எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, February 04, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனை முறை காவலில் போட்டிருந்தார்கள். அவன் இரவில் நின்றிருக்கையில் மீண்டும் மீண்டும் ஹேமலேகாவின் கதை தொடங்குவது அவனுக்குக் கேட்கும். அவள் குரலோடு யாழும் இணைந்து பாடத் தொடங்க அவனுக்கு உடனே அங்கே சென்று கதையைக் கேட்கும் ஆவல் தோன்றும். இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டுப் பொறுத்திருந்தவனால் மூன்றாம் நாள் பொறுத்திருக்க முடியவில்லை. மெல்ல நடந்து சென்று கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டு கதையைக் கேட்கத் தொடங்கினான். அப்போது அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால்! அங்கே ராணி கிருஷ்ணாயி தாயி நின்று கொண்டிருந்தாள். அவள் குலசேகரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இரு சேடிகள் அவளுக்குக் காவலாக நின்றனர். குலசேகரனையே பார்த்தவள் கோபத்துடன், "ஓஹோ! இது தான் நீங்கள் காவல் காக்கும் லட்சணமா? இதற்குத் தானா மன்னர் உங்களை எங்களுடன் அனுப்பி வைத்தார்?" என்று கோபமாகக் கேட்கக் குலசேகரனால் பதில் சொல்லவே முடியவில்லை.

தலைகுனிந்து பிரமிப்புடன் நின்றிருந்தவனைப் பார்த்து அவள், "இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காதது!" என்று கூறி விட்டு வெடுக்கென்று திரும்பிக் கொண்டு மேலே போய்விட்டாள். அவமானத்துடன் திரும்பிய குலசேகரன் மனம் வருந்தினான். நாலாம் நாள் இரவில் இரு பெரிய சத்திரங்களில் அனைவரும் தங்கினார்கள். அன்று கதை கேட்கப் போனபோது ஹேமலேகாவைப் பார்த்தது தான். அதன் பின்னர் குலசேகரனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. சத்திரத்துக்கு வெளியே திறந்த வெளியில் காவல் காத்துக் கொண்டிருந்த குலசேகரனுக்கு  ஹேமலேகாவும் அவளுடைய குளுமையான பார்வையும் அந்தப் பார்வையைக் கொண்ட பிரகாசமான கண்களும் மனதில் தோன்றின. அவள் கவர்ச்சியும் அழகும் ஆட்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்காது. மனதில் அமைதியையும் மரியாதையையும் தோற்றுவிக்கும் கவர்ச்சி. இப்படி எல்லாம் தன்னால் நினைக்க முடியுமா என எண்ணும்போதே குலசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கெனத் தனி வாழ்க்கை இனி ஏது என்னும் நினைப்பில் இருந்தவனுக்குள் இத்தகைய எண்ணங்கள் வாக்கையில் ஓர் பிடிப்பை ஏற்படுத்தின. பஞ்சு கொண்டானைப் போல் தானும் ஓர் நகரத்து அரையராக வாழ்க்கையில் கீர்த்தி பெற்று வாழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ஹேமலேகாவின் மேல் தனக்குக் காதலா? ம்ஹூம், இல்லை, இல்லை! அப்படி எல்லாம் இல்லை! தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் குலசேகரன். ஆம், ஆம், காதல் தான் என்றது இன்னொரு மனது! தான் அத்தகைய சின்னச் சின்ன இன்பங்களுக்கெல்லாம் எளிதில் ஆளாக மாட்டோம் என நம்பிக் கொண்டே தன் தலையை உலுக்கித் தான் ஹேமலேகாவைக் காதலிக்கவில்லை என்பதைத் தனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டான் குலசேகரன். எங்கிருந்தோ யாழின் ஓசை கேட்டது. மெல்ல மெல்ல யாழிசை அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. கூடவே ஹேமலேகாவின் குரலும் கேட்டது. சத்திரத்துக்குள்ளே இருந்து கேட்டதால் தன்னையும் அறியாமல் குலசேகரன் அந்தக் குரலைத் தொடர்ந்து சென்று சத்திரத்தின் வெளிப்புறத்தில் நின்ற வண்ணம் இசையை ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது சத்திரத்தின் பின் புறம் வழியாகச் சில கள்வர்கள் சத்திரத்தினுள் புகுந்தார்கள். இதைக் குலசேகரன் அறியவில்லை. உள்ளே புகுந்த கள்வர்கள் யாத்திரைக் குழுவினரின் பொருட்களை எல்லாம் உக்கிராண அறைக்குள்ளிருந்து அள்ளிக் கொண்டு பின்புறமாகவே ஓடினார்கள். அப்போது ஓர் பெட்டகம் தடால் எனக் கீழே விழுந்து சப்தத்தை ஏற்படுத்த யாத்திரிகர்கள், "திருடன், திருடன்!" எனக் கூவினார்கள்.  ஹேமலேகாவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசிக்குக் கோபம் வந்தது. இந்தக் காவலாளிகள் என்ன செய்கிறார்கள்? தூங்கி விட்டார்களா?  என்று நினைத்த வண்ணம் சத்திரத்தின் வெளியே வந்தாள். வீரர்களை அழைத்துக்கள்வரைத் தொடரும்படி ஆணையிட்டாள். அப்போது அங்கே ஆயுதங்கள் ஏதும் தரிக்காமல் நின்று கொண்டிருந்த குலசேகரன் அவள் கண்களில் படவே அவள் கோபம் எல்லை மீறியது!

"இரண்டாம் முறையாக உன்னைக் காவலில் இல்லாமல் பார்க்கிறேன்! இது தான் நீ முறை காவல் காக்கும் லட்சணமா?" என்று கோபத்துடன் கத்தினாள். அப்போது தான் ஏதோ நடந்திருக்கிறது என்பதையே குலசேகரன் உணர்ந்தான். தன் தவறை உணர்ந்தவனாக, "ராணி, இதோ, இதோ, வருகிறேன்!" என்றுகூறி விட்டுத் தன் கூடாரம் நோக்கி விரைந்தான். கவசம் அணியாத வெற்றுடம்புடன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு வந்த குலசேகரன், வீரர்களைத் தன்னைப் பின் தொடரும்படி கூறி விட்டுக் குதிரையில் ஏறி விரைவாகச் செலுத்தினான். பின்னர் சிறிது நேரத்துக்குள்ளாக ஆறு கள்வர்களையும் அவர்கள் திருடிய பொருட்களையும் ராணியின் முன்னே சமர்ப்பித்தான் குலசேகரன். கூடவே அவனுடைய வீரர்களும் இருந்தனர். கள்வர்களையும் குலசேகரனையும் கண்டு கடுமையாக விழித்த ராணி எல்லோரையும் விலங்கிட்டு வைக்குமாறு ஆணை இட்டாள்.

மறுநாள் சத்திரத்தின் முற்றத்தில் சபை கூடியது. ராணி தன் விசாரணையை ஆரம்பித்தாள். குறளனுக்கும் குலசேகரனுக்கும் உள்ளூற அச்சம். அரசி கள்வர்களை விசாரித்ததைக் கண்டு குலசேகரனுக்குள் கொஞ்சம் தைரியம் வந்தது. சபையைச் சுற்றிக் கண்களை ஓட விட்டவன் ஓர் ஓரமாக ஹேமலேகா நிற்பதைக் கண்டு விட்டான். அவன் கண்கள் அவளை விட்டு நகர மறுத்தன. அவள் பார்வையோ அவனிடம் இல்லை. அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா என ஏங்கினான் குலசேகரன். அவளோ திரும்பாமல் நின்றாள். ராணி விசாரணையை முடித்துவிட்டாள் என்பது அவள் தீர்ப்புக் கூறியதிலிருந்து தெரிந்தது. கள்வர்களின் கையையும் மூக்குகளையும் வெட்டிவிடும்படி கட்டளை இட்டாள். பின்னர் தன் மன ஆறுதலுக்காகச் சேடிகளை அழைத்து நாட்டியம் ஆடும்படி சைகை செய்தாள். குலசேகரன் என்ன செய்கிறான் என்பதையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.

அவன் ராணி இருக்கும் பக்கம் கூடத் திரும்பவில்லை. நாட்டியத்தை ரசித்தான். ஹேமலேகாவைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அவன் பார்வை அவள் பக்கமே சென்றது. ஒரு நிமிடம் அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஹேமலேகா அவள் கண்களை முழுதும் திறந்து அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள். அவள் விழிகளைக் கண்ட குலசேகரனின் பார்வை அந்த விழிகளின் வழியிலிருந்து மீள முடியாமல் தவித்தது. அதை ராணி கிருஷ்ணாயியும் கவனிக்காதவள் போலக் காட்டிக் கொண்டு நன்கு கவனித்துக்  கொண்டாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தமிழ்மணம் வழியாக வந்து படித்துச் செல்கிறேன்.