எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 29, 2011

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சண்டேச அனுகிரஹமூர்த்தி!


சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும். சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். சர்வசங்காரப் படை என்றும் கூறுவர். சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது. காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது. இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது. வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான். உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான்.

வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான். அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான். இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது. வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான். பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான். பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான். பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது.

பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன். நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது. பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார். அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார். மகனைக் கண்டித்தார். ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை. தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார். அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை. தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார். எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது.

திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது. துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா! உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே! எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய். எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார். தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார்.


படம் நன்றி விஜய்

இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள். சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார். சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள். திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 521

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது. கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன. இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள். தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன்.

1 comment:

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.