அழித்தாராம் ஈசன். ஆகவே இந்த ஊருக்கே ஹரிஹர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்கின்றனர். தக்ஷிண கைலாயம் எனப் பெயர் பெற்றிருக்கிறது இந்த ஊர். அதோடு சிவமோகா எனப்படும்ஷிமோகாவுக்கு அருகிலுள்ள கூடலி என்னும் ஊரில் துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆவதையும் துங்கை திருமாலின் அம்சம் எனவும் பத்ரா ஈசனின் அம்சம் எனவும் கூறுகின்றனர். சங்கரநாராயண அம்சமாகத் தோன்றும் திருமேனியில் வலப்பக்கம் சிவனாய்க் காட்சி அளிக்கும் பாகத்தில் முகம் நெற்றிக்கண்ணில் பாதியைக் கொண்டு உக்கிரமாயும், இடப்பக்கம் உள்ள திருமாலின் முகம் அதிசுந்தரமாக சாந்தமாகவும் காட்சி அளிக்கும். வலக்கரமோ மழுவைத் தாங்கியும், இடக்கரம் சங்கு, சக்கரத்தோடும் திகழும், அதே நேரம் சிவ பாகம் புலித்தோலை உடுத்து வெண்ணிறமாகவும், விஷ்ணு பாகம் கருநீல நிறத்தோடு மஞ்சள் பட்டாடை உடுத்தியும் காணப்படும்.
முன்னைப் பழம்பொருளுக்கும், மூத்த பழம்பொருளான பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவம் இருக்கின்றன. ஈசனிடமிருந்து அவரது அருளாய் வெளிப்படும் சக்தியின் புருஷாகார வடிவையே திருமால் என்கிறோம். ஆகவே சங்கரநாராயணர் உருவின் சிறப்பே ஹரியும், சிவனும் ஒன்று என்பதைக் குறிப்பது தான். இந்தத் திருவடிவின் வலப்பக்கம் வாகனமாய் ரிஷபமும், இடப்பக்கம் கருடனும் காணப்படும். இந்தச் சங்கரநாராயணர் திருக்கோலத்தைத் திருஞான சம்பந்தர் , “பாதியா உடல் கொண்டது மாலையே! மாலும் ஓர் பாகம் உடையார்” என்றெல்லாம் போற்றிப்பாட, அப்பரோ, “திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்” எனப் போற்றுகிறார். ஆழ்வார்களின் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் இந்த அரிய திருக்கோலத்தைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
திருமங்கையாழ்வார், “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து”, என ஆரம்பித்தும், மலைமங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்”, என்றும் பாட, பேயாழ்வாரோ, திருவேங்கடத்தின் பெருமானைச் சங்கரநாராயணராய்க் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
“தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.”
என்று கூறுகிறார் பேயாழ்வார்.
6 comments:
ரொம்ப அழகான கோவில். அங்கே 108 சிவலிங்கங்கள் கூட பார்த்த நினைவு.
சலசலன்னு ஆறு பாய்ஞ்சதும் லேசா நினைவு இருக்கு.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்னு அங்கே நடந்துச்சு. அந்த உணர்ச்சி வேகத்தில் அக்கம்பக்கம் சரியா பார்க்கலை:(
கீதா,
அருமையான விவரங்கள். உம்கள் ஆன்மீகப் பயணங்கள் தொடர நல் வாழ்த்துகள்.
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்..
சிவஞானம் கமழும் நல்லதொரு வலைப்பதிவை பார்வையிட வைத்த
குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றி.
அன்பன் சிவ.சி.மா.ஜா.
http://sivaayasivaa.blogspot.com
வாங்க துளசி, உங்களைப்பார்க்க முடிந்ததில் சந்தோஷம், உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தடை இல்லை எனில் பகிர்ந்து கொள்ளலாமே?
வாங்க வல்லி, வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க ஜானகிராமன், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment