எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் சாமர்த்தியம்!

ராணி தான் போகப் போவதில்லை எனவும் அதற்குப் பதிலாக ஒரு பணிப்பெண்ணை ராணியாக்கி அனுப்பலாம் எனவும் யோசனை தெரிவித்தாள். தில்லி வீரர்கள் அவளைப் பார்த்ததில்லை என்பதால் ராணி என்றே நம்புவார்கள் என்றும் சொன்னாள். அரசர் அதற்கு இவ்விதம் செய்தால் அரங்கனை எவ்வாறு தப்புவிக்க முடியும் என்று கேட்டார். ராணி அதற்குப் பல்லக்கு கோஷ்டியை மதுரையைக் கடக்கும்போது அழகர் மலைப் பக்கம் செல்லுமாறு சொல்ல வேண்டும் எனவும் அப்போது அரங்கனின் பரிவாரத்தார் அரங்கனை ரகசியமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் சொன்னாள். மூடு பல்லக்கு ஒன்றில் அரங்கனை ஏற்றிவிட்டுப் பல்லக்குகள் எல்லாம் சந்தேகம் வராமல் இருக்க மதுரைக்கே போக வேண்டும் எனவும் சொன்னாள். மன்னரோ அது சரியாக வருமா, பல்லக்குகளைத் திறந்து பார்த்தால் என்ன செய்யறது எனக் கேட்டார்.

ராணி அதெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றவள் தில்லித் தளபதியின் மனைவிகளுக்கு ஹொய்சள ராணி பரிசுகள் அளிக்க விரும்புவதாக அறிவிக்க வேண்டும். அதைக் காரணம் காட்டியே மதுரையும் செல்ல வேண்டும். எல்லாப் பல்லக்குகளும் போக வேண்டும். அப்போது தான் சந்தேகம் வராது என்றவள் மதுரை வீதிகளில் இந்தப் பல்லக்குகளை நிறுத்தி அங்கே நிலவறையில் உள்ள பெண்களை எல்லாம் இரவோடு இரவாக ரகசியமாக  ஏற்றிக் கொள்ளவேண்டும். மறுநாள் காலையில் பல்லக்குகள் கிளம்பி மதுரையை விட்டே வெளியேறிவிட வேண்டும். மதுரையை விட்டுப் பல காதம் போன பின்னர் அந்தப் பெண்களை விடுவித்து அவரவர் விரும்பும் இடத்துக்குப் போகச் சொல்லலாம்." இதைக் கேட்ட மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். இதில் தவறு நடந்து விடுமோ என பயந்தார். வீரர்களை அனுப்புவதால் தவறு நடக்க வாய்ப்பில்லை என்ற ராணியிடம் தந்திரம் அம்பலமாகி விட்டால் பிரச்னை என்றார் மன்னர். ராணி வருவதை எதிர்கொள்ள வேண்டியது தான் ஒரே வழி, இப்போது தென்னாடு இருக்கும் நிலையில் நம் சௌகரியத்தையும் சுகத்தையும் பார்க்கக் கூடாது என்று வற்புறுத்தினாள். 

மன்னர் உள்ளூர யோசனையில் ஆழ்ந்தாலும் கவலைகள் பட்டாலும் ராணியின் விருப்பப்படி தான் நடந்தது. அடுத்த வாரமே 200 மூடு பல்லக்குகள் திருவண்ணாமலையை விட்டுக் கிளம்பின.  ஹொய்சளரின் சிங்கக் கொடியை ஏற்றிக் கொண்டு ஊழியர்களும், வீரர்களும் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்தனர். 20 வீரர்கள் பல்லக்குகளின் முன்னும் பின்னும் அணி வகுத்துச் சென்றனர். ராணி வேடத்தில் ஒரு பணிப்பெண்ணைப் பல்லக்கில் ஏற்றி இருந்தார்கள். அந்தப் பல்லக்கு நடுவில் இருந்தது. கிளம்புகையில் ராணி கிருஷ்ணாயி அந்தப் பல்லக்கின் அருகே வந்து தயங்கி நின்றாள். பின்னர் அந்தப் பெண்ணிடம், திறமையாக ராணியைப்போலவே நடிக்க வேண்டும் என்றாள். முத்திரை மோதிரங்களையும் ராஜ இலச்சினைகளையும் பத்திரமாக வைத்துக் கொண்டு தேவையான சமயங்களில் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்திவிட்டு எந்நிலையிலும் உண்மையைச் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அந்தப் பல்லக்கின் அருகே குலசேகரனும் ஓர் யாத்ரீகன் வேடத்தில் இருந்தான். அவனைப் பார்த்து மெல்லிய குரலில் அரங்கன் தெற்கே போனதும் குலசேகரன் கொடுத்த வாக்குறுதியின்படி அவன் திருவண்ணாமலை திரும்பியாக வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தினாள். குலசேகரனும் தலையை ஆட்டினான். பின்னர் அரசி வேறு பக்கம் சென்றதும் குலசேகரன் அந்தப் பெண்கள் கூட்டத்திடையே எப்படிச் செல்லப் போகிறோம் எனக் கவலையில் ஆழ்ந்த வண்ணம் சென்றான். அந்தக் கூட்டத்தில் புகுந்து எப்படியோ அபிலாஷினி இருப்பதையும் கண்டு பிடித்து விட்டான். அவளை அழைத்தான். அவளோ அவன் அபி எனக் கூப்பிட்டதை ரசிக்காமல் கோபம் கொண்டாள். குலசேகரனோ அவள் கோபத்தை லட்சியம் செய்யாமல் ஹேமலேகா வந்திருக்கிறாளா என்று கேட்டான். அவள் வரவில்லை என்றாள் அபிலாஷினி.

3 comments:

துரை செல்வராஜூ said...

ஆவலுடன் தொடர்கின்றேன்..

ஹரி ஓம் நமோ நாராயணாய...

நெல்லைத் தமிழன் said...

உங்கள் உழைப்பைக் கண்டு வியக்கிறேன்.

கதை நன்றாகச் செல்கிறது. இப்படி எல்லாம் எப்படித் திட்டமிட்டிருப்பார்கள் (கம்யூனிகேஷன், நாட்டு நடப்புலாம் எப்படித் தெரிந்திருக்கும்? ஆச்சர்யம்தான்) தொடருங்கள்.

Geetha Sambasivam said...

கருத்துச் சொன்ன இருவருக்கும் நன்றி.