எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 27, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, கிராத மூர்த்தி!


அடுத்து நாம் காணப் போவது கிராத மூர்த்தியை. கிராதன் என்ற சொல்லிற்கு வேடன் எனப் பொருள். ஈசன் வேடனாகக் காட்சி அளித்த கோலத்தையே கிராத மூர்த்தி அல்லது திருவேடீசர் என்கின்றனர். இது மஹாபாரதக் கதையுடன் தொடர்பு கொண்டது. பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசமும் முடிந்தாலும் கெளரவர்களுக்குப் பாண்டவர்களின் உரிமையைத் திரும்பக் கொடுக்க மனம் வரவில்லை. கண்டிப்பாய் மறுத்தனர். துரியோதனனின் இந்தப் பிடிவாதத்தால் தவிர்க்க இயலாது போர் உருவாகும் என்பதைப் பாண்டவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா எடுத்துச் சொன்னார். ஆகவே போருக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினார். முக்கியமாய் வில்லில் சிறந்த அர்ஜுனனை சர்வ வல்லமை பெற்ற சர்வேசுவரனிடமிருந்து இன்னும் அதிக வல்லமை பெற்று வர அறிவுறுத்தினார். ஈசனின் பாசுபத அஸ்திரத்தைத் தவம் இருந்து பெற்று வர வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்.

பாசுபத அஸ்திரத்தை ஈசனிடமிருந்து பெற்று வரும் வழிகளையும் விளக்கிக் கூறினார். அதன்படி திருக்கைலையில் இந்திரநீல பர்வதத்தின் சாரலில் அர்ஜுனன் நான்கு பக்கமும் அக்னியை மூட்டி ஆகாயத்தின் சூரியனை ஐந்தாவது அக்னியாக மனதில் வரித்துக் கொண்டு, கடும் தவம் செய்தான். பஞ்ச அக்னியின் நடுவே அவன் செய்த தவத்தால் ஏற்பட்ட உக்கிரம் அதிகமாக, அதிகமாக அர்ஜுனனிடமிருந்து ஜ்வாலைகள் வெளிப்பட்டன. ரிஷி, முனிவர்களால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஈசனிடம் சென்று அர்ஜுனனின் தவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஈசனுக்குத் தெரியாதா? எனினும் அர்ஜுனனுக்கு அவ்வளவு எளிதில் பாசுபத அஸ்திரத்தைக் கொடுக்க முடியுமா? அவனைச் சோதனை செய்ய எண்ணினார் சர்வேசன். ஆகவே வில்லையும், அம்புகளையும் ஏந்தி ஒரு வேடனாக மாறினார். கூடவே வேட்டுவச்சியாக அம்பிகையும் உடன் வர இந்திர நீல பர்வதச் சாரலில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே ஒரு காட்டுப் பன்றி ஒன்று அர்ஜுனன் மேல் பாயத் தயாராக ஓடோடி வந்தது.

பன்றி வேறு யாருமல்ல; மூகாசுரன் என்னும் அசுரன். அர்ஜுனனை எவ்வாறேனும் கொன்றுவிட்டால் பாண்டவர்களின் பலத்தை ஒடுக்கலாம் என எண்ணிப் பன்றி வடிவெடுத்துக் கொல்ல வந்தான். காட்டுப் பன்றியின் ஹூங்காரத்தால் தவம் கலைந்த அர்ஜுனன் கண் விழித்தான்; பன்றியின் மீது ஓர் அம்பைத் தொடுத்தான். அதே கணம் அங்கே வந்த ஈசனும் தன் வில்லில் இருந்து ஒரு பாணத்தைத் தொடுக்க, பன்றி இறந்து விழுந்தது. அதன் உடலில் இரு அம்புகள் இருப்பதைக் கண்ட அர்ஜுனனுக்கு வியப்பு. நிமிர்ந்து பார்த்தபோது வேட்டுவச்சி ஒருவளோடு ஒரு வேடன் நிற்பதைக் கண்டான்.

“நீ யாரப்பா வேடா? நான் அம்பெய்து வீழ்த்திய பன்றியை நீயும் ஏன் மீண்டும் இரண்டாம் முறையாக அம்பெய்து வீழ்த்தினாய்?” அர்ஜுனன் கேட்டான் வேடுவனாகிய ஈசனிடம்.

ஈசன், “ஆஹா, இது என்ன புதுக் கதை! நான் யாராய் இருந்தால் உனக்கென்னப்பா? நீ இங்கே இந்த நடுக்காட்டில் என்ன செய்கிறாய்? தவம் செய்கிறாயா?? தவம் செய்பவனுக்கு வேட்டை எதற்கு? இந்தப் பன்றி என் அம்பால் விழுந்தது. இது எனக்கே சொந்தம்; உனக்கல்ல. நீ பாட்டுக்குத் தவம் செய்ய மீண்டும் செல்வாய்!” என்றார் ஈசன்.


படம் சரியாக் கிடைக்கவில்லை. :(

5 comments:

Anonymous said...

Enna kodumai Sir.
Manaiviyudan vedan vettaikku vanthaanaa...

Agni zualai thavam saatharana pandriyin ugrathaal kalainthathaam.
:)
Sariyaana nadai... :))) arputham.

"Palaya kathai puthiya vilakkam"

Geetha Sambasivam said...

கடைக்குட்டி, மீண்டும் ஒருமுறை படித்தால் நலம். ஹூங்காரம் என்பதற்கும் உக்கிரம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஹூங்காரம் என்பது அதன் கர்ஜனைக் குரலைக் குறிப்பிடுவது. ஆழ்ந்த தவத்தில் இருந்த அர்ஜுனனின் தவமே கலையும் வண்ணம் குரலெடுத்துக் கத்தியது பன்றி. முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

இவ்வரலாறு தொடருமா ?

http://sivaayasivaa.blogspot.com

Geetha Sambasivam said...

திரு ஜானகிராமன், முடிக்கவே இல்லையே, கிராதமூர்த்தியின் வரலாறு தொடரும். நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தொடரும் என்ற வார்த்தையும் காணவில்லை..

நிறைவு பெற்ற மாதிரியும் தெரியவில்லை ..

எனவேதான் கேட்டேன்..
பிழையிருப்பின் பொறுத்தருள்க..

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com